சிஏஏ வழக்கில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டாரா ?

சில தினங்களுக்கு முன்பாக தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீமானையும் கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவர் பதிவிட்டதால் சாட்டை யூடியூப் சேனலின் துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் நேரில் சென்று அவரை மன்னிப்பு வீடியோ வெளியிட செய்துள்ளனர். இதனால் வினோத் கே.கே.நகரில் அளித்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இங்கிருந்தே சாட்டை துரைமுருகன் மீதான தொடர் புகார்களும், கைது நடவடிக்கைகளும் தொடங்கியது. இதையடுத்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மணல் கடத்தலுடன் தொடர்புப்படுத்தி பேசியதாக கரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி கொடுத்த புகார் மீதான கைது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து இணையதளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் வக்கீல் ராஜசேகர் அளித்த புகாரால் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது சாட்டை துரைமுருகன் லால்குடி சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
2020ல் சிஏஏ சட்டத்திற்கு எதிராக அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற இஸ்லாமிய மக்களின் ஒன்று கூடலில் பேசிய வழக்கிற்காக நேற்று தம்பி சாட்டை துரைமுருகனை லால்குடி சிறைச்சாலையில் கைது செய்திருக்கிறார்கள். நாளை பட்டுக்கோட்டை JMல் அவர் ஆஜராக உள்ளார். இதுதான் இஸ்லாமியர் பாதுகாவல் அரசு.🥺 pic.twitter.com/UN6e4hOFIB
— Mani Senthil/மணி செந்தில் (@manisenthill) June 16, 2021
CAAவுக்கெதிரானப் போராட்ட வழக்குகள் அதிமுக ஆட்சியிலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் பழிவாங்கும் நோக்கோடு அண்ணன் துரைமுருகன் மீது CAA போராட்டத்தைக் காட்டி மீண்டுமொரு வழக்கைப் பாய்ச்சிருக்கிறது திமுக.
இப்போதாவது வாய்திறப்பீர்களா சனநாயகவாதிகளே? நடுநிலை(!)யாளர்களே?
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) June 16, 2021
கடந்த ஆண்டு சிஏஏ போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக கலந்து கொண்ட சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் போடப்பட்ட பழைய வழக்கை தற்போதுள்ள அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து பகிரத் தொடங்கினர்.
இது தொடர்பாக ஜூன் 17-ம் தேதி மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் மணி செந்தில் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, ” சாட்டை துரைமுருகன் மீதான வழக்குகளுக்கு ஜாமீன் பெற முயன்று வருகிறோம். இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சிஏஏ போராட்ட வழக்கில் சிறையில் வைத்தே துரைமுருகனை கைது செய்துள்ளனர். இதுகுறித்து துரைமுருகன் தெரிவித்து இருந்தார். சிறையில் வைத்து கைது செய்துள்ளதால் அதுதொடர்பான ஆவணங்கள் இல்லை. அதற்கும் சேர்த்தே ஜாமீன் பெற உள்ளோம் ” எனக் கூறி இருந்தார்.
அவரிடம், இன்னும்(நேற்று) பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லையே என கேள்வி எழுப்பிய போது, ” திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம். பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டு பேசி பாருங்கள் ” எனத் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து, தஞ்சை மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் பேசுகையில், நீங்கள் கூறுவது போல் அவர் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்து இருந்தார்.
நாம் தமிழர் கட்சியினர் கூறியதுபடி பார்த்தால், சாட்டை துரைமுருகனை நேற்றே(ஜூன்17) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், மற்றொரு வழக்கில் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளதாக நேற்று செய்தியில் வெளியாகி இருக்கிறது. சிஏஏ வழக்கு தொடர்பாக சாட்டை துரைமுருகனுக்கு நீதிமன்ற சம்மன், காவல்துறை கைது தொடர்பான செய்திகள் ஏதுமில்லை.
ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டால் 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட வேண்டும் அப்படி இல்லாமல் பல நாட்கள் கழித்து ஆஜர் செய்ய முடியாது என்கிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஐய்யனார்.
கடந்த ஆண்டு போடப்பட்ட சிஏஏ வழக்கில் சாட்டை துரைமுருகன் தற்போது கைது செய்யப்பட்டதாக உறுதியான தகவல்கள் இல்லை. நாம் தமிழர் கட்சியினர் மட்டுமே தெரிவித்து வருகிறார்கள். அந்த தகவலை காவல்துறை தரப்பிலும் மறுத்து இருக்கிறார்கள்.
அப்டேட் :
ஒருவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டால் 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என வழக்கறிஞர் கூறியதை குறிப்பிட்டு இருந்தோம். ஆனால், Prisoners Transmit warrant என்பதில் 24 மணி நேரம் என ஏதும் இல்லை என 2011ம் ஆண்டு கே.என்.நேரு வழக்கு விவரம் ஒன்றை நம் பதிவின் கீழே கமெண்ட் செய்தனர்.
இதுகுறித்து, வழக்கறிஞர் ஐய்யனார் கூறுகையில், ” சிறையில் இருப்பவரை, விடுமுறை மற்றும் கைது செய்த இடத்தில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் இடம் தொலைவாக இருக்கும் சந்தர்ப்பங்களில் அதற்கான நேரத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ட்ரான்ஸ்மிட் ஆர்டர் கொடுத்திருந்தாலும் கூட எவ்வளவு சீக்கிரம்(Earliest) ஆஜர் செய்ய வேண்டுமோ அந்த நாளே கொடுப்பர், நீண்ட நாட்கள் கொடுக்க வாய்ப்பில்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.
ஜூன் 17- வெளியான தந்தி செய்தியில், ” கருணாநிதி தொடர்பான அவதூறு வீடியோ வழக்கில் நேற்று போலீசார் மற்றும் திருவிடைமருதூர் கோர்ட்டு சாட்டை துரைமுருகனுக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து திருப்பனந்தாள் போலீசார் லால்குடி சிறையில் மற்றொரு வழக்கில் அடைக்கப்பட்டுள்ள சாட்டை துரைமுருகனை திருவிடைமருதூர் கோர்ட்டில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி நிலவரசன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர் ” என வெளியாகி இருக்கிறது.
லால்குடி சிறையில் இருந்த துரைமுருகனை சம்மன் அனுப்பிய அடுத்த நாளே 80கிமீ தொலைவில் உள்ள திருவிடைமருதூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி உள்ளனர். லால்குடியில் இருந்து பட்டுக்கோட்டை 100 கி.மீ தொலைவிலேயே அமைந்து இருக்கிறது. மேலும், சாட்டை துரைமுருகனை சிஏஏ வழக்கில் கைது செய்யவில்லை என காவல்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.