முகமது நபி பற்றி பாஜக நிர்வாகி சர்ச்சை பேச்சு, அரபு நாடுகளில் கடும் எதிர்ப்பு, கலக்கத்தில் பாஜக !

இந்தியாவில் மத வெறுப்பு பேச்சுகளால் மத நல்லிணக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தல் எழுந்து கொண்டு இருக்கிறது. பாஜகவினரோ அல்லது அதன் ஆதரவாளர்களோ மத வெறுப்பு பேச்சு சர்ச்சைக்குள் சிக்குவது புதிதல்ல. ஆனால், இம்முறை அக்கட்சிக்கும், பாஜக அரசிற்கும் கலக்கத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்து இருப்பது அரபு நாடுகளில் உருவான பெரும் எதிர்ப்பும், இந்தியர்களின் வர்த்தகம் பாதிக்கும் சூழ்நிலைதான்.

Advertisement

Archive link

கடந்த மே மாதம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ஞான்வாபி மசூதியில் சிவலிங்கம் பற்றிய விவாதம் ஒன்றில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, குரான் மற்றும் முகமது நபி குறித்த சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவியது. இது அரபு நாடுகளுக்கும் பரவத் தொடங்கி பெரும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது.

சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் முகமது நபி பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு தீவிர எதிர்வினை வெளியாக இந்தியாவின் பொருட்களை புறக்கணிக்க சொல்லி சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டன என செய்திகளில் வெளியாகின.

Archive link  

அது ட்ரென்ட் ஆகவே சூப்பர்ஸ்டோர்களில் இந்திய பொருட்கள் மறைக்கப்பட்டதாகவும், வணிகம் பாதிக்கப்படுவதாகவும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

இந்த எதிர்வினைக்கு மத்தியில், எந்த மதத்தையும் இழிவுப்படுத்தும் சித்தாந்தத்தையோ அல்லது நபர்களையோ பாஜக முன்னிறுத்தவில்லை என்றும், பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியின் உறுப்பினர் மற்றும் பொறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்தும் பாஜக அறிக்கை வெளியிட்டது.

இதேபோல், சமூக வலைதளங்களில் வெளியிடும் கருத்துகள் சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாகவும் கூறி டெல்லி பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் நவீன் குமார் ஜிண்டால் என்பவரையும் கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர்.

Twitter link 

இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்த கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய அரசாங்கத்திடம் இருந்து இந்த கருத்துக்கு பொது மன்னிப்பு மற்றும் உடனடி கண்டனத்தை எதிர்பார்க்கிறது என இந்திய தூதருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

Twitter link 

இதற்கு இந்திய தூதரகம், ” இது எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை. இவை விளிம்புநிலை கூறுகளின் (Fringe elements) கருத்துகள் ” எனத் தெரிவித்து இருக்கிறது.

Twitter link 

பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மா, ” தொலைக்காட்சி விவாதத்தின் போது சிவலிங்கத்தை தொடர்ந்து அவமதிக்கும் வகையில் ஒப்பிடு செய்ததால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில விசயங்களை கூறினேன். என் பேச்சு யாருடைய மத நம்பிக்கையையும் புண்படுத்தி இருந்தால் எனது கருத்துகளை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் ” என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

பாஜக நிர்வாகிகளின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கத்தார் மட்டுமின்றி குவைத், ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டும், இந்திய தூதரகம் தரப்பில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டும் வருகிறது.

பாஜகவைச் சேர்ந்தவர்களின் சர்ச்சைக் கருத்துகளால் அரபு நாடுகளில் எதிர்ப்பு, இந்தியப் பொருட்கள் புறக்கணிப்பு, இந்திய அரசாங்கம் விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




Back to top button