60 லட்சம் பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்தியது மத்திய அரசு !

2017-ம் ஆண்டின் பார்முலாவின் கீழ் மாநிலங்களுக்கு நிதி வழங்குவதை மத்திய அரசு நிறுத்திய பின்னர், 14 மாநிலங்களுக்கு மேல் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டியலின (எஸ்.சி) மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் அறிக்கை தெரிவித்து உள்ளது.
பட்டியலின பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் இருக்கும் பிரச்சனை ஒரு வருடத்திற்கும் மேலாக மத்திய அமைச்சரவை முன் நிலுவையில் இருந்து வருகிறது. இதுகுறித்து, நவம்பர் மாதம் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் அலுவலகம் விரிவாக விவாதித்துள்ளார்கள்.
நவம்பர் மாத தொடக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த உயர் பள்ளி மாணவர்களுக்கு 100% மத்திய அரசு அளிக்கும் உதவித் தொகையை பெறுவதன் மூலம், அவர்கள் தங்களின் பள்ளிப் படிப்பை தடையின்றி முடிக்க உதவியாக இருக்கும் மற்றும் பட்டியல் பழங்குடி(எஸ்.டி) மாணவர்கள் 75% மத்திய அரசின் அளிக்கும் உதவித்தொகையை பெறுவார்கள்.
ஆனால், மத்திய அரசின் தரப்பில் இருந்து உதவித்தொகை திட்டத்திற்கு 10% மட்டுமே நிதியாக பெறப்படுவதால் பட்டியலின பிரிவைச் சேர்ந்த 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மேல்நிலை பள்ளி மாணவர்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இதன் விளைவாக மாநிலத்திற்கு மாநிலம் உதவித்தொகை திட்டத்தை நிறுத்தத் தொடங்கி உள்ளன மற்றும் 2017-18 முதல் மிகக் குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டு வருகிறது.
ஆல் இந்தியா போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டம் மூலம் 11,12 வகுப்பு படிக்கும் பட்டியலின(எஸ்.சி) மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.18,000 நிதியுதவி அளிக்கப்படும். இத்திட்டம் 60:40 எனும் மத்திய-மாநில நிதி வழங்கல் முறையை பின்பற்ற வேண்டும்.
ஆனால், மத்திய நிதி அமைச்சகத்தின் 2017-18 நிதியாண்டில் ” கடமைப்பட்ட பொறுப்பு ” நிதி பார்முலா எவ்வாறு 90% சுமையை மாநில அரசின் மீது உண்டாக்கியதை பிரதமர் அலுவலக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாக எகனாமிக் டைம்ஸ் கூறுகிறது. மேலும், இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 60% நிதியானது 12-வது நிதி ஆணையத்தின் காலத்தில் 10% ஆக குறைந்துள்ளது. தற்போது 10% அளவிற்கு குறைந்து 90% அளவிற்கான சுமையை மாநிலங்களின் மீது ஏற்படுத்தி இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இவ்விவகாரத்தை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கு பலமுறை எடுத்துரைத்து உள்ளனர்.
60:40 நிதி வழங்கல் முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும், விடுதிகள், பராமரிப்பு மற்றும் கல்விக் கட்டணங்களுக்கான நிதியை வெளியிடுமாறு சமூக நீதி அமைச்சகம் தரப்பில் இருந்து நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.