மாணவி அஸ்வினி கொலை ! பரவும் புரளிகள் உண்மை என்ன ?

சென்னையின் கே.கே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியின் மாணவி அஸ்வினி கல்லூரி வாசலிலேயே வைத்து கத்தியால் குத்தி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவமானது தமிழகத்தில் தொடர்ந்து காதல் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை உணர்த்துகிறது.
காதல் வெறுப்பால் மாணவி அஸ்வினி கல்லூரி வாசலில் வைத்து கத்தியால் குத்தி கொல்லப்பட்ட பின் கொலை செய்த இளைஞனை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் போலீஸ் நடத்தி வரும் விசாரனையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மதுரவாயல் தனலெட்சுமி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகள் அஸ்வினி கே.கே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். அஸ்வினியும் அதே பகுதில் வசித்து வரும் அழகேசன் என்ற இளைஞனும் நீண்ட நாட்களாக நட்பாக பழகியது பின்பு காதலாக மாறியுள்ளது. ஆனால், ஒருவரை ஒருவர் பழகிய போது தான் அழகேசனின் நடத்தை சரியில்லை என அஸ்வினி விலகி விட்டார்.
இதை ஏற்றுக் கொள்ள முடியாத அழகேசன் பல முறை அஸ்வினியை சந்தித்து மனதை மாற்ற முயற்சித்துள்ளார். ஆனால், அதில் எத்தகைய பயனுமில்லை. ஆகையால், ஆத்திரமடைந்த அழகேசன் எங்கே தன் காதலி தனக்கு கிடைக்காமல் போய் விடுவாளோ என்று எண்ணி நேராக அஸ்வினியின் வீட்டிற்கே சென்று கட்டாயத் தாலி கட்டியுள்ளார்.
இது தொடர்பாக அஸ்வினியின் பெற்றோர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு போலீஸ் அழகேசன் மீது CSR பதிவு செய்து விசாரனைநடத்தினர். இரு தரப்பும் சமாதானமாகி அழகேசன் இனி அஸ்வினியை தொந்தரவு செய்யமாட்டேன் என்று போலீசிடம் எழுதி கொடுத்துள்ளார். அஸ்வினி இல்லத்தாரும் பிரச்சனையை பெரிதுப்படுத்த வேண்டாம், வருங்காலத்தில் பிரச்சனை செய்யமாட்டேன் என்று அழகேசன் கூறியதால் இதை இத்துடன் விட்டு விடலாம் என்று கூறியதால் மதுரவாயல் போலீஸ் தரப்பில் எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர். ஆக, இதற்கு முன் வந்த புகாரின் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், தனது மகளை ஜாபர்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு அனுப்பி வந்துள்ளனர் அஸ்வினியின் பெற்றோர். எனினும், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார் அழகேசன். இதனால் கடந்த ஒரு வார காலமாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார் அஸ்வினி.
நிலைமை சரியாகிவிடும் என்று எண்ணி சில நாட்களாக கல்லூரிக்கு வர தொடங்கினார் அஸ்வினி. இதை அறிந்த அழகேசன் கடும் கோபத்துடன் திட்டமிட்டு கையில் கத்தியுடன் கல்லூரி வாசல் பகுதியில் வந்து காத்திருந்துள்ளார். கல்லூரி முடிந்த பிறகு வெளியே வந்த அஸ்வினியை வழி மறித்து தன் காதலை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுள்ளார்.
அழகேசனின் காதலை அஸ்வினி ஏற்க மறுக்கவே, ஆத்திரமடைந்த அழகேசன் தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்ற எண்ணத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்வினியை சரமாரி குத்தியுள்ளார். அதிகப்படியான இரத்தம் வெளியேறியதால் மாணவி அஸ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். தன் காதலியை குத்தி கொன்று விட்டு தாமும் தற்கொலை செய்ய முயன்ற அழகேசனை பொதுமக்கள் ஆத்திரத்தில் அடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.
பட்டப்பகலில் ஒரு கல்லூரியின் வாசலில் வைத்து மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அக்கல்லூரியில் படிக்கும் மற்ற மாணவிகளுக்கும் ஒருவித அச்சத்தை உருவாக்கி இருக்கும். காதல் கைக்கூடவில்லை என்று இளைஞர்கள் செய்யும் முட்டாள் தனமான செயலால் பல பெண்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், மாணவி கொலை செய்யப்பட்டதை பார்த்து போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் உதவிக்கு அழைத்தும் யாரும் வரவில்லை என்று ஊடகத்தில் பேட்டியளித்த இளைஞன், மக்கள் வீடியோ எடுப்பதிலேயே குறிக்கோளாக இருந்தனர், நான் பார்த்தேன், போலீசார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வருகின்றனர், உடனடியாக வர வேண்டாமா! நான் பார்த்தேன் இரண்டு வண்டியில் வந்தார்கள், வட நாட்டு இளைஞர்கள் என்றெல்லாம் உளறிக் கொண்டிருந்தார். இவரை சந்தேகப்பட்டு சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறியதாலும், முன்னுக்கு பின் முரணாக பேசியதாலும் அருகில் இருந்தவர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். ஸ்டேஷனில் விசாரித்தால் நான் சம்பவத்தை பார்க்கவே இல்லை, அக்காவை அழைக்க வந்தேன், ஊடகத்தில் தெரிகிறது என்ற ஆர்வத்தில் பேசிவிட்டேன் என்று தகவல் தெரிவிக்கின்றார். பொதுவாக போலீஸ் வரவில்லை, ஆம்புலன்ஸ் வரவில்லை என்று சொல்லும் குற்றச்சாட்டோடு நிறுத்தி இருந்தால் சிக்கி இருக்க மாட்டார். அத்தனை பேர் இத்தனை பேர் வட நாட்டவர் என்றெல்லாம் உளறியதால் மாட்டிக்கொண்டார். உண்மையில் உடனடியாகவே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதும், அதனால் வண்டியில் மாணவியை அழைத்து சென்றதும் உண்மை.
மாணவி கொலை செய்யப்பட்ட சூழலில் தவறான தகவல்களும் வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. மாணவியை கொலை செய்த அழகப்பன் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், “ அஸ்வினியின் காதலை தான் ஏற்க மறுத்ததாகவும், ஆனால் அஸ்வினி தன்னை வற்புறுத்தியதால் காதலை ஏற்றதாக அழகேசன் கூறியுள்ளார் என்றும் அஸ்வினியின் படிப்பிற்காக அழகேசன் பண உதவி செய்ததாகவும் கூறி செய்திகள் வெளியாகின்றன.” ஆனால், துணை ஆணையர் அரவிந்தன் ஐ.பி.எஸ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது குற்றவாளியின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் ஒப்படைப்பது தான் முறை, அதற்குள் இப்படியான தகவல் எல்லாம் பரப்பப்பட்டு வருகிறது, லட்சக்கணக்கில் கல்விக்காக செலவளித்தார் என்பதெல்லாம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களே என்றார்.
பதற்றமான சூழ்நிலையில் மாணவியின் கொலை சம்பவம் தொடர்பாக தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் மற்றும் தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரனையை நடத்தினர். இதன் பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் துணை ஆணையர் அரவிந்தன் அவர்களிடம் மது போதையில் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சந்தேகமடைந்து விசாரித்த போது போலியான நிருபர் என்று தெரிய வந்தது. பின்னர் போலீஸ் நடத்திய விசாரணையில் தாம் போலியான நிருபர் என்றும், தன்னிடம் போலியான அடையாள அட்டைகள் இருப்பதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடம் 4 ப்ரெஸ் ஐ.டியும், 15 விசிட்டிங் கார்டுகளும் இருந்துள்ளன.
இந்த சம்பவத்தில் புரளி செய்திகளுடன், போலியாக பேட்டிக் கொடுத்த இளைஞன், போலியான நிருபர் என பல போலிகளும் சிக்கியுள்ளது. காதல் விவகாரம் அதனால் அந்த பெண்ணை மட்டும் குற்றவாளியாக ஆக்கி, அந்த இளைஞன் செய்ததை நியாயப்படுத்துவதும், உன்னை நினைத்து பட பாணியில் என்று கிடைத்த அரைக் குறை செய்தியை வைத்து ஒரு பெண்ணின் இறப்பை கொச்சைப்படுத்தும் செயலும் நிறுத்தப்பட வேண்டியவை.
சென்னை ஸ்வாதி, சேலம் வினுப்பிரியா, விழுப்புரம் நவீனா, திருச்சி மோனிஷா, கோவையில் தன்யா என்று தொடர்ந்து இளம்பெண்கள் கத்தியால் குத்தப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும், பெட்ரோல் ஊத்தி எரித்து கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இருப்பது காதல் என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே…!