கும்பமேளாவிற்கு சென்ற உ.பி பாஜக அமைச்சருக்கு கொரோனா.. தெரிந்தே கலந்து கொண்டாரா ?

உத்தரகாண்ட் ஹரித்வாரில் நடைபெறும் கும்பமேளாவில் கொரோனா நெறிமுறைகள் ஏதுமின்றி கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியையும், கண்டனத்தையும் பெற்றது. எனினும், உத்தரகாண்ட் அரசு கும்பமேளா கூட்டத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பதாக செய்திகளில் வெளியாகியது.
இந்நிலையில், கும்பமேளாவில் கலந்து கொண்ட உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சரான சுனில் பாரெலா என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை NDTV செய்தி கலந்துரையாடலின் போது சுனில் பாரெலா தெரிவித்தார்.
தி லாஜிக்கல் இந்தியா எனும் இணையதளத்தில், கொரோனா உறுதி செய்யப்பட்ட பிறகும் சுனில் பாரெலா கும்பமேளாவிற்கு சென்றதாக செய்தி வெளியிட்டது. பின்னர், கும்பமேளாவிற்கு முன்போ அல்லது கலந்து கொண்ட போதோ கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தெரியவில்லை என மறுத்து மன்னிப்பு தெரிவித்து இருந்தது.
The Logical Indian apologizes for the incorrect statement that claimed BJP leader Sunil Bharala attended Kumbh Mela while he was infected with COVID-19. pic.twitter.com/R1GdYEBmBN
— The Logical Indian (@LogicalIndians) April 16, 2021
இதேபோல், Reddit.com தளத்திலும் செய்தி பகிரப்பட்டு பின்பு நீக்கப்பட்டது. ஆனால், Reddit தளத்தில் வெளியான தலைப்பை வைத்து சமூக வலைதளங்களில் பாஜக எம்எல்ஏ கொரோனா இருப்பது அறிந்தும் கும்பமேளாவிற்கு சென்றதாக மீம்ஸ் பகிரத் துவங்கினர்.
சுனில் பாரெலா உதவியாளர் தி வயர் செய்திக்கு அளித்த தகவலில், ” கும்பமேளாவில் இருந்து திரும்பிய பின்னரே அவருக்கு கொரோனா சோதனையில் உறுதி செய்யப்பட்டதாகவும், அவர் அங்கு சென்ற போது கொரோனா பாசிட்டிவ் இல்லை என்றும் தெரிவித்தார். அமைச்சர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அவர் கும்பமேளாவிற்கு சென்றிருந்தார் மற்றும் அவருக்கு கோவிட்-19 இருப்பதாக என இரண்டு விசயங்களைச் சொன்னார். ஆனால் ஊடகங்கள் அதைக் கலந்து விட்டனர் ” எனக் கூறியதாக வெளியாகி இருக்கிறது.
NDTV விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக அமைச்சர் சுனில் பாரெலா, ” கோவிட் நிலைமை சரியாக இல்லை. ஆனால், மார்கஸ் மற்றும் கும்பமேளாவை இணைத்து பேசுவது தவறானது. ஹரித்வாரில் அனைத்து கோவிட் வழிமுறைகளும் பின்பற்றப்படுகிறது ” என பேசியதாக செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் விவாத வீடியோவுடன் பகிரப்பட்டது.
#कुंभ की आस्था, कोरोना से बहुत बड़ी है, गंगा माँ ही इस #कोरोना_वायरस का सर्वनाश करेगी।@ndtvindia @sanket @2021mahakumbh #Live https://t.co/uYZiSvE2UC
— Pt Sunil Bharala (@sunilbharala) April 15, 2021
” கும்பமேளாவின் நம்பிக்கை கொரோனாவை விட மிகப் பெரியது, கங்கை தாய் இந்த கொரோனா வைரஸை அழிப்பார் ” என NDTV விவாத வீடியோவை சுனில் பாரெலா ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.
கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கம் தொடங்கிய தருணத்தில் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் கொரோனாவை திட்டமிட்டு பரப்புவதாக தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அது தொடர்பாக பல்வேறு வதந்திகளும் இந்திய அளவில் பரப்பப்பட்டது. ஆனால், தற்போது கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதை ஏன் பெரிதாக பேசவில்லை என இரண்டையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.