சந்திரயான் குறித்து NCERTயின் புராண உருட்டுகள் !

துணைப்பாடத்தின் மூலம் நுழையும் அறிவிலுக்கு புறம்பான கட்டுக்கதைகள் மற்றும் புராணங்கள்.

டந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி, சந்திரயான் 3 திட்டம் தொடர்பாக துணைப்பாட நூல்கள் (supplementary) NCERT-ஆல் வெளியிடப்பட்டது. ஒன்றிய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020ன் அடிப்படையில் பள்ளியின் வகுப்புகள் ஐந்தாக பிரிக்கப்பட்டுள்ளன. இவை,

       •   Foundational Stage (மழலையர் பள்ளி மற்றும் வகுப்பு 1-2)
       •   Primary Stage (வகுப்பு 3-5)
       •   Middle School Stage (வகுப்பு 6-8)
       •   Secondary Stage (வகுப்பு 9-10)
       •   Higher Secondary Stage (வகுப்பு 11-12)

புதிதாக வெளியிடப்பட்ட துணைப்பாட நூல்கள், இந்த 5 பிரிவுகளுக்கு ஏற்றவாறு தனித்தனியாக வடிவமைக்கப்பட்டு அந்த வகுப்புகளுக்கு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே இந்த நூல்கள் வெளியிடப்பட்டன. இதில் ஒரு ஆங்கில பதிப்பு புத்தகத்தின் பெயர் கூட இந்தியில் தான் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை எதுவும் இந்தி திணிப்பில் வராது என்று நாம் நம்ப வேண்டும்.

அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள இந்த துணைப்பாட (supplementary) புத்தகங்களில் ‘பறக்கும் ரதங்கள்’, ‘விமானிகா சாஸ்திரம்’ போன்ற புராணக் கதைகள் உள்ளிட்ட அறிவியலுக்கு புறம்பான பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் அறிவியல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினர் பலத்த எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், சந்திரயான் வெற்றிக்கு மோடி தான் காரணம் என்பது போன்ற கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி எதிர்க்கட்சியினரும் விமர்சனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து, NCERT இணைய தளத்திலிருந்து இந்த புத்தகங்கள் நீக்கப்பட்டன. இருப்பினும் புராணங்கள் அறிவியல் முன்னேற்றத்திற்கு அடிகோலும் என்று கூறி ஒன்றிய அரசு இதற்கு சமாளிக்க, மீண்டும் NCERT இணைய தளத்தில் இந்த புத்தகங்கள் இடம்பெற்றன.

பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களில் அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்கள் உள்ளதாக ‘அகில இந்திய மக்கள் அறிவியல் ஒருங்கிணைப்புக் குழு’ (All India Peoples Science Network – AIPSN) குற்றச்சாட்டினை முன்வைத்ததுடன், அவற்றைத் திரும்பப்பெற வேண்டும் என்கிற கோரிக்கையையும் தற்போது முன்வைத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் மாணவர்களுக்கு கடத்தப்பட்டால் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதோடு, NCERT தற்போது வெளியிட்டுள்ள துணைப்பாட (supplementary) புத்தகங்களில் உள்ள சில பகுதிகளை சுட்டிக்காட்டி அதற்கு மறுப்பும் தெரிவித்துள்ளது. அவற்றில் சிலவற்றை தொகுத்து கீழே கொடுத்துள்ளோம்.

 “நமது இலக்கியங்கள் நமக்கு சொல்வதென்னவென்றால் நமது (இந்திய நாகரீகத்திற்கு) பறக்கும் விண்கலன்கள் (Flying Vehicles) பற்றிய அறிவு நமக்கு அப்போதே இருந்தது என்பது புலனாகிறது. விமானிக்கா சாஸ்திரம் என்னும் ‘ஏரோநாட்டிக்கல் அறிவியல்’ நூல் இது பற்றிய தகவல்களைக்கொண்டுள்ளது. இந்த நூலில், விண்கலன்களின் என்ஜின்களை தயாரிக்கும் முறை, அவை இயங்கும் முறை மற்றும் ஜைரோஸ்கோப் (Gyroscopic systems) பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

Bharat’s Chandrayaan Mission புத்தகம்  (பக்.2)

(ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு கொடுக்கப்படும்) 

AIPSN விளக்கம்: மிகவும் சிலாகித்து பேசப்பட்டுள்ள ‘விமான சாஸ்திரம்’ என்னும் நூல், 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. அதில் விவரிக்கப்பட்டுள்ள வடிவமைப்புகள், இயந்திரங்கள் மற்றும் கருவிகள் முற்றிலும் கற்பனையானவை. அதுமட்டுமின்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ள கருவிகள், என்ஜின்கள் மற்றும் மாதிரி வடிவங்கள் அனைத்தும் அறிவியலற்றது, பயனற்றது.

“மிகவும் தொன்மை வாய்ந்த வேதங்களில், குதிரைகள் உள்ளிட்ட விலங்குகள் பூட்டிய சாரட்டு வண்டியில் பல்வேறு கடவுகள் செல்வதைப்பற்றி சொல்கின்றன. இந்த வண்டிகளால் பறக்கவும் முடியும். இந்து மத புராணங்களில், கடவுள்களின் வாகனங்கள் என்று விலங்குகள் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் கடவுள்கள் பயணித்துள்ளனர். அந்த வாகனங்கள் வான்வெளியில் எளிதாக செல்லக்கூடியவை மட்டுமல்ல, அவற்றில் இருந்து எந்த ஒலியும் எழாது. அப்படி ஒரு பறக்கும் வாகனத்தை தான் புஷ்பக விமானம் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

– Bharat’s Chandrayaan Mission புத்தகம்  (பக்.2,3)

(ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு கொடுக்கப்படும்)

AIPSN விளக்கம்: புராணங்களில் உள்ள பறக்கும் வாகனங்கள் மற்றும் விமானங்கள் புராணக் கதைகளை எழுதியவர்களின் அதீத கற்பனைத் திறனை மட்டுமே வெளிப்படுத்துகிறது. உலக அளவில் பல்வேறு கலாச்சாரங்களில் அவர்களது கடவுள்கள் பறக்கும் வாகனங்களில் சென்றதாக கதைகள் உள்ளன. ஆனால், அவற்றை வைத்து பறக்கும் வாகனங்கள் அப்போதே இருந்தது என்று யாரும் சொல்வதில்லை, அவற்றை ஆதாரமாக எடுத்துக்கொள்வதும் இல்லை.  

இதில் வேடிக்கை என்னவென்றால், ‘ரிக் வேதத்தில் இயந்திரப் பறவைகள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது’ என்கிற வரி முதலில் வெளியிட்ட பதிப்பில் இருந்தது. பிறகு வெளியிட்ட இரண்டாம் பதிப்பில் இந்த வரி நீக்கப்பட்டுள்ளது.

பாரத்திய ஆண்டின் மாதங்களின் பெயர்கள் சில நட்சத்திரங்களில் ஏற்படும் முழு நிலவு நாட்களை வைத்து பெயரிடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, சித்திரை மாதம் என்பது நிலவின் முன் சித்திரை நட்சத்திரம் வந்து போகும் காலமாகும். இதே போல் தான் மற்ற மாதங்களும்.

  Exploring the Moon Mission of Bharat (பக்கம் – 3)

(ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்படும் நூல்)

நிலவு நம் அருகில் உள்ளது. நட்சத்திரங்களோ தொலைவில் உள்ளன. ஆகவே, நட்சத்திரங்கள் பின்புறமிருக்க, அவற்றின் முன்னே தான் நிலவு வந்து செல்கிறது. நிலவின் முன் நட்சத்திரங்கள் வருவதில்லை. பாரத்திய ஆண்டு என்று கணக்கிடப்படுவதும் தமிழ் ஆண்டுப்பிறப்பு என்று கொண்டாடப்படும் 60 ஆண்டு சுழற்சி முறையின் இன்னொரு வடிவமே. இவை நம்பிக்கை சார்ந்ததே தவிர, அறிவியல் என்று சொல்ல முடியாது.

இதுமட்டுமல்லாது, மேலும் பல கருத்துகள் அறிவியலுக்கு புறம்பானது என்று கூறி AIPSN விமர்சித்துள்ளது. அவற்றை கீழே உள்ள இணைப்பில் காணலாம். இதற்கு முன்பாக, பிரதமர் மோடி பஜனை செய்தால் ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும், வேத காலத்தில் ஜெனிடிக் அறிவியல் (Genetic Science) இருந்தது, மேகத்திற்குள் சென்றால் ரேடார் கருவிகளால் விமானங்களை கண்டுபிடிக்க இயலாது என்றெல்லாம் பேசி இருந்தார். இதர பாஜகவினரும் அவர்களது பங்கிற்கு, புராண காலத்தில் இணையதள வசதி இருந்தது, மாட்டு கோமியம் கேன்சரை ஒழிக்கும் என்றெல்லாம் பேசி வந்தனர். 

கடந்த ஜூன் மாதம், NCERT சில வகுப்புகளின் பாடப்புத்தகத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி கோட்பாடு, தனிம அட்டவணை உள்ளிட்ட பல்வேறு பாடத்திட்டங்களை நீக்கியது. இதனை கண்டித்து NCERTயின் பாடத்திட்டத்தை வகுக்க ஆலோசகர்களாக இருந்த இருவர் தங்களது பெயர்களை நீக்கக்கோரினர். இதனைத்தொடர்ந்து, மேலும் 33 கல்வியாளர்கள் பாட புத்தகங்களில் இருந்து தங்களது பெயர்களை நீக்கக்கோரி கடிதம் எழுதினர். 

முதலில், அறிவியல் பாடங்கள் நீக்கப்பட்டன. தற்போது அறிவியலுக்கு பொருந்தாத கதைகள் மற்றும் புராணக்கதைகளை துணைப்பாடங்களில் ஊடுருவுகின்றன. இவை மாணவர்களின் அறிவியல் வேட்கையை வீழ்த்தி மூட நம்பிக்கை பித்தர்களாக்கி நமது எதிர்காலத்தையே பாழாக்கிவிடுமோ என்கிற ஐயம் எழுகிறது.

எழுதியவர்கள் – ராமசாமி ஜெயபிரகாஷ் மற்றும் ஞானபிரகாஷ்

இணைப்புகள்: 

https://aipsn.net/wp-content/uploads/2023/10/PressReleaseAIPSN-RecallNCERTModulesC3-LrHd.pdf

https://ncert.nic.in/chandrayaan.php

Narendra Modi’s new gaffe : Bhajans reduce malnutrition ! – You Turn

Indian prime minister claims genetic science existed in ancient times | Narendra Modi | The Guardian

Controversy Over PM’ Narendra Modi’s Cloud Can Help Us Escape Radar Comment On Balakot Air Strike (ndtv.com)

Minister ridiculed for saying ancient India invented internet – BBC News

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader