This article is from Jul 15, 2019

சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்டதாக செய்தி வெளியிட்ட தினமலர்.. கலாய்க்கும் நெட்டீசன்கள் !

2008-ம் ஆண்டில் சந்திராயன்-1 வெற்றிக்கு பிறகு சந்திராயன்-2-க்கான திட்டம் 2009-ல் இருந்து தொடங்கி தற்பொழுது இறுதிக் கட்டத்தில் உள்ளது. 10 ஆண்டுகள் கடுமையான பணிகளின் பலனாக சந்திராயன்-2 பணிகள் முழுவதும் முடிந்த பிறகு ஜூலை 15-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, சந்திராயன்-2 GSLV MK ||| ராக்கெட் மூலம் இன்று(ஜூலை 15) அதிகாலை 2.50 மணி அளவில் விண்ணில் ஏவப்பட தயாராக இருந்தது. இதற்கான கவுண்டன் 20 மணி நேரத்திற்கு முன்பாக ஜூலை 14-ம் தேதி தொடங்கியது.

ஆனால், கவுண்டன் முடிவதற்கு 56 நிமிடங்களுக்கு முன்பாக விண்ணில் ஏவத் தயாராக இருந்த ராக்கெட்டில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக உடனடியாக கவுண்டவுன் நிறுத்தப்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

பின்னர் இறுதியாக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது.

இந்நிலையில், சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது என ஜூலை 15-ம்தேதி தினமலர் நாளிதழில் செய்திகள் வெளியாகி விட்டன. தினமலர் நாளிதழின் இணையதளத்தில் செய்திகள் வெளியாகி இருந்தாலும், அவை நீக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், செய்தியின் தலைப்புகளை கூகுளில் காண முடிகிறது.

ஆனால், தினமலர் செய்தித்தாளில் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது என்ற செய்தி வெளியாகி விநியோகமும் செய்யப்பட்டு விட்டது. சந்திராயன்-2 ஏவப்பட்டது என தினமலர் செய்தித்தாளில் வெளியாகிய செய்தியை புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து நெட்டீசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். தற்பொழுது அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எனினும், நிலவிற்கு செல்ல இருந்த சந்திராயன் விண்கலம் பயணம் நிறுத்தப்பட்டது தொடர்பாக ” சந்திராயன்-2 பயணம் திடீர் ஒத்திவைப்பு ” என தினமலரின் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

சந்திராயன்-1 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. அது குறித்த விரிவான ஆராய்ச்சியை மேற்கொள்ள சந்திராயன்-2 திட்டம் தொடங்கப்பட்டது. மேலும், நிலவில் எந்தவொரு நாடும் செல்லாத தென்துருவத்தை ஆய்வு செய்து சந்திராயன்-2 சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Please complete the required fields.




Back to top button
loader