சிபிஎஸ்இ தேர்வில் பெண்களை இழிவு செய்யும் கேள்வி, எதிர்ப்பால் பின்வாங்கியது !

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு கேள்வித்தாளில் பெண்களைப் பற்றி பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தில் இடம்பெற்ற கேள்வி பெரும் சர்ச்சையையும், கண்டனத்தையும் பெற்றது. அரசியல் தலைவர்கள், ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த எதிர்ப்பால் சிபிஎஸ்இ பின்வாங்கி உள்ளது.

சிபிஎஸ்இ தேர்வில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் இடம்பபெற்ற சொற்றொடரில், ” மனைவியின் விடுதலை குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிட்டது என்பதை மக்கள் வெகுவாக கவனிக்கிறார்கள். மனைவிகள் தங்கள் கணவனுக்கு கீழ்ப்படிவதை நிறுத்தவிட்டார்கள். அதுவே குழந்தைகள் மற்றும் வேலைக்காரர்கள் ஒழுக்கமின்மைக்கு முக்கிய காரணம்.

20-ம் நூற்றாண்டில் குழந்தைகள் குறைவாக இருந்ததற்கு பெண்ணியம்தான் காரணம். திருமணமான பெண்கள் வேலைக்குச் சேர்ந்து தங்களுக்கான அடையாளத்தை தக்கவைத்து கொண்டனர். பெண்களின் எழுச்சியே குழந்தைகளின் மீதான கட்டுப்பாட்டை அழித்துவிட்டது. தந்தைக்கு அதிகாரமில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, கணவர் வீட்டின் எஜமானர் என்று கருதப்பட்டார், மனைவி அவருக்கு ” முறையான கீழ்ப்படிதல் ” கொடுத்தார்.
.
கணவனின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே தாய் குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க முடியும் ” என பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்று இருந்தது.
.
கேள்வித்தாளில் சொற்றொடருக்கு கீழே கேள்விக்கான விடையில், ” எழுத்தாளர் ஒரு ஆண் பேரினவாத நபர் ” , எழுத்தாளர் வாழ்க்கையை இலகுவாக அணுகுகிறார் ” என்பது போன்ற விடைகளும் கொடுக்கப்பட்டு இருந்தது.
.
இப்படி பெண்கள் குறித்து இடம்பெற்ற பிற்போக்கு கருத்துக்கள் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் அரசியல்வாதிகள் தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இதுபோன்ற கருத்துக்களை உடனடியாக கேள்வித்தாளில் இருந்து நீக்க வேண்டும், மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், தேர்வுத்தாளில் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி குறித்து பாடக்குழு வல்லுநர்களிடம் ஆய்வு செய்ய ஒப்படைக்கப்படும் என்றும், மாணவர்களுக்கு அந்த கேள்விக்கான முழு மதிப்பெண்ணும் அளிக்கப்படுவதாகவும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

” பெண்களை இழிவுப்படுத்தும் கேள்வி தொடர்பாக சிபிஎஸ்இ விசாரணை நடத்தி தவறு இழைத்தோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அந்த வினா நீக்கப்பட்டு, அனைவருக்கும் முழு மதிப்பெண் வழங்குவதாக சிபிஎஸ்இ அறிவித்து இருக்கிறது. இது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதை போல் உள்ளது ” என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சிபிஎஸ்இ தேர்வுத்தாளில் சர்ச்சைக்குரிய வகையில் கேள்விகள் இடம்பெறுவது இது முதல் முறை அல்ல. சில நாட்களுக்கு முன்பாக, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு சமூகவியல் பாடத் தேர்வில், ” குஜராத்தில் 2002ம் ஆண்டு முன் எப்போது இல்லாத அளவிற்கு முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை எந்த அரசியல் கட்சி ஆட்சியில் நடைபெற்றது ” என சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Links :

What all was wrong in the passage on women in CBSE’s English question paper?

anti-women-cbse-question-paper-misogyny-priyanka-gandhi

Please complete the required fields.
Back to top button
loader