This article is from Mar 09, 2018

இறுதி தீர்ப்பு வந்தாச்சு ! மேலாண்மை வாரியம் என்னாச்சு?

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை குறித்து நீண்ட காலமாக நடைபெற்று வந்த வழக்குகள் அனைத்தையும் முடித்து வைக்கும் வகையில் பிப்ரவரி 16-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அமைந்திருந்தது. இந்த தீர்ப்பில் தமிழகத்திற்கு காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கிய 192 டி.எம்.சி தண்ணீரை 177.25 டி.எம்.சியாக குறைத்தது.

இதன் மூலம் கர்நாடகாவிற்கு 14.75 டி.எம்.சி தண்ணீர் கூடுதலாக கிடைத்தது. காவிரி நடுவர் மன்றம் கர்நாடகாவிற்கு ஒதுக்கிய 270 டி.எம்.சி தண்ணீருடன் உச்ச நீதிமன்றம் வழங்கியதும் சேர்ந்து மொத்தம் 284.75 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு  4.75 டி.எம்.சி தண்ணீர் கூடுதலாக வழங்கப்பட்டது.

இறுதியாக, இத்தகைய தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். தீர்ப்பில் இருந்து அடுத்த 6 வாரங்களுக்குள் நடுவர் மன்றம் உத்தரவை செயல்படுத்தவே திட்டம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. காவிரி மேலான்மை வாரியம் அமைப்பதே நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பாக இருப்பதால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் அதையே குறிக்கிறது. 

உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமாக அமைந்தாலும், அறிவித்த தண்ணீரையாவது தடையில்லாமல் வழங்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், பிப்ரவரி 17-ம் தேதி பெங்களூரில் ஊடகத்திற்கு பேட்டியளித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “ காவிரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நதிநீர் பங்கீடு பிரச்சனை உருவானால் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். அதுபோன்று தான் காவிரி நீர் விவகாரத்திலும் மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், 6 வாரத்திற்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி எந்தவித காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற கருத்தினை கூறியிருந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் :

 காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்றாலே கர்நாடகா எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் ? என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது. இரு மாநிலங்களில் உள்ள காவிரி நீரை சேமிக்கும் எட்டு அணைகளின் நிர்வாகம் அனைத்தும் காவிரி மேலாண்மை வாரியத்திடம் சென்று விடும். அணைகளில் தண்ணீர் திறந்துவிடுவது, நிறுத்துவது போன்றவை மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி நடைபெறும்.

 குறிப்பாக, சட்டப்படி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்குவதும், பருவமழை பொய்த்து போகும் காலங்களில் தண்ணீரை பகிர்ந்து வழங்குவதை மேலாண்மை வாரியம் செயல்படுத்தும். இதனால், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என கர்நாடகாவால் முரண்டு பிடிக்க இயலாது.

6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொடுத்த கெடு முடிவதற்கு இன்னும் 3 வாரங்கள் கூட இல்லாத நிலையில், மத்திய அரசு எத்தகைய முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் குற்றம்சாற்றியுள்ளார்.

மார்ச் 6-ம் தேதி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதையும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக, திமுக, இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் ஒன்றாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி, திருச்சி சிவா மற்றும் அதிமுக எம்.பி தம்பிதுரை ஆகியோர் உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்க கூடாது என குரல் எழுப்பினர்.

இதற்கிடையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் 4 மாநில பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள மத்திய அரசால் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, மார்ச் 9 டெல்லியில் மத்திய நீர் வளத்துறை சார்பில் நடைபெறும் கூட்டத்தில் 4 மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், தமிழகத்தின் சார்பில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைப்பது போன்ற அறிவுறுத்தல் ஏதும் இல்லை, எனவே அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை. திட்டங்களை கொடுக்க வேண்டும் என்று தான் கூறப்படுகிறது. எனவே எந்த மாதிரியான திட்டங்கள் என்பதை மாநில அரசுகள் கலந்து ஆலோசித்து தெரிவிப்போம் என்று கர்நாடகாவின் தலைமை செயலாளர் ரத்னா பிரபா தெரிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த திட்டம் கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றியே குறிக்கிறது என்பதை தமிழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.  

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகா அரசு முழு வீச்சில் எதிர்க்கும் என்பதை அவர்களின் செயல்பாட்டில் இருந்து அறிய முடிகிறது. 

காவிரி மேலாண்மை வாரியம் என்கிற விசயத்தை அமைக்க கோரி தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகிறது. மேலாண்மை வாரியம் அமைந்து விட்டால் முறையாக நீர் பங்கீடு கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு. அதை தொடர்ந்து செய்ய மறுத்து வரும் கர்நாடகா அரசை  கேள்வி கேட்க எந்த ஒரு மத்திய அரசும் நடவடிக்கை எடுத்ததில்லை. குறிப்பாக, கர்நாடகாவில் இருப்பது காங்கிரஸ் ஆட்சி, மத்தியில் இருப்பது பாஜக அரசு. இரண்டு தேசிய கட்சிகளுமே தங்கள் பொறுப்பை தட்டி கழிக்கும் சூழலையே தான் தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம்.

அப்படியான சூழலில் இந்த தருணத்திலாவது ஆறு வாரத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். அப்படியென்றால் தான் நமக்கு கிடைத்த நதி நீர் பங்கீட்டை முழுமையாக பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். அவ்வாறு முழுமையாக பெற்று காலம் தவறாமல் வருகிற நீர் தான் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். விவசாய பருவ காலத்தில் நீர் இன்றி தவித்து கொண்டிருக்கின்ற சூழலையே தொடர்ந்து விவசாயிகள் எதிர் கொண்டால் காவிரி டெல்டா பகுதி மிகப்பெரிய பாலைவனமாக மாறி போகும். இந்த சூழலை உடனடியாக சரிசெய்வதற்கு இனியாவது மத்திய , மாநில அரசுகள் குறிப்பாக கர்நாடகா அரசு போன்றவை ஒத்துழைக்குமா என்று பார்க்க வேண்டும்.

இதே நேரத்தில், தமிழ்நாடு கட்சிகள் எப்போதும் ஒன்றாக குரல் கொடுத்ததில்லை என்பதை அறிவோம். தனி தனியாக தான் போராட்டம் நடத்துவர். இன்றைய சூழலில் அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி ஒரு குரலாய் பேசியது ஆரோக்கியமான நகர்வு. ஆனாலும் கூட  பாராளுமன்றத்தில் இரு அணிகளாக மைத்ரேயன் தலைமையில் சில எம்பிக்களும், தம்பித்துரை தலைமையில் சில எம்பிக்களும் இருந்ததாக தகவல்கள் வருகிறது. ஒற்றுமை என்ற ஒற்றை ஆயுதம் மட்டுமே பல விசயங்களை வென்றெடுக்க உதவும். இது விவசாயிகள் பிரச்சனை என்பதால் அனைத்து கட்சிகளும் தனது பொறுப்புணர்ந்து செயல்படும் போது தான் இதற்கு தீர்வு ஏற்படும்..! 

Please complete the required fields.




Back to top button
loader