சிஏஏ, என்ஐஏ சட்ட மசோதா வந்தபோது திமுக வெளிநடப்பு செய்ததா ?

2019 ஆம் ஆண்டு ஆரம்பித்த குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வாக்குவாதங்கள், போராட்டங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, வெற்றிகரமாக அந்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. ஒரு சட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டாலும் அதனைச் சுற்றி உள்ள குறைகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய முயல்வதே ஜனநாயகம் ஏற்படுத்தி தந்த உரிமையும், அடிப்படைப் பொறுப்பும்.
அதன்வழியில் மனிதர்களை, குடிமக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுப்படுத்துவதாக அமைந்திருக்கும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னும் கேள்விகளும், சர்ச்சைகளும் எழுந்த வண்ணமே உள்ளது.
இதுதொடர்பான சர்ச்சைகளுக்கு தமிழகமும் விதிவிலக்கில்லை. தற்போது நடந்து முடிந்திருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் ஏறத்தாழ அனைத்துக் கட்சிகளும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாடையே அவர்களது தேர்தல் அறிக்கைகளில் வெளிப்படுத்தினர். தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இருவருமே எதிரான நிலைப்பாட்டையே அறிக்கையில் வெளிப்படுத்தினர்.
(ஆனால் இதற்கு முரணாக அதிமுக பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.)
தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் முடிந்த பின்னரும் குடியுரிமை திருத்த மசோதா மற்றும் தேசிய புலனாய்வு அமைப்புச் சட்ட திருத்தம் தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவலாக காணப்படும் நிலையில் பல செய்திகள் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியது. இது குறித்து விரிவாக பதிவிடுமாறு வாசகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர். எனவே, பாராளுமன்றத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் நிலைப்பாடும், அவர்களது வாக்கு விவரங்களும் பின்வருமாறு :
குடியுரிமைத் திருத்த மசோதா (மக்களவை) :
திமுக கூட்டணி எம்பிக்களின் எண்ணிக்கை – 24 (திமுக)+ 14(கூட்டணி)
அஇஅதிமுக எம்பிக்களின் எண்ணிக்கை – 1
இதில் திமுகவை சேர்ந்த 9 எம்பிக்கள் வாக்கு அளிக்கவரவில்லை, எனவே 15 திமுக எம்.பி க்கள் உட்பட, கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் , விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் இடதுசாரி கட்சிகளும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். ஆனால் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் எண்ணிக்கையின் காரணமாக 311 வாக்குகள் பெற்று மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவை :
திமுக – 7
அஇஅதிமுக+ – 10
மக்களவையை பொறுத்தவரை பாஜக அரசு பெரும்பான்மையைப் பெற்றிருந்ததால் எளிதாக மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் மாநிலங்களவையைப் பொறுத்தவரை பாஜக அரசு தனது கூட்டணிக் கட்சியின் நிலைப்பாடையே நம்பி உள்ளது.
இதிலும் திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். ஆனால் அஇஅதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் உட்பட அனைவரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக 125 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிரூபித்து மாநிலங்களவையிலும் மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு.
தேசிய புலனாய்வு அமைப்புச் சட்ட திருத்தம் :
குடியுரிமை திருத்தச் சட்டம் போன்று தேசிய புலனாய்வு அமைப்புச் சட்ட திருத்த மசோதாவும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியது. பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான குற்றங்களை விசாரித்து கைது செய்வதற்கான அதிகாரத்தைப் பெற்றிருந்த தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) 2008 ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இச்சட்டத் திருத்த மசோதாவை 2019 ஆம் ஆண்டு பாஜக அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதன்படி, கடத்தல்கள், போலி நாணயம் புழக்கம், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல் மற்றும் இணைய வழி பயங்கரவாதம் போன்ற குற்றங்களை விசாரிக்கும் அதிகாரத்தையும் NIA வுக்குப் பெற்றுத் தருவதாக அமைந்தது. மேலும் இத்திருத்தம் மத்திய அரசுக்கு அமர்வு நீதிமன்றங்களை என்ஐஏ சோதனைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களாக நியமிக்க உதவுகிறது.
2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மற்றும் ஒரு மசோதாவான சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் (UAPA) மூலம் ஒரு என்ஐஏ அதிகாரி பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், சோதனை நடத்தும் அதிகாரத்தையும் அவருக்கு வழங்குகிறது. இதற்கு அந்த மாநில காவல்துறை அதிகாரியிடம் அவர் அனுமதி பெற அவசியம் இல்லை. எனவே இச்சட்ட திருத்தம் மத்திய அரசு அதிகாரிகளுக்கு அதிகப்படியான அதிகாரத்தையும், மாநில காவல்துறையின் அதிகாரத்தை குறைக்கும் படியும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது என்றும் கண்டனங்கள் எழுந்தன.
இருப்பினும், மக்களவையில் சுமார் 278 வாக்குகளைப் பெற்று மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக வெறும் ஆறு வாக்குகளே பதிவாகின. மாநிலங்களவையைப் பொறுத்தவரை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இத்திருத்தத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்ப்புகள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.
திமுக எம்.பி அ.ராசா நியூஸ் மினிட் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது “நாங்கள் வேறு நிலைப்பாட்டை எடுத்து இருந்திருந்தால் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பவர்கள் என எங்களை முன்னிறுத்த பாஜக முற்படும்.” எனக் கூறினார்.
அப்டேட் :
என்ஐஏ திருத்த சட்டம் 278-6 என்ற வாக்கின் அடிப்படையில் மக்களவையில்(லோக்சபா) நிறைவேற்றப்பட்டது. இதில் திமுக எம்பிகளும் அடங்குவர். இச்சட்டத்திற்கு மக்களவையில் திமுக எம்பிக்கள் ஆதரவாக வாக்கு செலுத்தி இருந்தனர்.
என்ஐஏ சட்டம் தொடர்பாக மாநிலங்களவையில்(ராஜ்யசபா) நடைபெற்ற வாக்கெடுப்பில் திமுக ஆதரவாக, எதிராக வாக்களித்ததா அல்லது வெளிநடப்பு செய்ததா என்பது குறித்த தகவல் கிடைக்காத நிலையில், திமுக எம்.பி திருச்சி சிவா அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, அது தொடர்பான விவரங்களை அளிப்பதாக தெரிவித்து இருந்தார். விவரங்களை அவர் அளிக்கும்பட்சத்தில் விரைவாக அதை இணைக்கிறோம்.
திமுக மட்டும் அதன் கூட்டணி கட்சி சேர்த்து எண்ணிக்கை 29 என்பதற்கு பதிலாக 24 என்று தவறுதலாக இதற்க்கு முன்னர் பதிவிட்டு உள்ளோம். இதை இப்பொழுது புதிய பதிப்பில் திருத்தி விட்டோம். திமுகவை சேர்ந்த எம்பிக்கள் 24 நபர்கள், அதில் 9 எம்பிக்கள் வாக்கு அளிக்கவரவில்லை, எனவே 15 திமுக எம்பிக்கள் மட்டுமே வாக்கு அளித்து உள்ளனர்
- அருண் ப்ரசாத், மாணவ பத்திரிகையாளர்(பயிற்சி)
links :
https://eparlib.nic.in/bitstream/123456789/788219/1/lsd_17_02_09-12-2019.pdf
https://rsdebate.nic.in/bitstream/123456789/703585/1/PD_250_11122019_p511_p652_20.pdf
nia-amendments-bill-why-opposition-raised-objections-voted-it-anyway
Parliament Live Updates: UAPA Bill passed with 147 votes in favour, 42 against
parliament-approves-amendment-to-uapa-bill-nia-gets-power-to-label-individual-as-terrorist