கன்றுக்குட்டியின் உடலில் பொறிக்கப்பட்ட சூரியன் சின்னம்| தமிழகம் இல்லை, இலங்கை !

கட்டி வைக்கப்பட்டு உள்ள இளங்கன்று உடலில் சூரியன் சின்னமும், TP_M என்கிற ஆங்கில வார்த்தையும் பொறிக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் தமிழில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை பார்க்க முடிந்தது.

Advertisement

Facebook link | archive link

” கோமாளிகள் கூடாரம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டு இருக்கும் ஐந்தறிவு ஜீவிகள். ஏண்டா 5 அறிவு உள்ள இளம் கன்று மேலே சுடு கம்பி வைத்து சூரியன் சின்னம் போட்டிருக்கிக ” என்கிற வாசத்துடனும், சிலருக்கு எங்கு நடந்தது எனத் தெரியாமல் இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

வைரலாகும் கன்றுக்குட்டியின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் எந்தவொரு பதிவுகளும் கிடைக்கவில்லை. இளங்கன்றை துன்புறுத்தியது எங்கு நிகழ்ந்தது எனத் தேடுகையில், ஆகஸ்ட் 5-ம் தேதி Streets Of Tamileelam எனும் ட்விட்டர் பக்கத்தில், ” தேர்தல் பிரச்சாரம் எங்கையோ சென்றது : ஒரு தமிழ் அரசியல் கட்சி தங்கள் சின்னத்தை ஒரு கன்றின் மீது முத்திரை குத்தி, யாழ்ப்பாணத்தின் ஊரனியில் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்கு முன்னால் அதை கட்டியுள்ளனர் ” எனக் கூறி கன்றின் புகைப்படத்தை பகிரப்பட்டுள்ளது.

Twitter link | archive link

தமிழகத்தில் இளங்கன்று புகைப்படம் வைரலாவதற்கு முன்பே இலங்கையை சேர்ந்த ட்விட்டர் பக்கங்களில் அப்புகைப்படம் பகிரப்பட்டு உள்ளது. ஹை குவாலிட்டி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். இலங்கையில் 2020 நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற்றுள்ளது. இலங்கை தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சின்னத்தில் சூரியன் சின்னமும் இடம்பெற்று உள்ளது.

2020 பிப்ரவரி மாதம் வெளியான செய்தியில், ஐந்து தரப்பினர் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை மட்டக்களப்பில் உருவாக்கி உள்ளதாகவும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும் வெளியாகி இருக்கிறது.

Twitter link | archive link 

ஆகஸ்ட் 6-ம் தேதி Streets Of Tamileelam ட்விட்டர் பக்கத்தில், இந்த சம்பவம் குறித்து சில திருத்தங்கள் எனக் கூறி ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்றையும் இணைத்து பதிவாகி உள்ளது.அதில், ” முந்தைய பதிவில் கூறியது போன்று யாழ்ப்பாணத்தில் நிகழவில்லை, இச்சம்பவம் பட்டிகாலோவின் ஊரனி பகுதியில் நிகழ்ந்துள்ளது. சரஸ்வதி வித்யாலயா வாக்குச்சாவடி எண்.2 வெளியே உள்ள பகுதியில் கன்று கட்டப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களால் சம்பவம் குறித்து விலங்குநல அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த எழுத்துக்கள் மற்றும் சின்னம் எந்த கட்சி கூட்டணியுடனும் ஒத்துப்போகவில்லை. தேர்தலுக்காக கடந்த சில நாட்களாக கன்று பிராண்டிங் செய்யப்பட்டதை வடு கூறுகிறது ” என இடம்பெற்று உள்ளது.

இளங்கன்று துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அங்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை. தேர்தலில் பிரச்சனை வர வேண்டுமென அல்லது குழப்பத்தை ஏற்படுத்த யாராவது செய்தார்களா எனத் தெரியவில்லை. இலங்கையில் எடுக்கப்பட்ட புகைப்படம் சில தினங்களாக தமிழகத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button