கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாஜக? #We_Stand_With_Zubair

உண்மை சரிபார்க்கும் ஊடகமான ஆல்ட் நியூஸ் (Alt News), சமூகத்தில் பரவும் பொய் செய்திகளை உடனுக்குடன் ஆராய்ந்து உண்மை செய்திகளை வழங்கிவருவகிறது. ஆங்கிலம், ஹிந்தி, வங்காள மொழி ஆகிய மூன்று மொழிகளில் இயங்கி வருகிறது. இதன் இணை நிறுவனராக இருப்பவர் முகமது சுபேர் (Mohammed Zubair). இவரை ‘எக்ஸ்’ தளத்தில் 11 இலட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

இவருக்கு ஜூன் 13ஆம் தேதியன்று நள்ளிரவு நேரத்தில் எக்ஸ் தளத்தில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் அவருடைய எக்ஸ் கணக்கில் உள்ள கீழ்க்கண்ட பதிவு, இந்தியாவின் ‘Information Technology Act’ எனும் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்பதற்காக அதன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி காவல்துறை கோரிக்கை அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த சுபேர், “என்னுடைய கணக்கு Information Technology Act சட்டத்தை மீறியிருப்பதால் அதனை நீக்கக்கோரி எக்ஸ் தளத்திடம் கேட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவருடைய எந்தப்பதிவு சட்டத்தை மீறியிருக்கிறது என்பது குறித்து எதுவுமே அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்படவில்லை. அதேபோல, சுபேர் அவர்களின் பதிவு, ‘Information Technology Act’ சட்டத்தின் எந்த சட்டப்பிரிவை மீறியது என்பது குறித்தான எந்தத் தகவலும் அந்த மின்னஞ்சலில் இல்லை.

மேலும், தற்போதைக்கு எக்ஸ் தளம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், டெல்லி காவல்துறை வைத்துள்ள கோரிக்கை தொடர்பாக சட்ட ஆலோசனை பெறவும் வேண்டுமெனில் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் அவரை அறிவுறுத்தியுள்ளது எக்ஸ் தளம்.

எந்தவித சரியான தகவல்களையும் குறிப்பிடாமல் சுபேர் அவர்களின் பதிவு சட்டத்தை மீறியுள்ளதாகக் கூறும் இந்த மின்னஞ்சல் பத்திரிகையாளர் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொய் செய்திகள் எது? உண்மை செய்திகள் எது? என்று கண்டறியும் ஊடகத்தையும் ஊடகவியலாளர்களையும் கண்டு அரசாங்கம் ஏன் அஞ்சவேண்டும் என்ற கேள்வியே இதன்மூலம் நமக்கு எழுகிறது.

ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டு சுபேர் அவர்கள் பதிவிட்ட ட்வீட் ஒன்று மத உணர்வுகளை புண்படுத்தியதாகக்கூறி 2022ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகத்தின் கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் வேலையை இந்த ஆட்சியிலும் பாஜக தொடர்கிறதா? என்கிற அச்சம் நம் அனைவரிடமும் எழுகிறது. இப்படியான காலகட்டத்தில் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக நிற்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

Please complete the required fields.




Back to top button
loader