“குடுமி” வள்ளுவர் புகைப்படம் நீக்க முயற்சிப்போம் – பதிப்பாளர் தரப்பு விளக்கம் !

திருவள்ளுவரின் உருவம், மதம், சாதி குறித்த சர்ச்சை எழுவது போல் ஏதாவது ஒன்று நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. திருவள்ளுவரை அரசியல் மோதல் வரை இழுத்ததையும் பார்த்தோம். இந்நிலையில், சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் வள்ளுவரின் மனைவி வாசுகி குறித்த பகுதியில் உணவு பரிமாறுவது போன்று சித்தரிக்கப்பட்ட படத்தில் இருக்கும் வள்ளுவரின் உருவம் சர்ச்சையாகி வருகிறது.
Macmillan Publishers India Pvt. Ltd எனும் பதிப்பகம் இந்த எட்டாம் வகுப்பு இந்தி புத்தகத்தை அச்சிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
Meet Thiruvalluvar in Class 8th CBSE Book by McMillan publishers!
எட்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பாட புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருவள்ளுவரும் வாசுகியும்! @KanimozhiDMK @jothims pic.twitter.com/rTVUAZxvYK— Tr Gayathri Srikanth (@Tr_Gayathri) February 19, 2021
இது குறித்து பதிவிட்ட எழுத்தாளர் உமாநாத் செல்வன் அவர்களிடம் பேசுகையில், ” சிபிஎஸ்இ ஆனது ஒவ்வொரு வகுப்பிற்குமான பாடத்திட்டத்தினை கொடுத்து விடும். பள்ளிப் பாடப்புத்தகங்களுக்கு என நிறைய பதிப்பகங்கள் உள்ளன. அவர்கள் நூலாசிரியர்கள் யாரிடமாவது கொடுத்து பாடத்தினை தயார் செய்து வெளியிடுவார்கள்.
இந்தியாவில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் யாருடைய பதிப்பகத்தில் இருந்து வரும் புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்து கொள்ளலாம். அதில், Macmillan-னும் ஒன்று. இது சென்னையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் அளிக்கப்பட்ட 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது என மாணவரின் பெற்றோர் அனுப்பிய புகைப்படம் ” என பதில் அளித்து இருந்தார்.
இதுகுறித்து, Macmillan Publisher-க்கு தொடர்பு கொண்டு பேசுகையில், ” சித்தரிக்கப்பட்ட படம் சர்ச்சையானது தொடர்பான தகவல் தற்போது எங்கள் கவனத்திற்கு வந்தது. இந்த பணிகளை மேற்கொள்வது எடிட்டோரில் டீம். இதை உடனடியாக மாற்றுவது தொடர்பான நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறோம் ” என பதில் அளித்து இருந்தனர்.
8-ம் வகுப்பு புத்தகத்தில், வள்ளுவரை காவி உடையில் ருத்ராட்சம் மற்றும் பூணூல் அணிவித்து, தாடி இல்லாமல் குடும்பி வைத்து பார்ப்பதற்கு குறிப்பிட்ட முற்பட்ட சமூகத்தைப் போல் சித்தரித்து உள்ளனர்.
அதுமட்டுமல்லால், வாசுகி வள்ளுவருக்கு சேவை செய்வதை போல சித்தரித்து இருக்கிறார்கள். வள்ளுவரைப் பொறுத்தவரை, அவரின் தனிப்பட்ட விவரங்கள் எதுவும் உறுதியான வரையறை இன்றுவரை இல்லை. திருக்குறளை பலரும் சேர்ந்து எழுதினார்கள் என்ற ஒரு குறிப்பும் உண்டு, திருவள்ளுவர் எங்கள் சமயத்தைச் சேர்ந்தவர், இந்த குறளின் மூலமாக தங்கள் சமயக் கருத்தைக் கூறுவதாக என்றும், திருக்குறளில் சில குறள்கள் மாற்றி அமைத்து உள்ளதாக வ.உ.சி உள்ளிட்டோரும் கருத்தும் தெரிவித்து இருக்கிறார்கள்.
ஆக, இது ஒருபுறம் இருக்க வாசுகி வள்ளுவருக்கு உணவு பரிமாறுவது போன்று காட்சிகள் எல்லாம் தமிழ் புத்தகங்களில் என்றும் பார்க்க இயலாது. ஏனென்றால், ஒரு பெண் ஆணுக்கு சேவை செய்வது போன்ற சித்தரிப்புகளை தாண்டி, வள்ளுவர் என்றாலே திருக்குறளையும், அதன் நீதியையும் தான் பேசி இருக்கிறது தமிழ்நாட்டு பாடப்புத்தகங்கள். இங்கு வாசுகி சேவை செய்வது போல் சித்தரிக்கும் கதை உண்மையாக, உறுதியாக இருக்கிறதா எனத் தெரியாமல் குறிப்பிட்ட காரணம் என்ன, இதன்மூலம் குழந்தைகள் என்ன கற்றுக் கொள்வார்கள் எனக் கேள்வி எழுப்புகிறார்கள் ஆர்வலர்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.