This article is from Mar 21, 2022

மொத்தமாக வாங்கும் டீசல் விலை ரூ.25 வரை உயர்வு.. சில்லறை விலையில் வாங்கும் அரசு கழகம். இனி என்னவாகும் ?

ந்தியாவில் கடந்த 136 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவையின் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. குறிப்பாக, உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் 100 டாலர்களுக்கு மேல் சென்றது. அப்போதும் கூட 5 மாநிலத் தேர்தல் நடைபெற்ற காரணத்தினால் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தாமல் இருந்தது. எனினும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த ரஷ்யாவிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கும் முடிவை இந்திய அரசாங்கம் எடுத்தது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் இழப்பின் காரணமாக, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள்(OMC) மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.23 முதல் ரூ.25 வரை உயர்த்தி உள்ளன.

சில்லறை நுகர்வோரை விட வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், ரயில்வே மற்றும் போக்குவரத்து கழகங்கள் போன்ற மொத்த நுகர்வோருக்கு வழங்கப்படும் டீசல் 25 ரூபாய் வரை அதிகமாக விற்கப்படும். சில்லறையாக வாங்கப்படும் டீசல் விலையில் ஏற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக வாங்கப்படும் டீசலின் விலை லிட்டருக்கு ரூபாய் 25 வரை அதிகம் என்பதால் , ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு மேலும் இழப்புகளே அதிரிக்கும். எனவே மொத்த கொள்முதலுக்கு பதிலாக சில்லறையாக விற்பனை விலையில் பேருந்துக்கான டீசலை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள சுமார் 20,000 பேருந்துகளை இயக்க ஒரு நாளைக்கு 16 லட்சம் லிட்டர் டீசல் கொள்முதல் செய்யப்படுகிறது. சென்னை நிலவரப்படி, சனிக்கிழமையன்று பெட்ரோல் நிலையங்களில் ரூ.91.59 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் தற்போது ரூ.114 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் ஏற்கனவே நஷ்டத்தில் உள்ள போக்குவரத்து கழகத்திற்கு ஒரு நாளைக்கு ரூ3.5 கோடி இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இதை தவிர்க்க, ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள எண்ணெய் நிறுவனங்களை சந்தித்து தமிழ்நாட்டின் எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கத்தின் பேருந்துகளுக்கும் சில்லறை சந்தை விலையில் நேரடியாக டீசலை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் டீசல் விலை உயர்வதால், பேருந்து கட்டணங்கள் உயர வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்க, பேருந்து கழகத்திற்கு சில்லறை விலையில் டீசல் வாங்கப்படும் என கூறினாலும் கடந்த முறை நிகழ்ந்தது போன்ற சிக்கல்கள் இருக்குமா எனக் கேள்விகள் எழுகிறது.

2013 போல் நிகழுமா ?

கடந்த 2013-ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போது காங்கிரஸ் அரசு மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் டீசலுக்கு ரூ11 வரை விலை உயர்த்தியது. அதற்கு தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அரசு பேருந்துகளுக்கு சில்லறை விற்பனை நிலையங்களில் எரிபொருள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால், பயணிகள் பேருந்தில் இருக்கும் போது விற்பனை நிலையங்களில் காத்திருந்து டீசல் நிரப்பி சென்ற சிரமங்கள் உண்டானது. அதுபோன்று தற்போதும் சிரமங்கள் ஏற்படுமா எனக் கேள்விகள் எழுகிறது.

மற்றொரு சிக்கல் என்ன ?

” மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் டீசல் விலை ரூ.25 வரை அதிகரித்ததன் காரணமாக சில்லறை விற்பனை நிலையங்களில் விற்கப்படும் டீசலின் தேவை அதிகரித்து வருகிறது. விலை உயர்வை எதிர்பார்த்த டீலர்கள், பி2பி மற்றும் பி2சி வாடிக்கையாளர்கள் முன்னதாகவே தங்கள் டேங்குகளை நிரப்பிக் கொள்ள அதிக அளவு எரிபொருளை வாங்குவதாக ” ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி லிமிடெட் உடைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளனர்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கான ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, எரிபொருள் விலையின் உயர்வை எதிர்பார்த்து பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வு கடுமையாக அதிகரித்து உள்ளதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார்.

மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் டீசல் விலை உயர்வதால் சில்லறை விற்பனை நிலையங்களை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டு அவற்றிக்கான தேவையும் அதிகரிக்கும். மொத்த கொள்முதல் குறைந்தால் அதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கும் பாதிப்பு உண்டு. மேலும், பெட்ரோல் விலை என்னவாகும், இதன் பிறகு சில்லறை விற்பனை விலை உயர்ந்தால் என்னவாகும் என அச்சங்கள் ஏற்படவே செய்கின்றன.

Links : 

Bulk diesel price up, Tamil Nadu state transport corporations turn to retail outlets

Explained: Hike in price of bulk diesel and its impact

Please complete the required fields.




Back to top button
loader