NHAIன் சுங்கச்சாவடி செயல்பாடுகள்.. சிஏஜி அறிக்கை கூறுவதென்ன ?

இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) கடந்த ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2021 வரையிலான “இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடி செயல்பாடுகள்” குறித்த தென்னிந்திய மாநிலங்களுக்கான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிக்கைக்காக ஐந்து தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கேரளாவில் உள்ள 41 சுங்கச்சாவடிகளை இந்தத் தணிக்கைக்குழு தேர்ந்தெடுத்தது.
இந்த அறிக்கை சுங்கச்சாவடியின் பின்வரும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
- கட்டண வசூல்
- தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்புகள்
- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வசதிகள்
1. கட்டண வசூல் (Toll Collection)
2017–18 முதல் 2020–21 வரை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் அதன் ஒப்பந்த நிறுவனங்கள் (Concessionaires) ஈட்டியுள்ள டோல் வருவாயில் ரூ.28,523.88 கோடி (28.75%) தொகையை தென் மாநிலங்கள் பங்களித்துள்ளன.
விதியை மீறிய டோல் கட்டண வசூல்
திருத்தப்பட்ட சுங்கக் கட்டண விதிகளின்படி, கட்டுமானப் பணிகள் முடிக்காமல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. இந்த விதிகளை மீறி, ஏற்கனவே இங்கு உள்ள நான்கு வழிச்சாலைகளை மேம்படுத்தும் போது, மே 2020 முதல் மார்ச் 2021 வரையிலான மாதங்களில் மூன்று சுங்கச்சாவடிகளில் (நத்தவலசை, சலகேரி மற்றும் ஹெப்பலு) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பயனர் கட்டணத்தை வசூலித்துள்ளது. இந்த செயல்பாடின் மொத்த வருமானம் ரூ.124.18 கோடிகள்.
தமிழ்நாட்டின் பரனூர் சுங்கச்சாவடியில் பயனாளர்களின் கட்டணத்தை 75% ஆகக் குறைத்திருக்கவேண்டும். ஆனால் NHAI இவ்வாறு குறைப்பதை தாமதப்படுத்தியது. மேலும், கட்டுமானம் மற்றும் மேம்படுத்தல் திட்டங்களின் போது பயனாளர்களின் கட்டணத்தை வசூலிக்ககூடாது என்ற விதியை மீறி, ஆந்திராவின் மடபம் சுங்கச்சாவடியில் ஒவ்வொரு ஆண்டும் பயனர் கட்டணத்தை NHAI உயர்த்தியது. ஆகஸ்ட் 2018 முதல் மார்ச் 2021 வரை, NHAI பரனூர் மற்றும் மடபம் ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளில் வசூலித்த மொத்த பயனர் கட்டணம் ரூ. 7.87 கோடி. இந்த ஐந்து சுங்கச்சாவடிகளில் விதியை மீறி கட்டணம் வசூலித்ததால், சாலைப் பயனாளிகளுக்கு ரூ.132.05 கோடி தேவையற்ற சுமை ஏற்பட்டுள்ளது
பரனூர் பொது நிதியுதவி பெற்ற சுங்கச்சாவடியின் நிர்வாகத்தின் கீழ், 1954-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு பாலமும் வரும். 2017–18 முதல் 2020–21 வரை மட்டும், அந்த இடதுப்புற பாலத்தை கடந்து சென்ற சாலை பயனாளர்களிடமிருந்து ரூ.22.10 கோடி ரூபாயை NHAI வசூலித்துள்ளது. ஆனால், செப்டம்பர் 1956க்குப் பிறகு கட்டப்பட்ட பாலங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதியை NHAI மீறியுள்ளது.
டோல் கட்டணங்களை வசூல் செய்ய தவறியதன் காரணமாக மட்டும் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புகள்
தமிழ்நாட்டின் மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை 44 இல் உள்ள உயர்மட்ட பாலங்கள்/கட்டமைப்புகளுக்கான பயனர் கட்டணம் தாமதமாக வசூலிக்கப்பட்டதால், NHAIக்கு ரூ. 16.68 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
2008, NH கட்டண விதிகளின்படி கட்டுமானம் முடிந்த தேதியிலிருந்து 45 நாட்களுக்குப் பிறகு கட்டணம் வசூலிக்கலாம். ஆனால் பொது நிதியுதவி பெறும் திட்டங்களின் கீழ் செயல்படும் நான்கு சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பதில் தாமதம் ஏற்பட்டது, இதன் மூலம் NHAIக்கு ரூ. 64.60 கோடி இழப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில், தனியார் சுங்கச்சாவடி ஒப்பந்தகாரர்களுடன் (BOT Toll) போடப்பட்ட இரண்டு NH 44 சாலைகளுக்கான சுங்கவரி வசூலிப்பதற்கான ஒப்பந்தத்தில், NHAIக்கான வருவாய் பகிர்வு பற்றி குறிப்பிடப்படாததால் நெடுஞ்சாலை ஆணையம் ரூ.133.36 கோடி ரூபாய் வருவாயை இழந்தது.
தணிக்கையின்படி, NHAI ஆனது ஒப்பந்ததாரரிடம் எதிர்மறை மானியம்/பிரீமியம் (negative grant/premium) மற்றும் அதன் வட்டியிலிருந்து மொத்தம் ரூ.295.78 கோடி வசூலிக்கத் தவறிவிட்டது.
கூடுதலாக, NHAI ஒரு ஒப்பந்ததாரரின் கார்ப்பரேட் உத்தரவாதமான ரூ.1,073.55 கோடியை தள்ளுபடி செய்தது. மேலும் மற்றொரு ஒப்பந்ததாரரின் வங்கி உத்தரவாதமான ரூ.43.93 கோடி மற்றும் ஒத்திவைக்கப்பட்ட பிரீமியங்களின் மொத்த வட்டியுடன் செலுத்த வேண்டிய தொகையான ரூ.18.29 கோடியையும் மார்ச் 2021 நிலவரப்படி வசூலிக்கத் தவறிவிட்டது.
பொது நிதியுதவி பெறும் சுங்கச்சாவடிகளில் அதிகளவில் ஏற்பட்ட விதிவிலக்குகளும் மீறல்களும்
பொது நிதியில் இயங்கும் பரனூர், ஆத்தூர், கப்பலூர், லெம்பளக்குடி ஆகிய 4 சுங்கச்சாவடிகள் மற்றும் செங்குறிச்சி, கணியூர், வேலஞ்செட்டியூர், பாளையம், வைகாம் சாலை ஆகிய 6 தனியார் நிறுவனம் வாயிலாக செயல்படும் சுங்கச்சாவடிகள் உட்பட 10 சுங்கச்சாவடிகளில் விதிவிலக்குகள் மற்றும் விதிமீறல்கள் குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், பொது நிதியுதவி பெறும் சுங்கச்சாவடிகளில், சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள், விதியை மீறி கட்டாயமாக நுழைதல் மற்றும் பிற காரணங்களால், பொது நிதியுதவி பெறும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாத வாகனங்களின் சதவீதமானது தனியார் வாயிலாக செயல்படும் சுங்கச்சாவடிகளைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக உள்ளது.
தனியார் வாயிலாக செயல்படும் சுங்கச்சாவடிகளில் விலக்கு அளிக்கப்பட்ட வகை அல்லது விதிமீறல் வாகனங்களின் எண்ணிக்கை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் அதிகபட்சமாக 12.60 சதவீதம் பதிவாகியுள்ளது.
பொது நிதியுதவி பெறும் சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சமாக 18.32 சதவீதமாகவும் (லெம்பளக்குடி சுங்கச்சாவடி) , அதிகபட்சமாக 53.27 சதவீதமாகவும் (பரனூர் சுங்கச்சாவடி) பதிவாகியுள்ளது. பரனூர் சுங்கச்சாவடியில் 62 லட்சம் வாகனங்கள் இவ்வாறு சென்றுள்ளன.
இதில், மார்ச் 20, 2020 முதல் ஏப்ரல் 20, 2020 வரை கொரோனா வைரஸ் காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும் என்பது குறித்த அரசின் அறிவிப்பை தி ஹிந்து வெளியிட்டுள்ள கட்டுரையின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
2. தேசிய நெடுஞ்சாலைகளை பராமரித்தல் (Maintenance of National Highways)
தனியார் வாயிலாக செயல்படும் சுங்கச்சாவடிகள், 2 முதல் 76 மாதங்கள் வரை மேலடுக்கு வேலைகள் நடைபெற்ற 7 சாலைகளில் பணிகளைத் தாமதப்படுத்தியதால் ஏற்பட்ட சேதத்திற்கான செலவான ரூ.391.27 கோடியையும், ஒரு பராமரிப்பு ஒப்பந்தகாரரிடமிருந்து பெற வேண்டிய அபாய மற்றும் சேதத்திற்கான செலவான ரூ.53.84 கோடியையும், NHAI பெறத் தவறிவிட்டது.
இதேபோன்று நான்கு சாலைகளில் வழக்கமான பராமரிப்புப் பணிகளைச் செய்யத் தவறியதற்காக ரூ.174.63 கோடியை தனியார் வாயிலாக செயல்படும் சுங்கச்சாவடிகளிடமிருந்து NHAI வசூலிக்கத் தவறிவிட்டது. ஐந்து பொது நிதியுதவி பெறும் சுங்கச்சாவடிகளின் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கவும் இது தவறிவிட்டது.
நீட்டிக்கப்பட்ட ஆறு சாலைகளில் கணக்கெடுப்பு முடிக்கப்படவில்லை. கூடுதலாக, நான்கில் மோசமான நிலை இருந்தபோதிலும் மேலடுக்கு வேலை முடிக்கப்படாமலேயே சாலை கணக்கெடுப்பு நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
3. சாலைப் பயனாளர்களின் வசதிகள் (Availability of Facilities and Amenities to Road Users)
இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) அனைத்து சுங்கச்சாவடிகளின் இருபுறமும் தூய்மை இந்தியா திட்டத்தின் (Swachh Bharat Mission) கீழ் 24/7 கழிப்பறை வசதியை வழங்க NHAI க்கு உத்தரவிட்டது. ஆனால் 41 சுங்கச்சாவடிகளில், 5-ல் கழிப்பறைகள் கட்டப்படவில்லை, 13 சுங்கச்சாவடிகளில் ஒருபுறம் மட்டுமே கழிப்பறைகள் உள்ளன, 3 சுங்கச்சாவடிகளில் கட்டப்பட்ட கழிப்பறைகள் செயல்படாமல் உள்ளன.
சுங்கச்சாவடிகளின் இருபுறமும் நெடுஞ்சாலை நெஸ்ட் (மினி) வசதி மார்ச் 2018க்குள் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதில் கழிப்பறைகள், தண்ணீர் ஏடிஎம், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு மற்றும் சூடான மற்றும் குளிர்பானங்கள் போன்ற அத்தியாவசிய வசதிகள் அடங்கும். 41 சுங்கச்சாவடிகளில், 11-ல் அத்தகைய வசதிகள் இல்லை, 1 சுங்கச்சாவடியில் ஒரு பக்கத்தில் மட்டுமே உள்ளது, மேலும் 6 சுங்கச்சாவடிகளில் அவை கட்டுமானத்திற்குப் பிறகு செயல்படவில்லை.
ஐந்து பிராந்திய அலுவலகங்களின் கீழ் உள்ள 8,814 கிமீ நீளமுள்ள சாலைகளிலும், செடி மற்றும் மரம் வளர்த்தல் பணிகள் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் சாலையோரங்களில் 65.63 சதவிகித பணிகளும், சாலைகளின் நடுவில் 34.65 சதவிகித பணிகளும் மார்ச் 2021-இன் நிலவரப்படி சரிவர செய்யப்படாமல் உள்ளது.
இதே போன்று ஆம்புலன்ஸ் மற்றும் ரோந்து வாகன சேவைகளும் அனைத்து பொது மற்றும் தனியார் வாயிலாக செயல்படும் சுங்கச்சாவடிகளிலும் சிறப்பான முறையில் இருக்க வேண்டும். ஆனால் 6 பொது நிதியுதவி பெறும் சுங்கச்சாவடிகள் மற்றும் 8 தனியார் வாயிலாக செயல்படும் சுங்கச்சாவடிகள் என மொத்தமாக 14 சுங்கச்சாவடிகளில், NHAI கொள்கைக்கு ஏற்ப ஆம்புலன்ஸ் மற்றும் ரோந்து வாகனங்களில், மேம்படுத்தப்பட்ட சேவைகளை கொண்டிருக்கவில்லை. அவை பெரும்பாலும் பழைய வாகனங்களாகவும், அதிகமாகப் பயன்படுத்தப்பட்டவையாகவும் இருந்தன. ஆம்புலன்ஸ் வண்டிகள் விதிமுறைகளுக்கு மாறாக சிறிய வடிவில் இருந்தன மற்றும் ரோந்து வாகனங்களிலும் எதிர்பார்க்கப்பட்ட உபகரணங்கள் இல்லை.
அக்டோபர் 2020 முதல் ஜனவரி 2021 வரையிலான தணிக்கையின் போது, பரனூர், ஆத்தூர், லெம்பளக்குடி, கும்பளம், ரோல்மம்டா, கம்ஜால், மனோஹராபாத், கேஎன் ஹண்டி, கன்னோல்லி, ஹர்வால் மற்றும் பொட்டிப்பட்டு ஆகிய 11 சுங்கச்சாவடிகளில் எடைப் பாலங்கள் (Weigh Bridges) அமைக்கப்படவில்லை. கப்பலூர், ஹெப்பலு, சாலகேரி, மடபம், நத்தவலசை, வேம்பாடு, உங்குடுறு, ஈத்தகோட்டா, கிருஷ்ணாவரம் ஆகிய 9 சுங்கச்சாவடிகளில் எடைப் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவற்றில் சில எடைப் பாலங்கள் சரிவர இயங்கவில்லை, மேலும் சில எடைப்பாலங்கள் கட்டண மேலாண்மைக்கான மென்பொருளுடன் சரியாக இணைக்கப்படவில்லை. எனவே, இத்தகைய பொது நிதியுதவி பெறும் சுங்கச்சாவடிகளில் அதிக சுமை ஏற்றப்பட்ட வாகனங்களுக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை. எனவே இந்த அறிக்கையில் தேவையான இடங்களில் இத்தவறுகளை சரி செய்வதற்கான “தணிக்கை பரிந்துரைகளையும்” CAG குறிப்பிட்டுள்ளது.