This article is from Apr 24, 2019

சிறுவன் ஜலசமாதி அடைந்ததாகப் பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி.

ஒரு சிறுவனை அமர்ந்த நிலையில் தூக்கிச் செல்லும் காட்சி, பின் ஒரு குழியில் அமர்ந்த நிலையில் வைத்து அடக்கம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சிறுவன் ஜலசமாதி அடைந்த காரணத்தினால் அமர்ந்த நிலையிலேயே அடக்கம் செய்ததாக பரவும் செய்திகள், சிறுவன் எப்படி இறந்தான் என்பது பற்றிய குழப்பமும் நம்மிடையே இருந்தது.

யார் அந்த சிறுவன் ? 

திருவண்ணாமலை  மாவட்டம் படைவேடு அருகே உள்ள ராமநாதபுரம்  கிராமத்தில் வசித்து வரும் அரசு பள்ளி ஆசிரியரான ஹரிகிருஷ்ணன் என்பவற்றின் 16 வயது மகன் தனநாராயணன் தான் சமூக வலைதளங்களில் வைரலாகிய சிறுவன். பத்தாம் வகுப்பில் 465 மதிப்பெண்கள் பெற்ற சிறுவன் அதற்குமேல் படிக்க விருப்பம் இல்லாமல் ஆன்மீகத்தை நாடிச் சென்றதாகவும், இமயமலை செல்ல ஆசைப்பட்டார் என பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.

இந்நிலையில், மார்ச் 24-ம் தேதி தனநாராயணன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆனால் சிறுவனின் உடல் மீட்கப்பட்ட போது ” தனநாராயணன் மக்கள் பார்வைக்கு மட்டும் தான் இறந்துள்ளான், உயிர் நாடி உள்ளது அவன் மரணமில்லா பெருவாழ்வான ஜல சமாதி அடைந்துள்ளான் ” என சாமியார் கூறியதால் தனநாராயணன் உடலை அமர்ந்த படியே பத்மாசன நிலையில் குழியில் வைத்து அடக்கம் செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை : 

சிறுவன் தனநாராய ணன் ஜலசமாதி அடைந்ததாக கூறி எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஒரு மாதம் கழித்தே அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் உத்தரவால் அடக்கம் செய்யப்பட்ட சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டு தொடர்ந்து படிக்க விரும்பாத காரணத்தினால் சாமியார் பழனியிடம் சிஷ்யனாக சேர்த்து விடும்படி கூறியதால் ஆசிரமத்தில் சேர்த்து விட்டுள்ளனர். ஒருநாள் தனக்கு கடவுள் ஆசீர்வதித்து விட்டார், நான் கடவுளிடம் செல்கிறேன் என குறுஞ்செய்தி அனுப்பி விட்டு கிணற்றில் விழுந்து இறந்துள்ளார். ஆனால், தனநாராயணன் உடலை சோதித்த சாமியார் சிவானந்த பரமாம்சர் பழனி , சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டார் எனக் கூறியதை அடுத்து தன் நிலத்தில் அடக்கம் செய்ததாக  சிறுவனின் தந்தை கூறியுள்ளார். இன்றும் தன் மகன் ஜலசமாதி ஆகியதாகவே சிறுவனின் பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.

சிறுவனின் மரணம் : 

சிறுவன் மக்கள் பார்வைக்கு தான் இறந்து உள்ளான், ஜலசமாதி ஆகியதாக பரவும் செய்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின.  சிறுவன் தண்ணீரில் மூச்சுத்திணறி இறந்ததாக பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. ஆகையால், வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், ” சிறுவன் ஏற்கனவே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், அதற்காக பல்வேறு மருத்துவர்களிடம் காண்பித்தாகவும் ” கூறுகின்றனர். சிறுவன் வலிப்பு நோய் வந்து கிணற்றில் விழுந்து இறந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், சிறுவன் தண்ணீரில் மூச்சுத்திணறி இறந்து விட்டார் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.

மேலும், சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டான் என்னும் வதந்தியை மக்கள் யாரும் நம்ப வேண்டாம், சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும் தெரிவித்து உள்ளனர்.

சிறுவன் இறந்து விட்டான் என்பது உண்மை, ஆனால் ஜல சமாதி நிலையில் இருப்பதாக பரவுவதை மக்கள் யாரும் நம்பி பகிர வேண்டாம்.

Please complete the required fields.




Back to top button
loader