Factcheck: பாஜகவில் இணைந்த கே.ஆர்.வெங்கடேஷ் செம்மரக் கடத்தல் வழக்கில் கைதானவரா ?

தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை மற்றும் இளைஞரணித் தலைவர் வினோஜ் செல்வம் உடன் இருக்கும் நபர் செம்மரக் கடத்தல் வழக்கில் கைதாகியதாக தெலுங்கு செய்தி வீடியோவின் படத்தையும் இணைத்து டி.ஆர்.காயத்ரி ஸ்ரீகாந்த் என்பவர் முகநூலில் பகிர்ந்து இருந்தார். இதன் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் கூறுமாறு ஊடகவியலாளர் செந்தில்வேல் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
@youturn_in இதை fact check செய்து சொன்னால் நன்று. pic.twitter.com/TYeSwbkhUo
— Senthil (@Senthilvel79) June 12, 2022
யார் இவர் ? செம்மரக் கடத்தலில் கைதானாரா ?
தெலுங்கில் வெளியான செய்தி குறித்து தேடுகையில், ” 2015-ல் சென்னையைச் சேர்ந்த சர்வதேச செம்மரக் கடத்தக்காரர் கந்தசாமி வெங்கடேசன் கைது செய்யப்பட்டு உள்ளதாக” TV5 நியூஸ் எனும் தெலுங்கு சேனல் வெளியிட்டது.
2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ” துபாயைச் சேர்ந்த கடத்தல்காரர் சாஹூல் ஹமீதின் மகன் அசாருதீன், செல்வந்தரும் கடத்தல்காரருமான கே.வெங்கடேஷ் (சென்னை), பூடானைச் சேர்ந்த பிரிவுடன் தொடர்புடைய லட்சுமணன் மற்றும் மற்றொரு கடத்தல்காரர் ஜெயபால் உட்பட நான்கு முக்கிய கடத்தல்காரர்களை ஆந்திரா போலீசார் கைது செய்து உள்ளதாக ” டெக்கான் க்ரானிக்கல் செய்தியில் புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.
ஆந்திரா போலீசாரால் கைது செய்யப்பட்ட கே.வெங்கடேஷ் பற்றி மேற்கொண்டு தேடிய போது, 2016 ஜூலை 12-ம் தேதி ” குடிசைத் தொழிலாக மாறிய செம்மரக் கடத்தல் ” எனும் தலைப்பில் தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், ” சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த கே.ஆர்.வி என்ற கே.ஆர்.வெங்கடேசனை(42) செம்மரக் கடத்தல் வழக்கு தொடர்பாக ஆந்திர போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களை செங்கடேசன் தாக்கினார். எனினும், அடுத்த சில மாதங்களில் ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். இதனால் அதிமுக பிரமுகரான அவரது சோழவரம் ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலர் பதிவு பறிக்கப்பட்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார் ” என வெளியாகி இருக்கிறது.
கே.ஆர்.வி அல்லது கே.ஆர்.வெங்கடேஷ் குறித்து சமூக வலைதள பக்கங்களில் தேடிய போது, 2020 டிசம்பரில் நமது அம்மா நாளிதழில் வெளியான திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியலில் கே.ஆர்.வெங்கடேஷ்(பாடியநல்லூர்) என தன் பெயர் இடம்பெற்றுள்ளதை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
கே.ஆர்.வெங்கடேஷ் தற்போது பாஜகவில் இணைந்து உள்ளதாகவும், பாஜக தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார்.