கோமியம் குடிப்பதால் கொரோனா வராது என்ற பாஜக எம்பி சாத்வி பிரக்யாவிற்கு கொரோனா !

பாஜகவின் போபால் நாடாளுமன்ற உறுப்பினரும், சர்ச்சைக்கு பெயர்போன சாத்வி பிரக்யா சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். தனக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்து இருக்கிறார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” இன்று, எனது கொரோனா அறிக்கை பாசிட்டிவாக வந்துள்ளது. நான் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளேன். கடந்த 2 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கவும், தேவைப்பட்டால் பரிசோதனை செய்து கொள்ளவும். உங்களின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link 

கடந்த ஆண்டு பிரக்யா சிங், ” பசுவின் கோமியம் ஆனது நுரையீரல் தொற்று மற்றும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது. எனக்கு நிறைய உடல்நல பிரச்சனைகள் இருக்கிறது. இருப்பினும், நான் தினமும் கோமுத்ரா ஆர்க்(பசு கோமியம்) எடுத்துக்கொள்கிறேன். அதன் பிறகு, நான் கொரோனா வைரசிற்கு வேறு எந்த மருந்தையும் உட்கொள்ளவிலை. நான் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை ” எனப் பேசி இருந்தார்.

பசுவின் கோமியம் பல நோய்களை தடுப்பதாக தொடர்ந்து பேசி வரும் பாஜகவினர், அதை கொரோனா வைரசுடன் இணைத்து பேசியது சர்ச்சையாகவும் மற்றும் விமர்சனத்துக்குள்ளாக்கியது. அப்படி கூறியவர்களில் ஒருவரான பாஜக எம்பி பிரக்யா சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோமியம் குடிப்பதால் கொரோனா வரவில்லை என அவர் பேசிய வீடியோ இந்திய அளவில் சமூக வளைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Please complete the required fields.
Back to top button
loader