மாணவர்கள் மத்தியில் சாதிய மோதல்.. சமத்துவத்தை ஏற்படுத்த என்ன செய்ய போகிறோம் ?

திருநெல்வேலி மாவட்டத்தில் தலித் மாணவர் ஒருவரை சக வகுப்பு மாணவர்கள் ஜாதிய வன்மத்தில் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பதபதப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாதி, மதம், பாலினம் கடந்து பழகும் பள்ளிப் பருவத்தில் ‘நீ எங்களுக்குக் கீழானவன்’ என்னும் எண்ணம் அம்மாணவர்களுக்கு எங்கிருந்து வந்தது? அவர்களை மட்டும் குற்றம் சொல்லி எந்த பயனும் கிடையாது. நம்மைச் சுற்றி உள்ள ஜாதிய சமூகமே அத்தகைய கட்டமைப்பை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்கான வேலையைச் செய்து வருகிறது. அதற்கான ஒரு சிறு உதாரணம்தான் இச்சம்பவம்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, பெருந்தெருவைச் சேர்ந்த தலித் மாணவர் ஒருவர் வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார் (மைனர் என்பதால் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை). அவர் கடந்த ஜூலை மாத இறுதியிலிருந்து பள்ளிக்குச் செல்லாததைக் கவனித்த அவரது தாயார் அதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார். 

தன்னுடன் பயிலும் ஆதிக்க ஜாதி மாணவர்கள் தன்னை இழிவாகப் பேசுவது, கடைக்குப் போய் சிகரெட் வாங்கி வரச் சொல்வது, பரிச்சையில் காண்பிக்கக் கோருவது, காண்பிக்காத பட்சத்தில் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதைத் தனது தாயிடம் கூறியுள்ளார். இதற்கிடையே தலித் மாணவர் பள்ளிக்கு வருகை தராதது குறித்து பள்ளியிலிருந்து பெற்றோரிடம் கேட்கப்பட்டுள்ளது. 

மாணவரும் அவரது தாயும் கடந்த 9ம் தேதி (ஆகஸ்ட்) பள்ளி தலைமை ஆசிரியரிடம் நடந்ததைக் கூற, ஆசிரியரும் அந்த ஆதிக்க ஜாதி மாணவர்களைக் கண்டித்துள்ளார். அன்றைய தின இரவே தலித் மாணவனின் வீட்டிற்குச் சென்ற சக வகுப்பு ஆதிக்க ஜாதி மாணவர்கள் அவரையும் அவரது தங்கையையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த கொடூரத்தைச் செய்த 6 பேரைக் காவல் துறையினர் சிறார் நீதி வாரியத்தில் ஒப்படைத்துள்ளனர். 

ஊடகங்களில் செய்தி : 

தன்னுடன் பயிலும் சக மாணவனை ஜாதிய ரீதியில் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவனை அரிவாளால் வெட்டிய இக்கொடூர சம்பவத்தை ராகிங் என்றும் மோதல் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாகத் ‘தினமலர்’ வெளியிட்ட செய்தியில் ராகிங் செய்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்ததால், ஆத்திரமுற்ற அம்மாணவர்கள், மற்றொரு மாணவரின்  வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவரது தங்கையையும் அரிவாளால் வெட்டினர்’ எனச் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ‘பாதிக்கப்பட்ட மாணவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் கைதான மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளது. 

சாதாரணமாக நடந்த ஒரு பிரச்சனைக்குப் பாதிக்கப்பட்டவர் தலித் என்பதால் மட்டுமே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது போல ஒரு தோற்றத்தையே இந்த செய்தி வெளிப்படுத்துகிறது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தைப் பற்றி ஜாதியவாதிகள் பேசிவந்த இத்தகைய கற்பிதங்களை தற்போது ஊடகங்களும் பேசத் தொடங்கியுள்ளது.

இதே போல் ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்ட செய்தியில் பாதிக்கப்பட மாணவருக்கும் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பள்ளியில் மோதல் ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இச்சம்பவம் நடந்ததாகச் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர் தலித் என்றோ, அவர் ஜாதிய வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் என்றோ எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. 

பொதுவாக ஜாதிய ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அரங்கேறும்  வன்கொடுமைகள் குறித்த   செய்திகளில் ‘இருதரப்பினருக்கும் இடையே மோதல்’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. ஜாதிகளின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் பாதிக்கப்பட்டவர் யார்? பாதிப்பை ஏற்படுத்தியவர் யார்? என்பது பற்றியோ, அதற்குக் காரணமான ஜாதிய ஆதிக்கம் பற்றியோ வெகுஜன ஊடகங்கள் பேசுவதில்லை.

பள்ளி மாணவர்கள் கையில் ஜாதி கயிறு : 

மற்ற மாநிலங்களைப் போலத் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்களில் பெயருக்குப் பின்னால் ஜாதி பெயர் போட்டுக் கொள்வது கிடையாது. அப்படி ஜாதி பெயர் போடுவது அசிங்கம், அவமானம் என்கிற புரிதலை ஏற்படுத்த  நீண்ட காலமாக அறிவுத் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும்  பணி செய்திருக்கின்றனர். 

ஆனால், இன்றோ பள்ளி செல்லும் மாணவர்கள் தங்களின் ஜாதியை அடையாளப்படுத்தும் விதமாகக் கையில் குறிப்பிட்ட வண்ண கயிறு கட்டும் பழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர். இதனால் பல முறை திருநெல்வேலி பகுதியில் பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரச்சனைகள் நிகழ்ந்துள்ளது.  இது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்கக் கோரி 2015ம் ஆண்டு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 

இது தொடர்பாக அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் ‘ஜாதி கயிறு கட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்தால் கண்டிப்பது, ஜாதி வெறியைத் தூண்டும் வகையில் செயல்பட்டால் பள்ளியிலிருந்து சம்பந்தப்பட்ட மாணவரை நீக்குவது தொடர்பாகத்  தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய அறிவுறுத்தல்கள் இருப்பினும் ஜாதி கயிறு பெருமை ஓய்ந்தபாடில்லை. இதனை தடுக்கும் விதமாக 2019ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ‘ஜாதியை வெளிபடுத்தும் விதமாக நெற்றியில்  வண்ண பொட்டோ, கையில் வண்ண கயிறோ கட்டிக்கொண்டு மாணவர்கள் பள்ளிக்கு வர கூடாது’ என உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அதிகாரிகள் மேற்கொண்ட இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் ஆளாக பாஜக-வை சேர்ந்த H.ராஜா டிவிட்டரில் ‘கையில் கயிறு கட்டுவதும், நெற்றியில் பொட்டு வைப்பதும் இந்துக்களின் மத நம்பிக்கை. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயல்’ என பதிவிடுகிறார்.

Archive link

இதனை தொடர்ந்து அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் (அதிமுக)இந்த சுற்றறிக்கை எனது கவனத்துக்கு வராமலேயே வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பழைய நிலையே தொடரும்’ எனக் கூறி ஆணையர் அளித்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. அதற்கடுத்த சில ஆண்டுகளிலேயே (2022) கையில் ஜாதி கயிறு கட்டுவது தொடர்ப்பான பிரச்சனையில் ஒரு மாணவன் கொல்லப்பட்டான். அதன் பிறகு பள்ளி மாணவர்கள் ஜாதியை வெளிப்படுத்தும் விதமாக கைகளில் கயிறு கட்ட கூடாது என முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை மூலம்  அறிவுறுத்தினார். 

அமைச்சர் அன்பில் மகேஷ் வீடியோவில் பேசியது : 

நாங்குநேரியில் தலித் மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீடியோ ஒன்றினை வெளியிட்டார். அதில், ‘சில தினங்களுக்கு முன் ஒரு பள்ளியில் விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்த ஊர், எந்த பள்ளி எனக் கூற விரும்பவில்லை. இதுபோன்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் எங்களை பாதிப்பதுடன், சோர்வடையவும் செய்கின்றன.

மாணவர்களை அறிவுசார்ந்து கொண்டு செல்ல அரசு எண்ணியிருக்கும்போது, மாணவர்களுக்குள் எழும் ஏதோ சில வேற்றுமை உணர்வுகளின் காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. இந்த வேற்றுமை உணர்வை விதைக்கும் எந்த சக்தியாக இருந்தாலும் சரி அவர்களை ஒடுக்கத் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தாக்கப்பட்ட அந்த மாணவர் மற்றும் அவரது சகோதரியைப் பாதுகாப்பான முறையில் நல்ல ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்த்துப் படிக்க வைப்பது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் எனது கடமை’ என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 

பாதிக்கப்பட்ட மாணவருக்கும் அவரது தங்கைக்கும் உதவி செய்வது பற்றி அவர் பேசி இருந்தாலும், இது ஜாதிய ஆணவத்தினால் நடந்தது என்றோ, இவ்வாறு மீண்டும் நடக்காமல் இருக்க இத்தகைய நடவடிக்கைகளை அரசு எடுக்க உள்ளது என்றோ எதையும் கூறவில்லை. அமைச்சர் பேசியது தீர்வு அல்ல எனத் தலித் செயல்பாட்டாளர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.

என்ன செய்யப் போகிறோம் ?

நாம் தொடக்கத்தில் சொன்னது போலக் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்களும் ஜாதிய சமூகத்தின் ஒரு அங்கம்தான். 16 முதல் 17 வயதான அவர்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் கூர் நோக்கு மையங்களிலிருந்து வெளி வந்துவிடுவர். ஜாதியை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் இவர்களை ஹீரோவாக கட்டமைக்க ஏற்கனவே திட்டங்களை வகுத்திருப்பர். 

அதே நேரத்தில் இம்மாணவர்கள் இன்னுமொரு யுவராஜாக உருவாகாமல் இருக்க, அவர்களை நல்வழிப்படுத்த நம்மிடம் எம்மாதிரியான செயல் திட்டம் உள்ளது என்பதைச் சிந்திக்க வேண்டிய நேரமிது. போதைக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்த மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. ஆனால், ஜாதியால்  மூளைச் சலவை செய்யப்பட்டவர்களை நல்வழிப்படுத்த என்ன இருக்கிறது.

அரசியல் ரீதியாக இளைஞர்களை வழிநடத்த வேண்டிய அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் குடி பெருமை, ஜாதி ஒரு அழகான சொல், தீண்டாமையும் கொரோனாவின் போது பின்பற்ற அறிவுறுத்தப்பட்ட சமூக இடைவெளியும் ஒன்றுதான் எனச் சிலாகிப்பது, சட்ட மன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஜாதிய கூட்டங்களில் கலந்து கொள்வது என ஜாதிய கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையைத்தான் செய்து வருகின்றனர்.

கல்வியின் மூலம் ஜாதி ரீதியிலான குற்றங்களைக் குறைக்க முடியும் என நாம் சொல்ல முற்படலாம். சரியான தேர்வு தான். ஆனால், கல்வியைப் போதிக்க வேண்டிய ஆசிரியர்களே பல இடங்களில் ஜாதிய வன்மத்துடன் நடப்பதை நாம் பார்த்துள்ளோம். முதலில் ஜாதிய ஆணவத்திற்கு எதிரான புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில் இதனையும் சேர்க்க வேண்டும். கல்வி வளாகங்களில் ஜாதியின் விளைவு என்ன? இட ஒதுக்கீடு யார் யாருக்கு உள்ளது. எதற்காக உள்ளது என்பன பற்றிய புரிதலையும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் தாண்டி ஜாதிக்கு எதிராக நம் அனைவரது குடும்பங்களிலும் பண்பாட்டு ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்த சமூக கல்வியைப் போதிக்க வேண்டியுள்ளது. அரசும் ஜாதிக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை உண்மையான சமூக நீதிக்காக முன்னெடுக்க வேண்டும்.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader