This article is from Jun 11, 2021

நாய் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட மாஸ்க்.. தூக்கி எறியும் மாஸ்க்குகளால் பாதிக்கப்படும் விலங்குகள் !

கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என அரசாங்கங்களால், மருத்துவர்களால் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மக்கள் நோய் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள மாஸ்க் அணிவது முக்கியமானதாக இருந்தாலும் கூட அதை சரியாக அப்புறப்படுத்துவதும் அதிமுக்கியம். பயன்படுத்திய மாஸ்க்களை அலட்சியமாக ஆங்காங்கே தூக்கி எறிவதால் சுகாதாரப் பிரச்சனைகள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் கூட பாதிப்புகள் உண்டாகவே செய்கின்றன.

சென்னையில் சைபெரியன் ஹஸ்கி வகையைச் சேர்ந்த நாய்க்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத நாயை அதன் உரிமையாளர் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது நாயின் வயிற்றில் மாஸ்க் இருப்பதை கண்டறியப்பட்டது. இதையடுத்து, நாய்க்கு மயக்க ஊசி செலுத்தி வயிற்றில் இருந்து மாஸ்க்கை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். மாஸ்க்கை அகற்றிய பிறகு அந்த நாய் நலமுடன் இருப்பதாக செய்திகளில் வெளியாகியது.

மக்கள் பயன்படுத்திய மாஸ்க்குகளை அலட்சியமாக ஆங்காங்கே தூக்கி வீசி செல்லும் செயல்களால் விலங்குகள் ஆபத்தை சந்திக்கின்றன. சென்னையில் மாஸ்க்கை உண்டு பாதிக்கப்பட்ட நாய்க்கு ஒரு உரிமையாளர் இருந்ததால் அந்த நாய்க்கு என்ன ஆகியது என அறிய முடிந்தது. அதுவே, பொது இடங்களில் சுற்றித் திரியும் நாய்கள், மாடுகள் போன்ற விலங்குகளுக்கு இப்படி நேர்ந்தால், அவற்றின் பாதிப்பு யாருக்கு தெரியும்.

உலகில் மனிதர்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது அதிகரித்துக் கொண்டே செல்வதால் குப்பைகள் எங்கு குவிக்கப்பட்டாலும் அங்கு பிளாஸ்டிக் கழிவுகளே அதிக அளவில் காணப்படுகின்றன. நாய்கள், மாடுகள் போன்றவை குப்பைகளில் கிடைப்பதை உண்டு வாழும் போது அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் நிலையில் இருக்கின்றன.

மேலும் படிக்க : பசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் !

2019-ல் சென்னையில் ஒரு மாட்டின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் குறித்து நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதுவும் உரிமையாளர் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதால் தெரிய வந்ததே. அதுவே உரிமையாளர் இல்லாத, தெருக்களில் வாழும் விலங்குகளின் நிலை என்னவாகும்.

மக்கள் அலட்சியமாக மாஸ்க் போன்றவற்றை தூக்கி வீசி செல்லும் போது விலங்குகள் அவற்றை உண்டு பாதிக்கப்பட பெருமளவு வாய்ப்புகள் உள்ளன. மேலும், வைரசால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்தி விட்டு கழற்றி வீசும் மாஸ்க்குகளில் கூட வைரஸ் ஆனது குறிப்பிட்ட நாட்களுக்கு உயிர் வாழக்கூடும்.

மாஸ்க் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு ஏற்படக் கூடாது என எப்படி மாஸ்க் அணிகிறோமோ, அதுபோல பயன்படுத்திய மாஸ்க்குகளை முறையாக அப்புறப்படுத்தவும் வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்.

Links :

Coronavirus can survive on face masks for a week, banknotes for days: Study

முகக்கவசத்தை விழுங்கி உயிருக்கு போராடிய நாயை காப்பாற்றிய மருத்துவர்கள்

Please complete the required fields.




Back to top button
loader