சட்டசபை வரை சென்ற சென்னை அயோத்தியா மண்டபம் விவகாரம் : ஓர் விரிவான அலசல் !

சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்த சென்ற போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை கைது செய்து பின்னர் விடுவித்தது. இந்த விவகாரம் தமிழக சட்டசபை வரை சென்றது.

சென்னை மேற்கு மாம்பலத்தின் ஆரிய கவுடா சாலையில் 1954-ல் கட்டப்பட்ட அயோத்தியா மண்டபம் ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் வழிபாடு நடக்கிறது. இந்த அமைப்பு பள்ளி, கல்யாண மண்டபம் உள்ளிட்டவையையும் நிர்வகித்து வருகிறது.

ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் உறுப்பினரான ரமணி என்பவர், 2004-ம் ஆண்டில் இருந்தே அலுவலக பணியாளர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மீது புகார்களை தெரிவித்து வந்துள்ளார். நிதிமுறைகேடுகளில் ஈடுபடுவதாக எழுந்த புகார்களின் அடிப்டையில் விசாரணையைத் தொடங்கிய அறநிலையத்துறை, அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதாக 2013 டிசம்பர் 31-ல் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், ஸ்ரீ ராம் சமாஜ் சொத்துக்களை பாதுகாப்பதற்கும், வருவாய் வரவுகளை ஒழுங்குப்படுத்துவதற்காக சிவசுப்பிரமணிய கோவில் செயல் அலுவரை அயோத்தியா மண்டபத்தின் தக்கராக அறநிலையத்துறை நியமித்தது. இதை எதிர்த்து 2014 ஜனவரியில் ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் பெறப்பட்ட இடைக்கால தடை எட்டு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இருந்துள்ளது.

எனினும், மார்ச் 17-ம் தேதி இறுதி விசாரணையின் போது தனி நீதிபதி வி.எம்.வேலுமணி, ” மனுதாரர் தரப்பில், சமாஜ் ஒரு கோவில் அல்ல மற்றும் பொதுமக்கள் வழிபாடு செய்யவில்லை. ராமர், சீதை, லட்சுமணன், அனுமனின் பெரிய புகைப்படங்கள் மட்டுமே நிறுவப்பட்டு உள்ளன, சிலைகள் இல்லை எனக் கூறியுள்ளார்கள்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யஷ்வந்த், “சமாஜ் ஆனது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 பிரிவு 6(20)ன் படி ஒரு பொது கோவிலாகும். சமாஜில் சிலைகள் வைக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்கள் கோவிலுக்கு வருகிறார்கள். உண்டியல் மூலம் தொகையை வசூலிக்கிறார்கள். பெறப்பட்ட தொகைக்கு கணக்கு இல்லை, ஆனால் உறுப்பினர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு அதை பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக புகார்கள் வந்துள்ளதாகவும், அறநிலையத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்த போது சிலைகள் இருப்பதையும், வழிபாடுகள் நடப்பது, உண்டியல் வசூல் செய்வது உள்ளிட்டவையைக் கண்டுபிடித்தனர் எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் சமாஜ் பொது கோவிலா, இல்லையா என்பது போன்ற சர்ச்சைக்குரிய கேள்விகளை ரிட் அதிகார வரம்பில் முடிவு செய்ய முடியாது ” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்ததால் இடைக்கால தடையும் நீங்கியது. இதன் அடிப்டையில், மீண்டும் அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கும் நடவடிக்கைக்கு சென்றது.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்செல்வி அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்த போது, ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பிற்கு சொந்தமான ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, திருமண மண்டபத்தின் செயல்பாடுகளில் துறை எந்த வகையிலும் இடையூறு விளைவிக்காது. அதேபோல், பூஜை, சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் வழக்கம் போல நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், தேவையின்றி அரசியல் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்து இருந்தார். இப்படி அயோத்தியா மண்டப பிரச்சனையை தமிழக சட்டசபை வரை பாஜக கொண்டு சேர்த்தது.

மேலும் படிக்க : முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் நியமனத்தை தவறாக சித்தரிக்கும் மாரிதாஸ் ரசிக பக்கம் !

இதற்கு முன்பாக, 2018-ல் India Evagelical Lutheran Church அறக்கட்டளையில் எழுந்த பிரச்சனையால் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமனை நிர்வாகியாக நியமித்தது. திருச்சபையை சீராக நடத்துவதற்கும், அறக்கட்டளையின் நிதி, நிர்வாகம் அனைத்தும் அவருடைய மேற்பார்வையில் நடைபெறும் என அறிவித்தது. அதை வைத்தும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக வதந்திகள் பரப்பப்பட்டன.

அயோத்தியா மண்டபம் தொடர்பாக ஸ்ரீ ராம் சமாஜ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு இடையே நடைபெறும் நீதிமன்ற வழக்குகளை அறியாமலும், அயோத்தியா மண்டபத்தை 2013 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அறநிலையத்துறை கீழ் கொண்டு வர உத்தரவு பிறப்பித்தது தெரியாமலும், அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கீழ் கொண்டு வர தமிழக அரசு  தற்போது எடுத்த முடிவு போல் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவுவதை பார்க்க முடிகிறது.

links : 

https://www.mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/644822

‘Ayodhya Mandapam’: HC orders notice to HR&CE Dept. on appeal preferred by Sri Ram Sama

Please complete the required fields.
Back to top button