மாணவிக்கு பிரதமர் திட்டத்தில் வீடு வழங்கியதாக தவறாகப் பதிவிட்டு நீக்கிய பாஜக இளைஞரணி தலைவர்!

கோவை மாவட்டம் நஞ்சப்பனூர் என்ற கிராமத்தின் பழங்குடி சமூகத்தை சேர்ந்த சங்கவி என்ற மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது பேசுப் பொருளாகவும், பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து, பாஜக சார்பில் மாணவி சங்கவிக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழக பாஜகவின் இளைஞரணி தலைவர் வினோஜ் நேரில் சென்று மாணவியை சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.
Students like Ms Sanghavi are a inspiration. Hailing from a rural village belonging to the ST community she has cleared #NEET exams, putting to rubbish all the false claims of @arivalayam Govt in trying to dissuade students. Met her today N Congratulated @annamalai_k @blsanthosh pic.twitter.com/YXXGQNWX9u
— Vinoj P Selvam (@VinojBJP) November 7, 2021
அதுமட்டுமின்றி, ” நரேந்திர மோடியின் மக்கள் நலத்திட்டங்கள் சென்றடைவதையும் குறிப்பிட மறக்க வேண்டாம். முதல் படம் சங்கவியின் வீடு (ஓலைக் கூரை) மற்றும் தற்போது அவர்கள் தங்குவதற்கு பிரதமர் வீடுத் திட்டத்தின் கீழ் மின்சார வசதியுடன் கூடிய சரியான வீடு பெற்றுள்ளதைக் காட்டுகிறது ” எனப் பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து, சிவா எம் எனும் ட்விட்டர் பக்கத்தில், ” சங்கவியின் தந்தை இறந்த பிறகு அவரது கார்டியனாக பொறுப்பெற்று நான் எனது நண்பர்கள், N3 பவுண்டேசன், கோவை மெரிடியன், கிரீன்சிட்டி ஆகிய ரோட்டரி கிளப்புகள், சாய்பாபா சமிதி குனியமுத்தூர், ஆகியோரின் உதவியால்தான் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது. இதற்கும் பிஎம் திட்டத்திற்கும் சம்பந்தமில்லை ” என வினோஜ் பதிவை பகிர்ந்து பதிவிட்டார்.
சங்கவியின் தந்தை இறந்த பிறகு அவரது கார்டியனாக பொறுப்பெற்று நான் எனது நண்பர்கள், N3 பவுண்டேசன்,கோவை மெரிடியன், கிரீன்சிட்டி ஆகிய ரோட்டரி கிளப்புகள்,சாய்பாபா சமிதி குனியமுத்தூர், ஆகியோரின் உதவியால்தான் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது. இந்த பொய்தான் நாட்டை கெடுத்தது.. pic.twitter.com/T7AFer9mSe
— siva m (@siva_apt) November 7, 2021
இதையடுத்து, பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவை நீக்கி இருக்கிறார். அவருடைய நீக்கப்பட்ட பதிவின் ஸ்க்ரீன்ஷார்டை சிவா ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பகிர்ந்து இருந்தார். வினோஜ் மாணவி சங்கவிக்கு புத்தகம் அளிக்கும் புகைப்படத்தில் மாணவிக்கு அருகே இருக்கும் நபரே இந்த ட்வீட்களை பதிவிட்டு இருக்கிறார்.
நவம்பர் 6-ம் தேதி மாணவி சங்கவி இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியில், ” எனக்கு சிவா என்ற கார்டியன் இருக்கிறார். அவர்தான் நான் குழப்பத்தில் இருந்தபோதெல்லாம் உன்னால் முடியும், நீ சாதித்தால் தான் இங்குள்ள குழந்தைகளும் உன்னைப் பின்தொடர்வார்கள் என்று என்னை ஊக்கமளித்து தற்போதுவரை வழிநடத்தி வருகிறார் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
பிறரின் உதவியால் மாணவி சங்கவிக்கு கட்டப்பட்ட வீட்டை பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ் கிடைத்த வீடு என தவறான தகவலை பகிர்ந்து, எதிர்ப்பு தெரிவித்த உடன் அதை நீக்கி இருக்கிறார் வினோஜ். அவரின் நீக்கப்பட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.