This article is from Oct 12, 2019

இப்படி கூட பிஸினஸ் செய்யலாமா? | அண்ணாச்சிக் கதைகள் தொடர் !

வியாபாரத்தில் புதுமை அல்லது புதுமையான வியாபாரம் தான் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும். அது தான் நம் வியாபாரத்தை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காண்பிக்கும். விரைவில் வாடிக்கையாளர் எண்ணிகையை அதிகரிக்கவும், அதிக வருவாயை பெறவும் இது தான் எளிய சூத்திரம்.

வியாபாரத்தில் புதுமை – எல்லோரும் டீக்கடை போடுகிறார்கள், நாமும் டீக்கடை போடுகிறோம், இதில் என்ன புதுமை செய்ய முடியும் ? யோசித்தால் செய்யலாம் . விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை நகரில் உள்ள செம்பட்டையன் பால் கடையில் 25 ஆண்டுகளுக்கு முன்பே பனங்கற்கண்டு பால் கிடைக்கும். நள்ளிரவு இரண்டு மணி வரைக்கும் கூட கடை இருக்கும். எல்லோரும் சீனி போட்டு கொடுக்கின்ற காலத்தில் பனங்கற்கண்டை யோசித்து 10 மணிக்கு கடையை பூட்டாமல் அருகில் உள்ள பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை முடித்து வருகின்ற நள்ளிரவு வரை கடையை வைத்தது தான் புதுமை.

புதுமையான வியாபாரம் – எத்தனையோ சொல்லலாம். சென்னை திநகரில் உள்ள ஒரு கடையில் நீங்கள் அலுவலக மீட்டிங்கை நடத்தலாம் . வியாபாரம் சம்மந்தமான வாடிக்கையாளர்களை சந்திக்கலாம். புதிய தொழில் முயற்சியில் இருப்பவர்கள் அலுவலகமே இல்லாமல் பகல் நேரத்தில் இங்கு அமர்ந்து பணி செய்யலாம்.

அந்த இடத்திற்கு வாடகை எதுவும் கொடுக்க வேண்டாம். ஆனால் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறையும் நீங்கள் அமர்ந்து இருக்கின்ற இடத்திற்கு பழச்சாறோ, திண்பண்டமோ வந்துவிடும். அதற்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும். அதே போல் வெளி ஊரில் இருந்து சென்னை வருபவர்களுக்கு காலையில் குளித்து உடைமாற்றியோ, முடி வெட்டியோ ,சவரம் செய்தோ அங்கிருந்து கிளம்பிச் செல்லலாம். இரவு படுக்கும் இடம் வேண்டாம் என்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு. சலூனுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். இது புதுமையான வியாபாரம்.

இப்போது நாம் பார்க்க போவது புதுமையான வியாபாரம் . எல்லோரையும் போலவே வெளியூருக்கு பணி நிமித்தமாக சென்ற தன் மகன் மதனுடன் உரையாடும் போது ” நம்ம ஊர் சாப்பாடு எல்லாம் கிடைக்குதாப்பா? வேளை வேளைக்கு சரியா சாப்பிடுகிறாயாப்பா? ” என விசாரிப்பார் கணேஷ் வாத்தியார். அரசாங்க பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அவர் பையன் பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்.

பேச்சிலர் பையன்களுக்கு வெளியூரில் சாப்பாட்டு தான் பெரிய பிரச்சனை.

வெளிநாட்டில் / வெளி மாநிலத்தில் இருப்பர்களுக்கு நம்ம ஊர் தமிழ் உணவின் அருமை அங்கு போனபின் தான் தெரியும். சரியான சுவையில் அங்கே நம் உணவு கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் விலை அதிகமாக இருக்கும். பெரும்பான்மையான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் இருந்து போகும் போது அவர்கள் எடுத்து செல்லும் பயணப் பெட்டிகளில் குழம்பு பொடி, சாம்பார் பொடி, ஊறுகாய், இனிப்பு கார வகைகள் இருக்கும். எல்லாம் அந்த ருசிக்காக தான்.

மதனுக்கு கடையில் உண்பது பிடிக்காது. அதே சமயம், அவருக்கு பெரிதாக சமைக்க தெரியாது. சமையலுக்கு ஆள் வைத்தால் வாங்குகிற சம்பளத்தில் கட்டுபடி ஆகாது. மதன் ஒரு முறை அப்பாவிடம் பேசும் போது குழம்பு , காய்கறிகள் யாராவது கொடுத்தால் நானே சாதம் குக்கரில் வைத்து சமாளித்து விடுவேன் என்றார்.

எங்கள் பி.இ.டி மாஸ்டர் வேணு சார் கூட அடிக்கடி சொல்லுவார் . பசங்க சமையல் கத்துகிட்டா பொண்டாட்டி கோச்சுகிட்டு அம்மா வீட்டுக்கு போனால் கூட சாப்பாட்டுக்கு கவலை இல்லை. வீட்டு சாப்பாடு சாப்பிட்டு உடம்மை பிட்டா வச்சுக்கலாம் . உண்மைதான் கல்யாணம் ஆனவர்களிடம் கேட்டுப் பாருங்கள் பற்கள் தெரிய சிரிப்பார்கள்.

ஒய்வு பெற்ற பின் தொழில் தொடங்க வேண்டும் என எண்ணி இருந்த கணேஷ் வாத்தியாருக்கு இந்த வார்த்தை தான் தொழிலுக்கான முதல் பொறியாகியது.

தன் மகனைப் போலவே வேலைக்கு செல்வோருக்கு இருக்கும் பிரச்சனை இரவு உணவுக்கான சமையல். கணவன் மனைவி இருவரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்தால், இருவரும் இரவு வீட்டிற்கு வரும் போது மணி 8 ஐ தாண்டி விடும். தினமும் சூடாக சமைப்பதும் பிரச்சனை. தினமும் கடையில் வாங்குவதும் பர்ஸ்க்கு பிரச்சனை.

சிக்கன் குழம்பு ரூபாய் 50. இரண்டு பேர் தாராளமாக சாப்பிடலாம். திநகர் “குழம்புக் கடையில்” ரூபாய் 30 லிருந்து குழம்பு வகைகள் கிடைக்கிறது. ஆம், கணேஷ் வாத்தியார் ஆரம்பித்த கடையின் பெயரே அது தான். சில நேரங்களில் கடையின் / பொருளின் பெயரே நமக்கு விளம்பரத்தை தேடித் தரும் . வாடிக்கையாளர் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதும் எளிது.

மீன், மட்டன், தலைக்கறி, முட்டைக் குழம்பு என அசைவ குழம்புகள் மற்றும் வத்தல் குழம்பு , டிபன் சாம்பார், மதிய உணவிற்கான சாம்பார், ரசம் என அனைத்து வகைகளும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.

சைவம், அசைவம் என தனியாக சமைக்கிறார்கள். தினமும் புதிதாக சமைக்கிறார்கள். மிச்சம் வருவது கிடையாது. அப்படியே வந்தாலும் கடையில் பணிபுரிபவர்களுக்கு இலவசமாக கொடுத்து விடுகிறார். தெரியாமல் அசைவ உணவில் இட்ட கரண்டியை சைவ உணவில் போட்டுவிட்டால். அதை அப்படியே தனியாக எடுத்து வைத்து விடுகிறார்கள் . வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது கிடையாது. குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் கடை இருக்கும்.

வேலை முடித்து செல்வோர் ஒரு தோசை மாவு பாக்கெட்டோ, சப்பாத்தியோ வாங்கிக் கொண்டு இங்கே குழம்பு வாங்கிக் கொள்கிறார்கள். மதிய உணவிற்கு சாதம் மட்டும் வீட்டில், குழம்பு இங்கே. குறைவான விலையில் வாடிக்கையாளர்களின் தேவையை தரமாக பூர்த்தி செய்கிறார்கள்.

வீட்டில் இருந்தே பகுதி நேரமாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த தொழிலை முயற்சித்து பார்க்கலாம்.

– அனு

Please complete the required fields.




Back to top button
loader