வெள்ளத்தில் மூழ்கிய உங்கள் கார்களுக்கு ‘இன்சூரன்ஸ் தொகை’ பெற முடியுமா ?

வெள்ளத்தில் சிக்கிய கார்களுக்கு முதலில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? காப்பீட்டிலிருந்து நீங்கள் எவ்வாறு பயனடையலாம் ?

சென்னையில் மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 3 மற்றும் டிசம்பர் 4 ஆகிய நாட்களில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது. அதிலும் குறிப்பாக அடுக்குமாடி கட்டடங்களின் கீழ்ப்புறம் மற்றும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டதோடு, முழுமையாக நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதையும் காண முடிந்தது.

மேலும் பள்ளிக்கரணையில் அமைந்துள்ள புரவங்கரா என்னும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான பூர்வா விண்டர்மியர் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் இ- பிளாக் தடுப்புச் சுவர் உடைந்ததால், அங்குள்ள கார்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ இந்தியா முழுவதும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதையும் காண முடிகிறது.

இந்நிலையில் சென்னையில் தற்போது வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொண்டு வருவதால், வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், பலரும் தங்களுக்கு சொந்தமான கார்களை பழுதுபார்க்க தொடங்கியுள்ளனர். எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களுக்கு கார் இன்ஸ்யூரன்ஸ் பெறுவது எப்படி? பாதிக்கப்பட்ட கார்களை எவ்வாறு பாதுகாப்பது? வெள்ளத்தில் சிக்கிய கார்களுக்கு முதலில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து இங்கே விவரமாக காண்போம்.

வெள்ளத்தில் சிக்கிய கார்களுக்கு முதலில் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

 • மழை நின்றவுடனே உங்கள் காரில் தேங்கி இருக்கும் தண்ணீரை முதலில் வெளியேற்ற வேண்டும்.
 • தண்ணீரை வெளியேற்றாமல் எக்காரணம் கொண்டும் உங்கள் காரை ஸ்டார்ட் (Avoid Ignition or Push Start) செய்யக்கூடாது.
 • கார் மெக்கானிக்குகளை அழைத்துச் சென்று, எந்த மாதிரியான பாதிப்புகள் காரில் ஏற்பட்டுள்ளன என்பதை நன்கு ஆய்வு செய்ய வேண்டும்.
 • பேட்டரிகளை துண்டித்த பிறகே, வாகனத்தை கேரேஜிற்கு அனுப்ப வேண்டும்.
 • காரில் வெள்ள நீர் புகுந்து இருப்பதால், ஸ்டார்ட் செய்யும் போது மிஞ்சிய நீரானது என்ஜின் போன்ற காரின் மற்ற பாகங்களுக்கும் சென்று விடும். எனவே காரை இரண்டு நாட்களுக்கு நன்றாக காயவிட்ட பிறகே ஸ்டார்ட் செய்வது நல்லது.
 • காரில் உள்ள பிரேக்குகளை நன்கு பரிசோதிக்க வேண்டும். ஏனெனில் பிரேக் பேடுகள் (brake pads), லைன்கள் அல்லது டிஸ்க்குகளுக்குள் தண்ணீர் புகுந்து செல்ல வாய்ப்புள்ளதால், அவற்றின் செயல்திறன் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம்.
 • காரை டோ (tow) செய்து என்ஜினை ட்ரை கிளீன் செய்வது அவசியமானது.
 • முடிந்தால், காரின் இருக்கைகளை அகற்றி, வெயிலில் காய வைக்க வேண்டும். இதன் மூலம் காரின் உள்ளேயும் அதிக காற்றோட்டம் கிடைக்கும்.
 • வெள்ளநீர் எந்த அளவிற்கு உங்கள் காரில் நுழைந்துள்ளது என்பதை காப்பீட்டாளருக்கு தெரியப்படுத்த உடனே புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியமான ஒன்றாகும்.

வெள்ளத்தால் வாகனங்கள் எதிர்கொள்ளும் முதன்மையான சேதங்கள் என்னென்ன ?

1 . என்ஜின் சேதம்: என்ஜினுக்குள் நீர் கசிவதால், என்ஜினின் உள் கூறுகள், பகுதி அல்லது முழுமையான சேதத்தை அடையலாம். 

2 . கியர்பாக்ஸ் சேதம்: கியர்பாக்ஸில் நீர் ஊடுருவதால், அங்கு செயலிழப்பை ஏற்படுத்தலாம் அல்லது சாதனத்தையே முழுவதுமாகப் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாற்றலாம்.

3. மின்சார மற்றும் மின்னணு சேதம்: காரின் மின்சாரம் மற்றும் மின்னணு கூறுகள் தண்ணீரிலிருந்து சேதமடைய வாய்ப்புள்ளது. இதன் விளைவாக மின் அல்லது மின்னணு பாகங்கள் ஷார்ட் சர்க்யூட் (Short Circuit) ஆகலாம் அல்லது டாஷ்போர்டின் எச்சரிக்கை விளக்குகள் (dashboard’s warning lights) வேலை செய்யாமல் போகலாம்.

4. கார் இருக்கைகள் மற்றும் தரைவிரிப்புகள் சேதம் : நீர் உட்புகுவதால் ஏற்படும் ஈரப்பதம் உட்புறங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம்.

5. துரு: உலோகமும் தண்ணீரும் நன்றாகக் கலக்காமல், காரின் பாகங்களில் துரு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களுக்கு கார் இன்ஸ்யூரன்ஸ் பெறுவது எப்படி?

வெள்ள சேதம் ஏற்பட்டால், உங்கள் காருக்கு பொருத்தமான காப்பீட்டுத் தொகையை நீங்கள் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் மூன்றாம் தரப்பு காப்பீடு இருந்தால், உங்களுக்கு நிதியுதவி வழங்கப்படாது. வெள்ள சேதத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கும் ஒரே காப்பீடு திட்டம், Comprehensive car Insurance என்று சொல்லப்படுகின்ற விரிவான காப்பீட்டுத் திட்டமாகும்.

விரிவான கார் காப்பீட்டுத் திட்டம் (Comprehensive car Insurance) என்றால் என்ன? 

விரிவான கார் காப்பீட்டுத் திட்டம் என்பது விபத்துகள், திருட்டு, மூன்றாம் தரப்பினருக்கான சட்டப் பொறுப்பு உட்பட சூறாவளி, வெள்ளம், சுனாமி, அலைகள் போன்ற இயற்கை பேரழிவுகளிலிருந்தும் தனிநபர்களின் கார்களை காக்கும் கார் காப்பீட்டுத் திட்டமாகும்.

அதன்படி, உங்கள் காருக்கு முழுமையாகவோ அல்லது பகுதியளவோ இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால், காரை பழுதுபார்ப்பதற்கு அல்லது மாற்றுவதற்கு காப்பீட்டு நிறுவனம் பணம் செலுத்தும்.

மேலும் வாகனத்தின் உரிமையாளர்/ஓட்டுனர் காயம் அடைந்தாலோ அல்லது வாகன விபத்தில் உயிரிழந்தாலோ, இந்த வகையான காப்பீடு அவர்களுக்கு தனிப்பட்ட விபத்துக் காப்பீட்டையும் வழங்குகிறது. மேலும் இதில் இயற்கை பேரழிவுகள் தவிர்த்து சொந்த சேதங்களுக்கும் இழப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்.

இதில் வாகனம் தயாரிக்கப்பட்ட ஆண்டை பொறுத்தே, தேய்மான செலவை பிடித்து கொண்டு, இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காப்பீட்டிலிருந்து நீங்கள் எவ்வாறு பயனடையலாம்?

விரிவான கார் காப்பீடு சூறாவளி, வெள்ளம், ஆலங்கட்டி மழை மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டாலும், வெள்ளத்தில் மூழ்கிய காரின் இயந்திரத்தை முழுமையாக மாற்றுவதற்கு நீங்கள் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சம் வரை செலுத்த வேண்டியிருக்கும்.

இதேபோல், பாகங்கள் பழுதுபார்ப்பதற்கும், மிகவும் விலை உயர்ந்த என்ஜின் மற்றும் கார் இருக்கைகள் (அப்ஹோல்ஸ்டரி) ஆகிய இரண்டையும் மாற்றுவதற்கும், உங்கள் காப்பீட்டு நிறுவனம் பணம் செலுத்தும்.

இருப்பினும், இந்த கொள்கையிலிருந்தும் சில விலக்குகள் உள்ளன. எதிர்பாராத சூழ்நிலைகள் நேர்ந்தால் மட்டுமே காப்பீடு செலுத்தப்படும். உதாரணமாக, நீரில் மூழ்கிய காரை ஸ்டார்ட் செய்ய முயலும் போது என்ஜினுக்கு சேதம் ஏற்பட்டால், இந்த சேதம் வெள்ளத்தின் விளைவாக ஏற்பட்ட சேதமாக அடையாளம் காணப்படாது. எனவே இத்தகைய  சூழ்நிலைகளில் உங்கள் காப்பீட்டாளரை உடனே அழைத்து, உங்கள் காரை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

வெள்ள சேதத்திற்காக பரிந்துரைக்கப்படும் சில கூடுதல் சேவைகள் (add-on-covers):

இத்தைகைய கூடுதல் காப்பீடுகள், அடிப்படையான கார் காப்பீட்டு திட்டங்களுடன் சேர்க்கப்படுவதில்லை. எனவே இவற்றை கூடுதலாக பெற்றுக்கொள்ள வேண்டியது தனிநபரின் விருப்பத்தைச் சார்ந்தது.

1.  என்ஜின் பாதுகாப்பு கவர் (Engine protection add-on cover) – இவற்றின் மூலமாக காரின் என்ஜினுடன் தொடர்புடைய ஆபத்துகளில் இருந்து உங்கள் காரைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

2. நுகர்பொருட்கள் கவர் (Consumables cover) – இவற்றின் மூலம் என்ஜின் ஆயில், கியர்பாக்ஸ் ஆயில், நட்ஸ் மற்றும் போல்ட், கிரீஸ், வாஷர்கள், ஆயில் ஃபில்டர்கள், லூப்ரிகண்டுகள், பவர் ஸ்டீயரிங் ஆயில், ஏசி கேஸ் ஆயில் மற்றும் ரேடியேட்டர் கூலண்ட் ஆகிவற்றிற்கு காப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்.

3. சாலையோர உதவிக்கான கவர் (Roadside Assistance cover) – இதன் மூலம் சாலைகளில் எரிபொருள் தீர்ந்துவிட்டால், காப்பீட்டு நிறுவனம் உங்களுக்காக ஐந்து லிட்டர் எரிபொருளை டெலிவரி செய்யும். இதே போன்று வாகனம் பழுதடைந்தால், உடனடியாக பழுதடைந்த இடத்தில் அதை சரிசெய்ய ஒரு மெக்கானிக்கை இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்து அனுப்பும். 

4. பூஜ்ஜிய தேய்மானம் கவர் (Zero Depreciation cover) – இதன் மூலம், செட்டில்மென்ட்டின் போது வாகனத்தின் தேய்மானத்திற்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. 

வெள்ளத்தால் வாகனங்கள் சேதமடைவதை முன்கூட்டியே எவ்வாறு தடுப்பது?

 • உங்கள் காரை தரையிலிருந்து உயரமாக நிறுத்தினால், தண்ணீர் மூலம் ஏற்படும் என்ஜின், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் உட்புற பாகங்களின் சேதங்களை குறைக்க முடியும்.
 • வாகனத்தின் ஜன்னல்கள் அனைத்தும் மூடி இருக்கிறதா என்பதை அடிக்கடி உறுதிசெய்து கொள்ள வேண்டும். மேலும் காரின் உட்புறத்தில் ஏற்படும் ஜன்னல் விரிசல்கள் வழியாக தண்ணீர் ஊடுருவக்கூடிய வாய்ப்புகளும் அதிகம்.
 • முடிந்தவரை மழைக் காலங்களில் உங்கள் காரின் பேட்டரிகளை அணைத்து வைத்துக் கொள்வது சிறந்தது.
 • கார் தொடர்புடைய ஆவணங்களை காருக்குள்ளேயே வைத்திருப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஒருவேளை வெள்ளத்தால் ஆவணங்கள் சேதமடைந்தால், கார் காப்பீடு பெறுவது கடினமாகிவிடும்.
 • உங்களிடம் கார் இருந்தால், நீங்கள் அதற்கு பொருத்தமான காப்பீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதன் மூலம் தான் பல நன்மைகளைப் பெற முடியும். குறிப்பாக வெள்ளத்தால் ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு ஈடுசெய்ய, ஒருவர் விரிவான வாகனக் காப்பீட்டை (Comprehensive car Insurance) பெற்றிருக்க வேண்டும்.

ஆதாரங்கள்:

https://www.policybazaar.com/motor-insurance/car-insurance/articles/does-your-car-insurance-policy-cover-flood-damages/

https://www.policybazaar.com/motor-insurance/comprehensive-car-insurance/

https://www.policybazaar.com/motor-insurance/car-insurance/articles/how-does-car-insurance-keep-you-afloat-during-a-flood/

Acko – car insurance

https://www.policybazaar.com/motor-insurance/car-insurance/add-on-covers/engine-protection-cover/

https://www.policybazaar.com/motor-insurance/car-insurance/add-on-covers/car-roadside-assistance/

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader