பொய் சொன்னவருக்கு துணை இன்னொரு பொய் சொல்பவரே ?: ஆதாரங்களின் தொகுப்பு!

Red Pix பெலிக்ஸ் சொன்ன தவறான தகவலுக்கு ‘The Commune' ஆதரவு!

மிக்ஜாம் புயலால் பெய்த பெரு மழையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், பல இடங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் நுழைந்து மக்களின் வீடுகள் மற்றும் உடமைகள் நாசமாகின. சில இடங்களில் இயல்பு வாழ்க்கை ஓரிரு நாட்களிலேயே திரும்பினாலும், சில இடங்களில் இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. 

முறையான மீட்பு பணிகள் நடைபெறவில்லை; பணம் படைத்த, அதிகார வர்க்கத்தோடு தொடர்பில் உள்ளவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாரபட்சமாக அரசு இயந்திரம் செயல்பட்டது; மழைநீர் வடிகால்கள் ஏன் எதிர்ப்பார்த்த அளவிற்கு வேலை செய்யவில்லை; சட்டமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ பாதிக்கப்பட்ட மக்களை பல இடங்களில் பார்க்க வரவில்லை என்கிற நியாயமான ஆதங்கமும், கோபமும் கேள்விகளும் பொது மக்களிடையே உள்ளது. 

வெள்ளம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால் 2015 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் பெய்த மழையின் அளவுகள் குறித்த ஒப்பீடுகள் பலர் முன்வைத்து வருகின்றனர். மழை வெள்ளம் தொடர்பாக பல்வேறு போலி செய்திகளும் பரவி வருகிறது. அந்த வகையில், ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்ட்4th Estate Tamil’ என்னும் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், 2023ம் ஆண்டு பருவ மழையில் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 4ம் தேதி வரையில் 89 செ.மீ. மழை பெய்துள்ளது. அதே நேரத்தில் 2023, டிசம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி  வரையில் பெய்த மழையின் அளவு 58 செ.மீ. அதுவே 2015ம் ஆண்டு ஒப்பிடுகையில்  2015 நவம்பர் மாதம் மட்டுமே 104 செ.மீ. மழை பெய்துள்ளது. டிசம்பர் 01, 2015 காலை 8.30 மணியிலிருந்து  டிசம்பர் 02, 2015 காலை 8.30 மணி வரை, ஒரு நாளில் மட்டும் பெய்தது 48 செ.மீ. மழை. எனவே எந்த விதத்திலும் இந்த மழையை, 2015 மழையோடு ஒப்பீடு செய்யவே முடியாது’ எனக் கூறியிருந்தார். அதாவது ஒப்பீட்டளவில் 2015ம் ஆண்டு மழை அதிகம் எனக் கூறினார். 

இது குறித்து யூடர்ன் தளத்தில் கட்டுரை வெளியிட்டோம். அதற்கு மறுப்பு தெரிவித்து பெலிக்ஸ் அவர்கள் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் thumnail-ல் அநாகரிகமாக தலைப்பிட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டார். 

Red Pix பயன்படுத்திய Thumbnail.

அதில் ஆதாரங்களாக அவர் குறிப்பிடும் பல தகவல்களை தவறாக திரித்து கூறியுள்ளார். அவை பின்வருமாறு:

தவறு 1: 

முதலில் அவர் ஆதாரமாக ‘Tamilnadu Weather-IMD’ டிவிட்டர் பதிவை காண்பிக்கிறார். அதில், சென்னையில் 2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரையிலான வட கிழக்கு பருவ மழைக்காலத்தில் வழக்கமாக 69 செ.மீ. பெய்திருக்க வேண்டும். ஆனால், 89 செ.மீ. பெய்துள்ளது. இது 29 சதவீதம் கூடுதல் என்றும் டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை நுங்கம்பாக்கம் (Normal rainfall : 5cm ; Actual : 58cm) மற்றும் மீனம்பாக்கம் (Normal rainfall : 5cm ; Actual : 50cm) பகுதிகளில் பெய்த மழையின் அளவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த டிவிட்டர் பதிவை குறிப்பிட்டு ‘2023ல் வந்த புயலின் போது (மிக்ஜாம்) பெய்த மழையின் அளவு இது. எனவே மழை குறைவாக பெய்துள்ளது’ என பெலிக்ஸ் கூறுகிறார். 

டிசம்பர் 9ம் தேதி பதிவிட்ட இந்த வீடியோவில், 4ம் தேதி வரையிலான IMDயின் தரவினை (X Post) பெலிக்ஸ் காண்பிக்கிறார். ஆனால், 6ம் தேதியே IMDயின் இணைய தளத்தில் புதிய தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் நவ.30 – டிச.6 வரை பெய்த மழையின் அளவு அந்த வாரத்திற்கான சராசரியை விட 762% அதிகம் என்றும், அக்.1 முதல் டிச.6 வரை பெய்த மழையின் அளவு சராசரியைவிட 52% அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கூறாமல், டிச.4 வரையிலான தகவலை அவர் கூறியதன் காரணமாக டிச.5ல் பெய்த கனமழையின் அளவு அதில் பிரதிபலிக்கவே இல்லை.  

சென்னையில் நவ.30 முதல் டிச.6 வரையில் வழக்கமாக 66.5 மி.மீ. (6.65 செ.மீ) பெய்திருக்க வேண்டும். ஆனால், 572.9 மி.மீ. (57.29 செ.மீ) பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 762 சதவீதம் அதிகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பருவக் காலத்தில் (அக்.1 – டிச.6) 707.5 மி.மீ. (70.75 செ.மீ) பெய்திருக்க வேண்டிய மழை 1077.0 மி.மீ. (107.7 செ.மீ) பெய்துள்ளது. இது 52 சதவீதம் அதிகம் என்றுள்ளது. 

அதற்கு அடுத்த வாரமான டிச.7 – டிச.13 தேதியில் சென்னையில் வழக்கமாக 36 மி.மீ. (3.6 செ.மீ) பெய்திருக்க வேண்டிய மழை, 2.2 மி.மீ. (0.22 செ.மீ) மட்டுமே பெய்தது. இது அந்த வாரத்திற்கான அளவில் 94 சதவீதம் குறைவு. இதனையொட்டி, பருவகாலத்திற்கான மழையின் அளவு சராசரியை விட 52 சதவீதமாக இருந்த மழையின் அளவு 45 சதவீதமாக குறைந்துள்ளது. இது IMD வெளியிட்ட சமீபத்திய தகவல்.


தவறு 2 : 

பின்னர், ADS (Astrophysics Data System) வெளியிட்ட அறிக்கையை குறிப்பிட்டு, ‘01.11.2015 முதல் 05.12.2015  வரை 1416.8 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட விட 408.4 மி.மீ. அதிகம்’ என கூறியுள்ளார். 

ஆனால், ‘The rainfall received in Chennai district during 1.11.2015 to 5.12.2015 was 1416.8 mm against the normal of 408.4 mm.’ என்றுதான் அவ்வறிக்கையில் உள்ளது. அதாவது, வழக்கமாக 408.4 மி.மீ. பெய்ய வேண்டிய மழை, இம்முறை 1416.8 மி.மீ. பெய்துள்ளது என கூறப்பட்டுள்ளதை படித்து தவறாக பேசியுள்ளார். அறிக்கையில் உள்ளதை படித்து சொல்வதிலேயே தவறு செய்துள்ளார். 

தவறு 3: 

அடுத்ததாக, தனது வீடியோவில் ‘American Meteorological Society’ அறிக்கையில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரையின் ஒரு பகுதியை highlight செய்துகாட்டுகிறார். அந்த பகுதியில், கடந்த 100 ஆண்டுகளில் அதிகம் மழை பெய்த இரண்டாவது நவம்பர் எனக் குறிப்பிடப்பட்டு இருப்பதை மாற்றி ‘100 ஆண்டுகளில் பெய்யாத மழை 2015ல் பெய்தது’ என்று பேசியுள்ளார். இது நவம்பர் மாதத்தை பற்றிய ஒரு கூற்று. டிசம்பர் மாதம் 1,2 தேதிகளில் பெய்த பெரு மழையைப்பற்றி அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவர் மேற்கோள்காட்டிய அந்த வாக்கியம் கூறியது நவம்பர் மாதத்தில் பெய்த மழையின் அளவை மட்டுமே. (November had been the second wettest month in Chennai (1049 mm) in more than 100 years, but the main floods were caused by one day of extreme precipitation on 1 December) 

மேலும் அதில், 18 வெவ்வேறு மையங்களில் மழையின் அளவு 77 மி.மீ. முதல் 494 மி.மீ. வரை பதிவாகியுள்ளது என்றுள்ளது. அதாவது, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், குறைந்த பட்சமாக 7 செ.மீ மழையும் அதிகபட்சமாக 49 செ.மீ மழை வரை பெய்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அதில் குறிப்பிட்டவாரே விளக்காமல், ஒட்டுமொத்த சென்னையிலும் சராசரியாக 49 செ.மீ மழை என பொருள் கொள்ளும்படி கூறியுள்ளார். சென்னையில் பெய்த மழையின் அளவை எடுத்துக்கொண்டால் சராசரியாக 28 செ.மீ மழை பெய்துள்ளது. 

இதே போல் ‘world weather attribution’ அறிக்கையை மேற்கோள் காட்டும் போதும் கூறுகிறார். அதிலும் வெவ்வேறு  இடங்களில் 77 மி.மீ. முதல் 494 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றுதான் கூறப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த சென்னையிலும் 49 செ.மீ மழை பெய்தது  எனக் கூறப்படவில்லை. 

உண்மையில் இந்த அதிகப்படியான மழை தாம்பரம் (49 செ.மீ) மற்றும் செம்பரம்பாக்கம் (47 செ.மீ) பகுதியில் 2015ல் பெய்தது. அப்போது நுங்கம்பாக்கம் 29 செ.மீ, மீனம்பாக்கம் 35 செ.மீ அளவு மழை பெய்தது. தாம்பரத்தில் பெய்த மழையை ஒட்டு மொத்த சென்னையிலும் பெய்த மழையென தவறான பொருளில் தான் குறிப்பிட்டுள்ளார். 

தவறு 4: 

அடுத்தபடியாக ‘NASA earth observatory’ கட்டுரையை மேற்கோள்காட்டி பேசுகிறார். அதில், 1901ம் ஆண்டிற்கு பிறகு 24 மணி நேர கணக்குப்படி அதிக கனமழை டிச.1-2 அன்று பெய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைப்பற்றி தனியாக கீழே காண்போம். 

‘NASA earth observatory’ கட்டுரையைப்பற்றி பேசும் பொது ஒரு தகவலை highlight செய்து காண்பிக்கிறார். அதை வைத்து, சென்னையில் 50 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது என்று NASA-வே சொல்லிவிட்டது என்கிறார். ஆனால், அவர் மேற்கோள் காட்டிய பகுதியில் சொல்லி இருப்பது என்னவென்றால், 50 செ.மீட்டருக்கும் அதிகமான  மழை கடலில் தென்கிழக்கு பகுதியில் ஓரிடத்தில் பெய்தது என்றுதான் கூறப்பட்டுள்ளது. மேலும், அதே கட்டுரையின் ஒருபகுதியில், 34.5 செ.மீ சென்னையில் பதிவாகியுள்ளதாக IMD கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

தவறு 5: 

‘Research Gate’ தளத்தில் வெளியான ஆய்வறிக்கையில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்ததாக கூறப்பட்டுள்ளது என பெலிக்ஸ் கூறுகிறார். அதில், அதிகப்படியாக மழை பெய்தது, அதற்கான காரணம் என்ன என்று பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது. ஆனால், பெலிக்ஸ் சொன்ன அந்த ஒரு வாக்கியம் இடம் பெறவில்லை.

தவறு 6: 

இவை மட்டுமின்றி, 4th Estate-க்கு அளித்த நேர்காணலில் 2023 வெள்ளத்தின் போது அடையாற்றில் தான் வெள்ளம் போனது. கூவம், கொசஸ்தலை ஆற்றில் பெரிய அளவில் தண்ணீர் செல்லவில்லை என்கிறார். ஆனால், பூண்டியில் இருந்து 45,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு அது கொசஸ்தலை ஆற்றின் வழியாகத்தான் சென்றது. கூவத்திலும் வெள்ளம் சென்றதால் ரயில் நகர் பாலத்தின் ஒரு பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. 

இப்படி 2015ம் ஆண்டு பெய்த பெருமழை குறித்து வெளியான ஆய்வறிக்கைகளை மேற்கோள் காட்டும்போது கூட தப்பும் தவறுமாக கூறுகிறார். 

IMD-யின் ஒரு நாள் கணக்கு: 

சாதாரணமாக, ஒரு நாள் கணக்கு என்பது நள்ளிரவு 12:00 (00:00:00) முதல் தொடங்கும் 24 மணி நேர கணக்கு. இது 24 மணி நேரம் கழித்து மீண்டும் நள்ளிரவு 12 மணிக்கு (11:59:59) முடிவடையும். இதன் அடிப்படையில் தான் பிறப்பு இறப்பு கணக்கில் இருந்து சாதாரண ரயில், பேருந்து போக்குவரத்துக்கான டிக்கெட் வரை அன்றாட வாழ்வில் அனைத்தும் செயல்படுகிறது.

ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மழையின் அளவை கணக்கிடும் முறைப்படி காலை 8.30 மணி முதல் மறுநாள் காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரமே ஒரு நாள் ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் பெய்யும் மழையின் அளவு ஒரு நாள் கணக்காக எடுத்துக்கொள்ளப்படும்.

2015ம் ஆண்டின் நூற்றாண்டு சாதனை vs 2023:

மேற்கூறிய IMDயின் 24 மணி நேர கணக்கு படி, 2015ல் டிச.1 – டிச.2 தேதியில் பெய்த மழையின் அளவு நூற்றாண்டில் இல்லாத அளவு தான். தற்போது 2023ல் பெய்த மழையின் அளவும் அந்த 24 மணி நேர கணக்குப்படி அதிகம் இல்லை தான். இது குறித்து பெலிக்ஸ் மேற்கோள் காட்டியதைவிட இன்னும் பல இடங்களிலும் செய்திகளிலும் எழுதப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளத்திற்கான காரணம் என்று அணுகும் போது, இந்த கணக்கை மட்டுமே பார்ப்பேன் என்று பிடிவாதம் காட்டுவது சரியான அணுகுமுறை அல்ல. 

2015ம் ஆண்டு பெய்த பெருமழையின் உச்சம் IMDயின் ஒரு நாள் அளவுகோளில் உள்ள ‘8:30AM to 8:30AM’ காலவரையறைக்குள் பெய்து முடிந்தது. அதற்கு முன்னும் பின்னும் அதி கனமழை பொழியவில்லை. இதுவே 2023ம் ஆண்டு பெய்த பெருமழை தொடங்கியதே டிச.3ம் நாள் இரவு 8:30 அளவில் தான். அப்போது தொடங்கி, அடுத்த நாள் இரவு 8-9 மணி வரை அதிகப்படியான மழை பெய்தது. அதற்குப்பின், புயல் ஆந்திர பிரதேசம் நோக்கி நகரவே மழையின் அளவு படிப்படியாக குறைந்தது. கிட்டதட்ட 24 மணி நேரத்தில் பெய்த கனமழை தான் என்றாலும் இது ஒரு நாள் மழையின் அளவாக IMDயின் நடைமுறைப்படி கணக்கிடப்படாது. இரண்டு நாட்கள் கணக்கில் தான் இந்த மழையின் அளவு பதிவாகும். 

‘Chennai Rains-COMK’ என்னும் X பக்கத்தை நடத்திவரும் கே.ஸ்ரீகாந்த் கூறிய இந்த கருத்தை சுட்டிக்காட்டி தான் The News Minute தனது கட்டுரையில் 2023ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பெய்த  மழை அளவை ஒப்பிட்டு 2023ம் ஆண்டு தான் அதிக மழை பெய்ததாக கூறியது. வெள்ளம் ஏற்பட்டதற்கு முந்தைய மூன்று நாட்கள் கணக்கை ஒப்பிட்டு 2015-ஐ விட 2023ல் தான் ஒப்பீட்டளவில் மழை அதிகம் என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ கட்டுரை எழுதியுள்ளது. அதில், 2015ல் வெள்ளம் ஏற்பட்ட போது (Dec 1,2,3) நுங்கம்பாக்கத்தில் 34 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதே பகுதியில் 2023ல் (Dec 2,3,4) 53 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும் மீனம்பாக்கத்தில் 2015ல் 44 செ.மீ, 2023ல் 52 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் பகுதிகளை கொண்டு பார்க்கையில் 2023ல் வெள்ளம் வந்த நாட்களில் மழையின் அளவு அதிகம். இந்த இரண்டு கட்டுரையின் அடிப்படையில் தான் பெலிக்ஸ் பேசியது தவறான தகவல் என யூடர்ன் கட்டுரை வெளியிட்டது. இதற்கு மறுப்பு தெரிவிப்பதாக பெலிக்ஸ் வெளியிட்ட வீடியோவில், இந்த கட்டுரைகள் பற்றியும் வெள்ளம் ஏற்படுவதற்கு இரண்டு/மூன்று நாள் முன்பு பெய்த மழையின் அளவு கருத்தில் கொள்ளவேண்டும் என்பதற்கு குறிப்பிட்டுள்ள காரணிகளைப் பற்றியும் பேசாமல் முற்றிலுமாக தவிர்த்துவிட்டு IMD’யின் 24 மணி நேர கணக்கு மற்றும் 2015ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த ஒட்டுமொத்த மழையின் அளவை மட்டுமே வைத்துக்கொண்டு பேசியுள்ளார். அதற்கு தேவையான சில சொற்களை மேற்கோள் காட்டுகிறாரே தவிர மேற்கூறப்பட்டுள்ளவைக்கு விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

IMD வெளியிட்ட ஒட்டு மொத்த மழை அளவு : 

மழை தொடர்பாக இத்தகைய திரிபுவாதங்கள் ஒருபுறமிருக்க, 2015 மற்றும் 2023ம் ஆண்டுகளில் வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் பெய்த ஒட்டு மொத்த மழை (Cumulative Rainfall) தொடர்பான வரைபடத்தை IMD வெளியிட்டது.

இதனை வைத்து 2015ல் தான் அதிக மழை பெய்துள்ளது என்றும் யூடர்ன் தவறான தகவல் அளித்து விட்டது என்றும் சவுக்கு சங்கர், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராசன் உட்பட பலரும் மீண்டும் தவறான தகவலை பரப்பிக்கொண்டுள்ளனர். பெலிக்ஸ்-யின் வீடியோவையும், IMDயின் Cumulative Chart’ஐயும் வைத்து வலதுசாரி ஊடகமான ‘Commune mag’ம் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

Cumulative என்றால் என்ன?

உதாரணத்திற்கு, ஒரு வாரத்தில் அடுத்தடுத்த நாட்களில் முறையே 10, 20, 50 செ.மீ. மழை பெய்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த வாரத்தின் Cumulative மழை முதல் நாளில் 10 செ.மீ, இரண்டாம் நாளில் 30 செ.மீ, மூன்றாம் நாளில் 80 செ.மீ ஆகும். அதற்கு பின் பெய்யும் மழையை பொறுத்து அந்த எண் கூடிக்கொண்டே போகும். அப்படி அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் பருவ காலத்தில் பெய்த மொத்த மழையை (Cumulative Rainfall) முறைப்படி ஒரு வரைபடமாக (Line Chart) IMD வெளியிட்டுள்ளது. அதை பார்த்தால், மழை பெய்த அன்று மழையின் அளவை குறிப்பிடும் கோடு மேல் எழும்பியும், மழையில்லாத நாட்களில் கோடு பக்கவாட்டிலும் நகர்ந்து இருக்கும். 

முன்னர் கூறியவாறு, ஒட்டு மொத்த பருவகாலத்தை ஒப்பிடுகையில் 2015ல் அதிக மழை பெய்தது உண்மைதான். ஆனால், வெள்ளம் ஏற்பட காரணமான மழையை ஒப்பிட்டால் 2023ல் அதிகமாக பெய்துள்ளது. IMD-யின் அவ்வரைப்படத்திலேயே அதிகப்படியாக பெருமழை பெய்த நாட்களை பார்க்கையில், 2023ல் வெள்ள நாட்களில் போது (டிச.3,4) பெய்த மழை அதிகம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இடைவிடாது தொடர்ந்து பெய்த மழையை, அது பொழிந்த காலத்தை அடிப்படையாகக்கொண்டு தனது கணக்குப்படி IMD இரண்டு நாட்கள் பெய்த மழையாக கணக்கிட்டது என்கிற ஒரே காரணத்தினால், நிலத்தில் தேங்கிய நீரின் அளவில் எந்த வித மாற்றமும் இருக்க போவது கிடையாது. 

TN-SMART தரவுகள்: 

2015 (டிச.1,2) மற்றும் 2023 (டிச.4,5) ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்ட நாட்களை அடிப்படையாக கொண்டு, அதற்கு முந்தைய நாட்களில் பெய்த மழையின் அளவை தமிழ்நாடு அரசின் ‘TN-SMART’ இணைய தளத்தில் இருந்து சேகரித்தோம். 2015, 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் நவம்பர் 20 முதல் டிசம்பர் 5 வரை பெய்த மழையின் அளவை ஒரு அட்டவணையில் தொகுத்தோம். நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், DGP அலுவலகம், பூந்தமல்லி, தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் செம்பரம்பாக்கம் (வருவாய்) ஆகிய பகுதிகளில் பெய்த மழையின் அளவை ஆய்விற்கு உட்படுத்தினோம்.  

Data from TN-SMART. File attached below.

அதன்படி வெள்ளத்திற்கு காரணமான இரண்டு நாள் மழையின் அளவை ஒப்பிடுகையில் தாம்பரம் மற்றும் செம்பரம்பாக்கத்தை தவிர்த்து மற்ற நான்கு இடங்களிலும் 2023ல் தான் அதிக மழை பெய்துள்ளது. இந்த இரண்டு நாட்களில் பெய்த பெருமழை வெள்ளமாக மாற அதற்கு சில தினங்கள் முன் பெய்த மழையால் ஏற்பட்டிருக்கும் soil saturation ஒரு காரணம் என்பதால், முன் நாட்களில் பெய்த மழை எவ்வளவு என்பதனை ஆராய்ந்தோம். மேற்கூரிய அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்ட நாளில் இருந்து ஒரு வாரம் முன்பு பெய்த மழையின் அளவு 2023ல் தான் சற்று அதிகமாகவே பெய்துள்ளது. இதனால், மண் மழைநீரை உறிஞ்சும் தன்மை கணிசமாக குறைந்து இருக்கும். 

Cumulative Rainfall Data தான் ஆகச்சிறந்த ஆதாரம் என்று பலர் கருதியதால், வெள்ளம் ஏற்பட்டதற்கு ஒருவாரம் முன்னர் பெய்த மழையின் அளவை வைத்து நாமும் Line Charts உருவாக்கிப் பார்த்தோம். அவை பின்வருமாறு:

 

2015 பெருமழையை சிறுமைப்படுத்தவில்லை:

வெள்ளம் ஏற்படுவதற்கு முன் பெய்த மழையின் அளவை வைத்துப்பார்க்கும் போது 2023-ல் பெய்த மழையின் அளவு அதிகம் என்று சொல்லும் போது, எந்த வகையிலும் 2015ல் பெய்த மழையின் அளவை சிறுமைப்படுத்தவில்லை. 2015ம் ஆண்டு பெய்தது பெருமழை தான். அதே போல், அதற்கு இணையாக, சில இடங்களில் அதற்கும் மேலாக 2023-ல் பெய்த மழையும் பெருமழை தான். ஆனால், தற்போது 2015-ல் பெய்த மழையின் அளவை அதிகம் என்று சொல்பவர்கள் 2023-ல் பெய்த மழை ஒரு பெருமழையே அல்ல என்றும் சாதாரணமான மழை தான் என்றும் ஒரு தோற்றத்தை உருவாக்க முற்பட்டிருக்கின்றனர். அதற்காக, இரண்டு நாள் மழையின் அளவை ஒப்பிட்டு பேசும் போது ஒட்டுமொத்த மழையின் அளவை எடுத்துக்கொண்டு வருவதும், 24 மணி நேர சாதனையை இந்த மழை முறியடிக்கவில்லை என்று கூறுவதுமாக இருக்கின்றனர். 

விமர்சனங்கள்:

தமிழ்நாடு அரசை, திமுக’வை, முதல் அமைச்சர் ஸ்டாலினை, அமைச்சர்களை விமர்சிப்பதற்கும்; மழைநீர் வடிகால், ஆறுகள் தூர்வாருதல் போன்ற  திட்டங்களில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்துவதற்கும்; மீட்பு பணிகள், நிவாரணம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் இருக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டுவதற்கும் 2023 டிச.4,5ல் பெய்துள்ள மழையின் அளவை சிறுமைப்படுத்த தேவையில்லை. அது ஒரு பெருமழையே அல்ல என்று மறைக்கத்தேவையில்லை. தற்போது மழையில் பாதிக்கப்பட்டுள்ள பொது  மக்கள் இந்த கேள்விகளை அரசிடம் கேட்பதற்கு மழையின் அளவு குறித்தான விவாதத்திற்குள் செல்லவே இல்லை. அது தேவையும் இல்லை.

அரசியல் உள்நோக்கம்? 

“மீண்டும் ஒரு பெரு மழை. மீண்டும் ஒரு வெள்ளம். 2015-ஐ அளவிற்கு உயிர் சேதம் இல்லை. ஆனால் அதற்கு இணையான பொருட்சேதம். இப்படிப்பட்ட பெருமழையை எதிர்கொள்ள ஏன் அரசு தயார் ஆகவில்லை?” என்று மக்கள் தமிழ்நாடு அரசை கேட்கும் போது, அதை சீர்தூக்கிப்பார்த்து அதனை பிரதிபலிக்க வேண்டிய நேரத்தில், தற்போது பெய்துள்ள மழையின் அளவு ஒரு பொருட்டே அல்ல என்பது போன்ற தோற்றத்தை ஒரு தவறான/பொய்யான தகவலை வைத்து பத்திரிக்கையாளர் என்கிற போர்வையில் மீண்டும் மீண்டும் சொல்வது அவர்களுடைய மற்ற விமர்சனங்களையும் சந்தேகிகும்படியாகி விடுகிறது.

ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ பொய்யான ஒரு தகவலை அல்லது மற்ற கட்சியின் மீது குற்றச்சாட்டை வைத்தால் சுட்டிக்காட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்கும் பத்திரிக்கையாளர்கள் தவறான/பொய்யான தகவல்களை தொடர்ந்து பேசுவது தற்செயலானதாக தெரியவில்லை. அதில் தனிப்பட்ட உள்நோக்கமும், சிலருக்கு அரசியல் லாபம் தேடித்தரும் உள்ளடி வேலையும், சில பல ஆதாயங்களும் பொதிந்திருக்குமோ என்றும்  எண்ணத்தோன்றுகிறது. மேலும், The Commune போன்ற மத வெறுப்பு மற்றும் பொய் செய்திகளை பரப்பும் வலதுசாரி இணைய தளமும் இந்த பொய்யை எடுத்துக்கொண்டு செல்வதன் மூலம் இதன் தீவிரத்தன்மையை உணர முடிகிறது.

ஆதாரங்கள்:

IMD Report Week ending on 6.12.2023

IMD Report Week ending on 13.12.2023

Rainfall Data from Nov 20 to Dec 5 of 2015 & 2023

 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader