பிராமணர்கள் வன்முறை, சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டது இல்லையா ?

பத்திரிக்கையாளர் ரங்கராஜ்  அவர்கள் யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் “மணி ஆட்டிக்கொண்டு இருந்த குடும்பத்தில் (பிராமணர்) ஒருத்தர் கூட கொலை செய்தது கிடையாது. வன்முறைக்குச் சென்றதில்லை. இதைப் பற்றிப் பாராட்ட உங்களிடம் தைரியம், நேர்மை, மனசாட்சி இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பி இருப்பார். 

இந்த நேர்காணலுக்கு முன்னதாக பிராமணர் சங்க மாநாட்டில் ரங்கராஜ் பேசுகையில் “வடக்கில் ரவுடிகளில் பாதிப் பேர் பிராமணர்களாக இருக்கிறார்கள். இங்கே, 3 தெரு தள்ளி சண்டை வந்தால் கதவை சாத்துங்கோ என்கிறார்கள்” எனக் கூறி இருந்தார். தமிழ்நாட்டில் பிராமணர்கள் கொலையோ, வன்முறையோ, சட்டத்திற்குப் புறம்பான செயலையோ செய்தது கிடையாதா ? 

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு :

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பாக சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு வந்த அத்தீர்ப்பில் அவர் A1 குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

காஞ்சி கொலை வழக்கு : 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மேலாளராக பணி செய்து வந்தவர் சங்கரராமன். கோயிலில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து பேசி வந்த நிலையில், மடாதிபதி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்நிலையில், 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோயில் வளாகத்தில் சிலரால் வெட்டி கொல்லப்பட்டார். இதில் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முதலில் அப்ரூவரானவர் மற்றும் சங்கரராமனின் மனைவி உட்பட பலர் சங்கர மட நிர்வாகம் குறித்து புகார்களை கூறினர். ஆனால் பின்னர் அதனை திரும்ப பெற்றனர். இதேபோல் 187 சாட்சியங்களில் 82 சாட்சிகள் பிறழ் சாட்சியங்களாக அறிவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் தேவநாதன் செயல் : 

கோயில் ஒரு புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. அதிலும் கோயிலின் கருவறைக்கான சிறப்புகள் என பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுவதுண்டு. ஆனால், காஞ்சிபுரத்தில் தேவநாதன் என்ற அர்ச்சகர் கோயில் கருவறையில் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டான். அந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. காவல் துறையும் நடவடிக்கை மேற்கொண்டது.

கோயில் சிலை, கவசம், நகைகளைத் திருடிய அர்ச்சகர்கள் : 

கோயிலில் பணிசெய்யும் அர்ச்சகர்களே கோயிலுக்குச் சொந்தமான சிலை, நகை, பக்தர்களின் காணிக்கைகளை திருடிய பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது. அதில் சிலவற்றைக் காண்போம்.

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது. அக்கோயிலில் தலைமை அர்ச்சகராக செந்தில் என்பவர் பணியில் இருந்து வந்துள்ளார். அவரது குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக அர்ச்சகர் பணி செய்கின்றனர். இந்நிலையில்  2012ம் ஆண்டு கோயில் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து விநாயகர், அம்மன், குபேரன், அப்பர் சிலைகளையும், தனது வீட்டுக்கு அருகில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலில், நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகளைத் திருடிக் கடத்தியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் காஞ்சி குமரக்கோட்டம் கோயிலில் சுமார் 7 கிலோ எடையில் வெண்கலகச்சியப்பருக்கு சிலை உள்ளது. அச்சிலை திருடப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தினர். கோயில் அர்ச்சகர்களில் ஒருவரான கார்த்திக்கிடம் விசாரிக்கும் போது, மது போதையில் கோயிலுக்கு அருகில் உள்ள குளத்தில் சிலையை வீசியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். 

சேலம், சூரமங்கலம் பகுதியிலுள்ள விநாயகர், மாரியம்மன், காளியம்மன் கோயிலில் சக்தி சரவணன் என்பவர் அச்சகராக பணியாற்றி வந்துள்ளார். 2016ம் ஆண்டு அவரது வீடு கடனின் காரணமாக ஜப்திக்கு வந்துள்ளது. இதனால் கோவிலுக்குச் சொந்தமான வெள்ளி நகைகளைத் திருடியுள்ளார். பின்னர் அவரிடமிருந்து 20 கிலோ வெள்ளி மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல இணை ஆணையர் தெரிவித்திருந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் பாபநாசநாதர் கோயிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறினால் தங்கம், வெள்ளியைக் காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். அதனை மாதம் அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறை சரி பார்க்கப்படும். அப்படி 2020ம் ஆண்டு சரிபார்க்கையில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கோயில் நகைகள் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த திருட்டு சம்பவத்தை அந்த கோயிலின் அர்ச்சகரும், உதவி அலுவலரும் இணைந்து செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மன்னார்சாமி நல்ல காத்தாயி அம்மன் கோயிலுள்ளது. அங்குக் காணாமல் போன 4 உலோக சிலை குறித்து அர்ச்சகர் சூரிய மூர்த்தியிடம் காவல் துறையினர் விசாரித்ததில், கோயில் கருவறையில் இரண்டு சிலைகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது வீட்டில்  அம்மனுக்கான வெள்ளிக் கவசம், சனீஸ்வரன் சிலைக்கான வெள்ளிக் கவசம், வெள்ளி குடம், 2 வெள்ளி குத்து விளக்குகள் ஆகியவற்றைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இம்மாதிரியாகக் கோயிலில் நடக்கும் திருட்டு சம்பவங்களைத் தடுக்க சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், 2017ம் ஆண்டு திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், சிசிடிவி-யை துணி மூலம் மறைத்து விட்டுத் திருடியுள்ளனர். கோயில் அர்ச்சகர்களே இத்தகைய திருட்டு சம்பவத்தையும் செய்துள்ளனர்.  ஞானமணி மற்றும் அவரது மகன் முல்லைவளவேந்தன் இருவரும் இணைந்து சிசிடிவியை துணி கொண்டு மூடிவிட்டு, ஒரு கொம்பில் பசை தடவி அதனை உண்டியலுக்குள் செலுத்தி அதன் மூலம் பணத்தினை திருடியுள்ளனர். 

தூய்மை பணியாளரிடம் புரோகிதர் திருட்டு : 

அமிர்தகடேஸ்வரன் என்பவர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் புரோகிதராக வேலை செய்து வந்தார். இவர் 2022ம் ஆண்டு ஜூன் மாதம், கோயிலில் தூய்மைப் பணி செய்துவரும் விஜயா என்பவரிடம் இருந்து ஏடிஎம் கார்டினை திருடியுள்ளார். அதிலிருந்து ரூ. 25,000 திருடியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். 

குழந்தை திருமணங்கள் : 

பெண்களின் திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பலரும் இந்த வயது வரம்பினை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வயதுக்கு முன்னதாக திருமணம் செய்தால் அதில் தொடர்புடையவர்களை குழந்தை திருமண தடுப்பு சட்டம் மூலமாக கைது செய்யப்படுவர்.

2022, ஜூன் 3ம் தேதி சிதம்பரம் கோயில் தீட்சிதரின் 17 வயது சிறுமிக்கும், அதே கோயிலில் தீட்சிதராக உள்ள சிவராமன் என்பவரின் மகன் கபிலனுக்கும் திருமணம் செய்ததைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை, சிவராமன் மற்றும் கபிலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே கோயிலில் தீட்சிதராக பணிசெய்யும் சோமசேகரின் 14 வயது மகளுக்கும், பசுபதி என்ற 24 வயது தீட்சிதருக்கும் திருமணம் செய்துள்ளனர். சமூக நலத்துறை அதிகாரிகள் சிறுமியிடம் செய்த விசாரணையில் திருமணம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை சோமசேகர் தீட்சிதர், சிறுமியைத் திருமணம் செய்த பசுபதி தீட்சிதர், அவரது தந்தை கணபதி ஆகிய 3 பேரைக் கடலூர் அனைத்து மகளிர் காவல் துறை கைது செய்தனர்.

கடந்த 2021ம் ஆண்டு தீட்சிதருடைய 13 வயது மகளுக்கும், 19 வயது தீட்சிதருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். மாவட்ட சமூக நலத்துறை புகாரையடுத்து மாப்பிள்ளை பத்ரீசன், அவரது தந்தை தில்லை நாகரத்தினம் தீட்சிதர், சிறுமியின் தந்தை ராஜ கணேச தீட்சிதர் முதலானோர் கைது செய்யப்பட்டனர். 

அதே ஆண்டு, சிதம்பரம் கோயில் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தனது 13 வயது சிறுமிக்கு, வெங்கடேச தீட்சிதரின் 15 மகனுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். இது பற்றிய விவரம் 2022ம் ஆண்டு காவல்துறைக்கு தெரியவந்ததையடுத்து ஹேமசபேச, வெங்கடேச கைது செய்யப்பட்டனர்.

அர்ச்சகர் மது போதையில் சண்டை : 

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் அர்ச்சகர் சேஷாத்திரி மது அருந்திவிட்டு பிரியாணி சாப்பிடச் செல்லும் வழியில் தகராறு ஏற்பட்டு சண்டையில் ரத்த காயம் ஏற்பட்டது. ஆனால், இது அனைத்தையும் மறைத்து ஒரு பொய்யான புகாரினை காவல் நிலையத்தில் அளித்திருந்தார். அதன் பிறகு காவல் துறையின் விசாரணையில், தான் செய்த தவறினை ஒப்புக்கொண்டார். இது குறித்த உண்மைத் தன்மையினை ‘யூடர்ன்’ கட்டுரையாக வெளியிட்டிருந்தது.

மேலும் படிக்க : மது போதையில் பிரியாணி கடை முன் ரகளையில் ஈடுபட்ட அர்ச்சகரின் பொய் புகார்.. அந்த பொய்யை பரப்பிய தினமலர் !

கடவுள் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் எனப் பேசக்கூடிய நிலையில், வடகலை பெரியதா, தென்கலை பெரியதா என ரத்தம் வரும் அளவிற்குக் கோயிலுக்குள் சண்டை போடுவதும் அங்குள்ள அர்ச்சகர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader