பாஜகவை கைவிட்டாரா அயோத்தி ராமர்? தோல்வியைத் தழுவிய சர்ச்சைக்குரிய பாஜக தலைவர்களின் பட்டியல் இதோ!

2024 மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 04 அன்று வெளியிடப்பட்ட நிலையில், ‘பாஜக’ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், எதிர்க்கட்சிகளான ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களிலும், இதர கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி இத்தேர்தலில் 292 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையிலும், கடந்த ஒன்றிய அமைச்சரவையில் பதவி வகித்த பல்வேறு ஒன்றிய அமைச்சர்கள் உட்பட பாஜகவின் பல நட்சத்திர தலைவர்களும் தோல்வியையே தழுவியுள்ளனர்.

மேலும் பாஜகவிற்கு இந்த தேர்தல் முடிவுகள் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு நேரெதிராகவே வந்துள்ளன. குறிப்பாக பாஜகவின் கோட்டை என்று சொல்லப்படுகின்ற உத்தரபிரதேசத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, இந்த தேர்தலில் அங்குள்ள பெரும்பான்மையான தொகுதிகளில் தோல்வியையே சந்தித்துள்ளது. மேலும் அங்கு இந்தியா கூட்டணி 43 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

பாஜகவை கைவிட்டாரா அயோத்தி ராமர்?

வேலை வாய்ப்பின்மை, மதச்சார்பின்மை, அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றை முக்கியப் பிரச்னைகளாக இந்தியா கூட்டணி தலைவர்கள் இத்தேர்தலில் முன்வைத்தநிலையில், ஆரம்பம் முதலே பாஜக, காங்கிரஸ் முஸ்லீம்களுக்கான கட்சி என்றும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் அறிக்கை என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமரை வெளியேற்றிவிடுவார்கள் என்றும் கூறி மத வெறுப்புணர்வை வெளிப்படையாகத் தூண்டியது.

எனவே அயோத்தி ராமர் கோவில் பாஜகவிற்கு பெரும் வெற்றியை ஏற்படுத்தி தரும் என்று எதிர்பார்த்த பாஜகவினர், 2024 மக்களவைத் தேர்தலின் முக்கிய ஆயுதமாக அயோத்தியை வைத்து தீவிர அரசியல் செய்து வந்தனர். ஆனால் அயோத்தி ராமர் கோவில் இடம்பெற்றுள்ள ஃபைசாபாத் தொகுதியில் பாஜக பலத்த ஏமாற்றத்துக்கு இடையில் தோல்வியை சந்தித்துள்ளது. பாஜக அங்கு ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபைசாபாத் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,54,289 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை தோற்கடித்துள்ளார். லல்லு சிங் 2014 இல் இருந்தே இத்தொகுதியில் எம்.பி.யாக இருந்து வந்துள்ளார். 2024 ஜனவரியில் ராமர் கோயில் கட்டி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அயோத்தி பகுதியில் மட்டும் பல்லாயிரக் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொடக்கிய பாஜக தலைமையிலான மாநில அரசு, ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால் இந்த திட்டங்களுக்காக மக்களிடம் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகவும், அரசு அதற்கு உரிய இழப்பீடு கூட கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் இந்துக்களைப் போன்றே குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லீம் மக்களைக் கொண்ட ஃபைசாபாத் தொகுதியில், அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கிய போதே அயோத்தியில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள தன்னிப்பூரில் மிகப்பெரிய அளவில் மசூதி கட்டித்தருவதாக அறிவித்த அரசின் செயல், இன்று வரை வெறும் வாய்ப்பேச்சாக மட்டுமே உள்ளது.

இத்தகைய சூழலில் தான் அயோத்தி ராமர் கோவிலுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டிய அத்தொகுதி மக்கள், வாக்குப்பதிவு மூலம் தங்களுடைய பலத்த எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

தோல்வியைத் தழுவிய சர்ச்சைக்குரிய பாஜக தலைவர்களின் பட்டியல்:

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பல நட்சத்திர தலைவர்கள் கடும்தோல்வியைத் சந்துள்ளனர். இதில் பாஜகவின் முன்னாள் ஒன்றிய அமைச்சரான ஸ்மிருதி இரானி முதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாமலை வரை அடங்குவர்.

அமோதி தொகுதியில் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானி:

உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்படுவது ஒன்றிய அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியின் தோல்வி தான். இவர் அமேதி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸின் கிஷோரி லால் சர்மாவிடம் 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, 2004-2014 வரை அங்கு எம்பியாக இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மிகப்பரிய வித்தியாசத்தில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இத்தேர்தலில் தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிட்டார். 

மசூதியை நோக்கி அம்புவிட்ட மாதவி லதா:

பிரசாரத்தின்போது வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் யாரும் சாதி, மதம் உள்ளிட்டவற்றை வைத்து பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள போதிலும், ஏப்ரல் 18 அன்று தனது பிரச்சாரத்தின் போது பாஜக சார்பில் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட்ட மாதவி லதா மசூதியை நோக்கி அம்பு விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே அவர் மீது ஐபிசியின் 295 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசியிடம் 3,38,087 வாக்குகள் வித்தியாசத்தில் இத்தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளார்.

சர்ச்சைக்குரிய நவ்நீத் ராணா கவுர்:

கடந்த தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற நவ்நீத் ராணா கவுர், பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அதே தொகுதியில் பாஜக சார்பில் அவருக்கு சீட் வழங்கப்பட்டது.

ஆனால் தனது பிரச்சாரத்தின் போது “உங்களை முடிக்க எங்களுக்கு 15 நிமிடங்கள் தேவையில்லை. அதை 15 வினாடிகளில் செய்வோம். நான் எந்த ‘பாகிஸ்தான் கி அவுலாத்’ பற்றியும் பயப்படவில்லை” என்று மே 11 அன்று மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் அவர் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் அதில், அயோத்தி ஒரு முன்னோட்டம் மட்டுமே, காசியும் மதுராவும் எஞ்சியுள்ளன என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அமராவதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பல்வந்த் பசவந்த் வான்கடேவிடம் இவர் தோல்வியடைந்துள்ளார்.

ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா:
.
கர்நாடகாவில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டவர் மதச்சார்பற்ற ஜனதா தள எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா. பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
.
ஹாசன் தொகுதியானது, தேவகவுடா குடும்பத்தின் கோட்டையாகவே இருந்துவந்துள்ளது. மேலும் ஹாசன் தொகுதியில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த இரண்டு நாட்களுக்கு பின்பே, பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
.
காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் படேலிடம் 43,588 வாக்குகள் வித்தியாசத்தில் பிரஜ்வல் ரேவண்ணா அங்கு தோல்வியைத் தழுவியுள்ளார்.
.
தோல்வியைத் தழுவியுள்ள 13 ஒன்றிய அமைச்சர்கள்:
.
ஸ்மிருதி இரானியைத் தொடர்ந்து பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சரான எல். முருகன், ஒன்றிய அமைச்சரவையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்த ராஜீவ் சந்திரசேகர், ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒன்றிய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சருமான அர்ஜுன் முண்டா, ஒன்றிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சராகப் பதவி வகித்த ராஜ்குமார் சிங், கெரி தொகுதியில் போட்டியிட்ட ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா, ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த கைலாஷ் செளத்ரி, ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்த மகேந்திர நாத் பாண்டே, ஃபதேபூர் தொகுதியில் போட்டியிட்ட ஒன்றிய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சரான சஞ்சீவ் பால்யன், ஒன்றிய வெளியுறவுத் துறை இணையமைச்சரான வி. முரளிதரன், ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சரான சுபாஷ் சர்க்கா, ஒன்றிய உள்துறை இணையமைச்சரான நிஷித் பிராமனிக் ஆகியோர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
.
இவர்களைத் தவிர தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர தலைவர்களான தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தெலங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போன்றோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்..!

.

ஆதாரங்கள்:

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2454.htm

https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/uttar-pradesh/why-bjp-lost-faizabad-seat-which-houses-ayodhya-ram-mandir-explained/articleshow/110758647.cms?from=mdr

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader