This article is from May 02, 2022

யார் இந்த மகரிஷி சரகா.. என்எம்சி-யின் “சரகா” உறுதிமொழியில் கூறுவதென்ன ?

மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்கு பதிலாக என்எம்சி பரிந்துரைத்து இருந்த ” மகரிஷி சரக சபதம் ” எனும் சமஸ்கிருத உறுதிமொழியின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை எடுத்தது சர்ச்சையாக உருவெடுத்து உள்ளது.

யார் இந்த மகரிஷி சரகா ?

பண்டைய இந்திய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல முனிவர்களைப் போலவே, ” மகரிஷி சரகா ” உடைய சரித்திரமும் நிச்சயமற்றதாக பார்க்கப்படுகிறது. சரக சம்ஹிதா என்பது ஒரு மருத்துவ மருந்தியல் மற்றும் மருத்துவ நடைமுறைகளை பற்றிய வர்ணனைகள் மற்றும் விவாதங்களின் தொகுப்பு (இந்திய பாரம்பரிய மருத்துவம்). இது கி.பி 1 மற்றும் 2 ஆம் நூற்றாண்டுக்கு இடையில் இயற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. சரக சம்ஹிதா எனும் சமஸ்கிருத நூலின் ஒரு பகுதியே சரக சபதம்.

தேசிய மருத்துவ ஆணையம் மகரிஷி சரகாவின் ” சரக சம்ஹித் ” என்ற சமஸ்கிருத நூலை அடிப்படையாக வைத்து புதிய உறுதிமொழி உருவாக்கப்படும் என அறிவித்து இருந்தது. அதன்படி, சரக சம்ஹித் நூல் அடிப்டையில் திருத்தி அமைக்கப்பட்ட புதிய உறுதிமொழியை பரிந்துரைத்து என்எம்சி இணையதளத்தில் வெளியிட்டது.

மகரிஷி சரக உறுதிமொழி : 

2022 மார்ச் 31-ம் தேதி என்எம்சி திருத்தப்பட்ட  ” மகரிஷி சரக சபதத்தின் ” ஆங்கில மொழிப்பெயர்ப்பு உடன் சுற்றறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அவை பின்வருமாறு,

  1. படிக்கும் காலத்தில் எனது ஆசிரியர்கள் மற்றும் சகாக்களுடன் ஒழுக்கமாக வாழ்வேன். எனது செயல் பாதுகாத்தல், சேவை சார்ந்தது மற்றும் ஒழுக்கமின்மை, பொறாமை இல்லாதது. எனது நடவடிக்கைகளில் நான் பொறுமையாகவும், கீழ்ப்படிதலுடன், பணிவாகவும், எப்போதும் சிந்தனையுடனும். அமைதியாகவும் இருப்பேன். எனது தொழிலின் விரும்பிய இலக்கை நோக்கியே எனது முழு முயற்சிகளையும், திறனையும் இலக்காக வைப்பேன்.

2. ஒரு மருத்துவராக, நான் எப்போதும் எனது அறிவை மனிதகுலத்தின் நலனுக்காக பயன்படுத்துவேன்.

3. நான் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், சோர்வாக இருந்தாலும் நோயாளிகளுக்கு சேவை செய்ய நான் எப்போதும் தயாராக இருப்பேன். பணத்திற்காகவோ அல்லது சுயநலத்திற்காகவோ எந்த நோயாளிகளுக்கும் தீங்கு செய்ய மாட்டேன், காமம், பேராசை அல்லது செல்வத்தின் மீது ஆசைப்படமாட்டேன். என் எண்ணங்களில் கூட ஒழுக்கக்கேடு வெளிப்படாது.

4. எனது ஆடைகள் கண்ணியமானதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும், நம்பிக்கையைத் தூண்டும் விதமாகவும் இருக்கும். என் நடத்தை ஆனது எப்பொழுதும் பொருத்தமாகவும், இனிமையாகவும், உண்மையாகவும், நன்மையாகவும் மற்றும் கண்ணியமாகவும் இருக்கும். அந்தந்த நேரத்திற்கும், இடத்திற்கும் ஏற்றவாறு பொருத்தமான செயல்களில் எனது அனுபவத்தைப் பயன்படுத்துவேன்.

5. இந்தத் துறையில் சாதிக்கவும்/ சமீபத்திய முன்னேற்றங்கள புதுப்பித்துக் கொள்ளவும் மற்றும் எனது அறிவை விரிவுப்படுத்தவும் நான் தொடர்ந்து முயற்சிப்பேன்.

6. என்னுடையது அல்லாத வேறு பாலின நோயாளிகளுக்கு உறவினர்கள் அல்லது உதவியாளர்கள் முன்னிலையில் நான் சிகிச்சை அளிப்பேன்.

7. ஒரு நோயாளியை பரிசோதிக்கும் போது, எனது விருப்பமும், கவனமும், புலன்களும் நோயைக் குணப்படுத்துவதில் கவனம் செலுத்தும். நோயாளி அல்லது குடும்பம் தொடர்பான ரகசியத்தன்மையை நான் தவறான முறையில் வெளியிடமாட்டேன்.

8. ஒரு அதிகாரம் என்றாலும்(எனது பாடத்தில்), நான் எனது அறிவையும், திறமையையும் ஆணவத்துடன் காட்டமாட்டேன்.

மேலும் படிக்க : மதுரை மருத்துவக் கல்லூரி உறுதிமொழி சர்ச்சை.. கல்லூரி முதல்வர், மாணவர்கள் அளித்த விளக்கம் !

Twitter link  

சரக சபதம் குறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ், ” இந்திய ஆயுர்வேத அறிஞர் சரகரின் தத்துவம் என்பது மன்னரால் வெறுக்கப்படுவோருக்கோ, மன்னரை வெறுப்போருக்கோ மருத்துவம் அளிக்கக்கூடாது; கணவர் இல்லாமல் மனைவிக்கு மருத்துவம் அளிக்கக் கூடாது என்பதாகும். இந்த பிற்போக்குத் தத்துவம் மருத்துவர்களின் உறுதிமொழியாக இருக்கக்கூடாது!.

சரகர் உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்பதை தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரையாக மட்டுமே வழங்கியுள்ள நிலையில், அதை மாணவர்களை ஏற்கச் செய்தது தவறு. இது மருத்துவ மாணவர்களின் மனதில் பிற்போக்குத் தனத்தை ஏற்படுத்தும். இது மருத்துவத்துறைக்கு நல்லதல்ல ” என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

மதுரை மருத்துவக் கல்லூரி சம்பவம் தொடர்பாக சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், ” ஏற்கனவே நாடு முழுவதும் சரக சபதம் என்ற உறுதிமொழி பல்வேறு திருத்தங்களுடன் வந்துள்ளது. அதன்படி, பிராமணர்களையும், பசுக்களையும் உயர்வாக நினைக்க வேண்டும் என அந்த உறுதிமொழி கூறுகிறது. பசுவுக்கும், நவீன மருத்துவத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. தற்போது திருத்தப்பட்ட உறுதிமொழியில் அந்த வாக்கியங்கள் இல்லை என்றாலும், பழைய உறுதிமொழியை கொண்டு வர வாய்ப்பு உள்ளன. இதில், சமஸ்கிருத திணிப்பும் இருக்கிறது ” என பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் எடுக்கும் உறுதிமொழியாக சரக சபதத்தை எடுக்க என்எம்சி பரிந்துரை அளித்த போதில் இருந்தே மருத்துவர்கள் தரப்பில் இதற்கான எதிர்ப்புகளும், எதிர் கருத்துகளும் வெளியாக தொடங்கின. தற்போது தமிழ்நாட்டில் ஒரு கல்லூரியில் சரக சபதம் எடுக்கப்பட்டதால் பெரிய அளவில் மீண்டும் சர்ச்சையும், எதிர்ப்பும் உருவாகி உள்ளது.

Please complete the required fields.
Back to top button
loader