காலை உணவு திட்டம் : அருவருப்பு தலைப்பால் எழுந்த கண்டனங்கள்.. தினமலருக்கு பதில் இதோ !

மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதையும், அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிப்படையாமல் இருப்பதையும், பள்ளிகளில் அவர்களின் வருகையை கணிசமாக அளவு அதிகரிக்க வைப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’.
முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்:
சட்டமன்றத்தில் கடந்த 2022 மே 08 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காலை உணவுத் திட்டம் தொடர்பான முதல் அறிவிப்பு, விதி 110-இன் கீழ் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நோக்கில் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதற்காக, முதல் கட்டமாக ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 1,545 பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, இதன் மூலம் 1,14,095 மாணவர்கள் பயன்பெற்றார்கள்.
இரண்டாவது கட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதன்படி, திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 25 அன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
சமூக பொறுப்பற்ற தினமலர்:
இந்த சூழ்நிலையில், தினமலர் நாளிதழின் சேலம் மற்றும் ஈரோடு பதிப்பின் முதல் பக்கத்தில் “காலை உணவுத் திட்டம், மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “தமிழகம் முழுவதும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத புதுபிரச்சனை எழுந்துள்ளது.
மாணவர்கள் எல்லாருக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது. ஆனாலும், தங்கள் குழந்தைக்கு உணவு கிடைக்காவிட்டால், மதியம் வரை பசியில் இருக்க வேண்டியதாகி விடுமே என்று நினைத்து பெற்றோர், வீட்டிலேயே சாப்பிட வைத்து அனுப்புகின்றனர். அவர்கள் பள்ளிக்கு வந்ததும் அங்கும் சாப்பிடுகின்றனர். இதனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் ‘இயற்கை உபாதை‘க்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த ஒருவாரமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் காலை பள்ளிக்கு சாப்பிடாமல் வரும்படி மாணவர்களுக்கும், வீட்டில் சாப்பாடு கொடுத்து அனுப்ப வேண்டாம் என பெற்றோருக்கும் அறிவுறுத்தி வருகின்றனர்.” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர்:
தினமலரின் இச்செய்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி… pic.twitter.com/M8H94rVn68
— M.K.Stalin (@mkstalin) August 31, 2023
மாணவர்களுக்கு சத்தான காலை உணவு ஏன் அவசியம்?
சமீபத்திய 2019 முதல் 2021-ஆம் ஆண்டிற்கான தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் படி (NFHS), இந்தியாவில் ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளில் பெரும்பாலானோர் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் காணப்படுகின்றனர். இதில் 5 வயதிற்கு கீழ் குறைந்த எடையுடன் உள்ள குழந்தைகள் நகர்ப்புறங்களில் 27.3 சதவீதங்களுடனும், கிராமப்புறங்களில் 33.8 சதவீதங்களுடனும், மொத்தமாக 32.1 சதவீதங்களுடனும் எடை குறைந்து காணப்படுகின்றனர்.
இதே போன்று 6 முதல் 59 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளும், 15-19 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் இரத்தசோகை குறைபாடுகளுடன் உள்ளதை இந்த அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. இதில் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் இரண்டு மடங்கு குறைபாடுகளுடன் காணப்படுகின்றனர்.
எனவே இத்தைகைய குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்த, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களுக்கு காலை, மதியம் என இரண்டு வேளைகளுக்கும் சரிவிகித அளவுகளுடன் சத்துணவு வணங்கவேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.
இந்த சூழ்நிலையில், தினமலரின் “காலை உணவுத் திட்டம், மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு, ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருப்பது மக்கள் மத்திலும், அரசியல் தலைவர்கள் மத்திலும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே இதற்கு கண்டிப்பாக தினமலர் தன்னுடைய வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என பலரும் தங்களது கண்டனங்களை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தினமலர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு செய்தி வெளியிட்டது குறித்து தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில், “திரு கி.ராமசுப்பு ஆசிரியராக கொண்ட தினமலர் சென்னை, கோவை, மதுரை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்புகளில் மேலே குறிப்பிட்ட செய்தி வெளிவரவில்லை. திரு R. சத்தியமூர்த்தி ஆசிரியராக கொண்ட தினமலர் ஈரோடு, சேலம் பதிப்புகளில் இந்த செய்தி வெளியாகி உள்ளது – கி.ராமசுப்பு, ஆசிரியர்” என்று குறிப்பிட்டுள்ளது.
திரு கி.ராமசுப்பு ஆசிரியராக கொண்ட தினமலர் சென்னை,கோவை ,மதுரை ,பாண்டிச்சேரி ,திருநெல்வேலி ,நாகர்கோவில் பதிப்புகளில் மேலே குறிப்பிட்ட செய்தி வெளிவரவில்லை.
திரு R. சத்தியமூர்த்தி ஆசிரியராக கொண்ட தினமலர் ஈரோடு,சேலம் பதிப்புகளில் இந்த செய்தி வெளியாகி உள்ளது
– கி.ராமசுப்பு,ஆசிரியர் pic.twitter.com/4yFEEkYbA5
— Dinamalar (@dinamalarweb) August 31, 2023
ஆனால், இவ்வாறு செய்தி வெளியிட்டதற்காக ஆர்.சத்தியமூர்த்தி தரப்பில் இருந்து எந்தவொரு வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.