Factcheck: மக்களைத் துரத்தி விட்டு ஓட்டு போடும் முகவரின் வைரல் வீடியோ.. எங்கு நிகழ்ந்தது ?

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் மையத்தில் வாக்கு செலுத்த வரும் மக்களின் கையில் மை வைத்து அவர்களை விரட்டி விட்டு அங்குள்ளவர்களே வாக்கு செலுத்திக் கொள்ளுவதாக இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கையில மை வெச்சிட்டு கிளம்பிட்டே இருக்கனும்@savukku pic.twitter.com/dy4uG0uEyE
— Santhosh Natarajan (@santosanthosh) March 11, 2022
வாழ்த்துகள் ப்ரோ @annamalai_k https://t.co/lnyHCOK6HS
— U2 Brutus (@U2Brutus_off) March 11, 2022
சமீபத்திய 5 மாநில சட்டமன்ற தேர்தல், வடநாடு என்றும், பாஜகவைக் குறிப்பிடும் இவ்வீடியோ பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வீடியோ எங்கு பதிவு செய்யபட்டது என உறுதியாக எங்கும் குறிப்பிடவில்லை.
எங்கு நிகழ்ந்தது ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மார்ச் 1-ம் தேதி மேற்கு வங்க மாநில தேர்தலின் போது பதிவு செய்யப்பட்டதாக முகநூலில் சிலர் இவ்வீடியோவை பகிர்ந்து இருந்தனர்.
அதை வைத்துத் தேடிப் பார்கையில், பிப்ரவரி 28-ம் தேதி Hindustan Newsx எனும் முகநூல் பக்கத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் நகராட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு மையத்தை கைப்பற்றியதாக வீடியோவை பதிவாகி இருக்கிறது.
பிப்ரவரி 27-ம் தேதி TV9Bangla எனும் செய்தியில், ” மேற்கு வங்கத்தின் தெற்கு தும்தும் நகராட்சியின் 33வது வார்டில் உள்ள லேக்வியூ பள்ளியில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, தேர்தல் முகவர் வாக்காளர்களை தடுத்து நிறுத்தி அவராகவே வாக்கு செலுத்தும் வீடியோ ” என வெளியாகி இருக்கிறது.
ஆனால், வீடியோவில் இடம்பெற்ற நபர் யார், எந்த கட்சிக்கு ஆதரவாக இப்படி செய்தார் என்கிற கூடுதல் விவரங்கள் கிடைக்கவில்லை. மேற்கு வங்கத்தின் நகராட்சி தேர்தலில் எடுக்கப்பட்ட வீடியோ எங்கு எடுக்கப்பட்டது எனத் தெரியாமல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.