This article is from Dec 05, 2018

‘spy camera’ பிடிக்க App உதவாது, ஆனால் இது உதவும்.

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தில்லை கங்கா நகரில் இயங்கி வரும் பெண்கள் விடுதியில் ரகசியக் கேமராக்களை வைத்து இருந்த விடுதி நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். இச்செய்தி  மூலம், ரகசியக் கேமராக்களை அதற்கான செயலிகளை கொண்டு கண்டறியலாம் என அதிகம் கூறப்படுகிறது. ஆனால், அது சாத்தியமா ? ரகசியக் கேமராக்களை கண்டறியும் பிற வழிகளையும் விரிவாக காண்போம்.

குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் வசித்து வரும் சம்பத் ராஜ் எனும் சஞ்சீவ் என்பவர் இரு மாதங்களுக்கு முன்பு தில்லை கங்கா நகரில் ஒரு கட்டிடத்தை வாடைக்கு எடுத்து பெண்களுக்கான விடுதி என சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து பிரபலப்படுத்திக் கொண்டார். இரு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட விடுதியில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் 6 பெண்கள் மற்றும் நர்ஸ் ஒருவரும் தங்கி இருந்துள்ளனர்.

சீரமைப்பு பணிகள் செய்வதாகவும், வேறு சில காரணங்களை கூறி சஞ்சீவ் அடிக்கடி விடுதி அறைகளுக்கு வந்து சென்றுள்ளார். இதனால் அங்கு தங்கிருந்த பெண்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. விடுதியில் இருந்த பெண் ஒருவர் ஹர் ட்ரையர்-ஐ சுவிட்ச் போர்ட்-ல் பொருத்தும் பொழுது முடியாமல் போகையில்  அதனை பிரித்து பார்க்கையில் ரகசியக் கேமராக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து,  அறையில் ரகசியக் கேமராக்கள் இருப்பது உறுதியான பின்பு  உடனடியாக, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெண்கள் தங்கி இருந்த அறையில் சுவிட்ச் போர்ட், ஆங்கர், திரைச்சீலைக்கு பின்னால், குளியல் அறையில் இரண்டு, லைட் பல்பு-ல் இரண்டு கேமராக்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேமரா வைத்து இருந்தாலும் சரியான காட்சிகள் தெரிவதற்காக சீரமைப்பு பணிகள் எனக் கூறி அடிக்கடி பெண்களின் அறைகளுக்கு வந்து கேமராவின் நிலையை மாற்றி வைத்துள்ளார். பொருத்தப்பட்ட கேமராக்களானது சத்தங்கள் எழுந்தால் மட்டுமே இயங்கும் வகையில், நடப்பதை 2 மணி நேரம் பதிவுச் செய்யக் கூடியது என தெரிய வந்துள்ளது.

விடுதியை நடத்தி வந்த சஞ்சீவ் உடைய அலுவலக அறையை சோதனை செய்ததில் 18 ஆன்ட்ராய்டு செல்போன்கள், இரண்டு லேப்டாப்கள் உடன் சில ஆவணங்களையும் கைப்பற்றினர். எனினும், பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் பதிவுகள் ஏதும் எடுக்கவில்லை. கேமராக்களை பொருத்தி வைத்து காட்சிகள் சரியாக இருக்கிறதா என திட்டமிட்டு வந்துள்ளார். அந்நேரத்தில் பிடிக்கபட்டுள்ளார் . இதையடுத்து 3-ம் தேதி சஞ்சீவை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அவரிடம் வீடியோக்கள் ஏதுமில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது. 2011-ல் சஞ்சீவ் மீது நில பறிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெண்கள் விடுதியில் ரகசியக் கேமராக்கள் இருப்பதை ஸ்மார்ட் போன்களின் செயலி மூலம் கண்டறிந்ததாக செய்திகள் வெளியாகிறது. ஆனால், போலீஸ் தரப்பில் மேலே கூறப்பட்டுள்ள விவரமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகசியக் கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி மற்றும் கவனிக்க வேண்டியவை : 

  1. hidden camera detective apps : ரகசியக் கேமராக்களைக் கண்டறிய அதற்கான செயலிகளை பயன்படுத்தலாம் எனக் கூறுகின்றனர். ஆனால், அதில் பெரிதாக அம்சங்கள் ஏதுமில்லை. காரணம், செயலியை வைத்து சோதிக்கும் பொழுது எலெக்ட்ரானிக் சாதனங்கள் அருகில் கொண்டு சென்றாலே ஒலியை எழுப்புகிறது. ஆகையால், இதில் குறைகள் அதிகம் இருக்கின்றன. ரகசியக் கண்காணிப்பு கேமரா கண்டறியும் ஆப் ஒன்றினை பதிவிறக்கம் செய்து பார்க்கையில் எலக்ட்ரானிக் சாதனம் எதுவுமில்லா அறையிலும் கூட ஒலி எழுப்பியது. மேலும் மொபைல் ஆப் மூலம் சோதனை செய்யும் போது துல்லியமான முடிவுகளை பெற முடியாது. மொபைல் ஆப் அருகில் இருக்கும் காந்தப்புல விசைகளை கண்டறிந்து தகவல்களை அளிக்கும் என்கின்றனர். ஆனால் இதை ஆப் இல்லாமலே கண்டறியலாம்.

ஆனால், infra light-ஐ செல்போன் மூலம் வீடியோ எடுக்கையில் பார்க்க முடியும். உதாரணமாக, ரிமோட் போன்றவற்றில் இருக்கும் சிறிய infra light-ஐ சாதாரணமாக பார்க்க முடியவில்லை. அதையே வீடியோ எடுத்தால் நன்றாக தெரிகிறது. ஆகையால், இம்முறை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், ரகசியக் கேமராக்கள் அருகில் செல்போனில் பேசியப்படி செல்கையில் செல்போனில் ஒலி அதிர்வுகள் ஏற்படுவதை உணரலாம்.

2. அறையில் ஏற்கனவே தேவையற்ற பொருட்கள் இருந்தாலோ, சம்பந்தம் இல்லாமல் ஓயர்கள் இணைப்பில் இருந்தாலோ, சுவரில் ஓட்டைகள், பூந்தொட்டிகள், மின் சாதனப் பொருட்களான லைட், கடிகாரம், Wi-Fi மோடம் போன்றவை, ஆங்கர்களில், மேசை விரிப்பு, சோபாக்களை சோதிக்கவும் மற்றும்  சுவிட்ச் போர்ட் அனைத்தும் இயங்குகிறதா என்பதையும் சோதித்து பார்க்க வேண்டும் .

3. லைட்  அணைத்த பிறகு இருட்டில் சிவப்பு அல்லது பச்சை நிறத்தில் எல்.இ.டி லைட் எரிகிறதா என்பதையும் பார்க்கலாம். சில மைக்ரோபோன்களுக்கு இண்டிகேட்டர்கள் இருக்கும்.

4. Radio frequency detector(RF detector) கொண்டு சோதனை செய்யும் பொழுது அறையில் ரேடியோ சிக்னல்கள் ட்ரான்ஸ்மிட் சாதனங்கள் ( தகவல்களை ஓரிடத்தில் பதிவு செய்து மற்றொரு கருவிக்கு அனுப்பும்) இருப்பதை உறுதிப்படுத்த உதவும். இதை உபயோகிக்கும் பொழுது wi-Fi , Bluetooth, லேப்டாப்  போன்றவற்றை ஆப் செய்து வைக்கவும். Amazon போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களில் RF Signal detector ரூ.670-ல் இருந்து கிடைக்கிறது. லிங்க் : AMZ AIGO ANTI SPY WIRELESS DETECTOR  

Wireless RF Signal Detector CC308 Multi Function

5. Camera lens detector : RF detector wireless device ட்ரான்ஸ்மிட் செய்வதை கண்டறியும். ஆனால், பொருத்தப்பட்ட கேமராக்களிலேயே இருக்கும் மெமரி கார்டு உடையவைக்கு camera lens detector சரியானதாக இருக்கும்.

6. கண்ணாடியில் ரகசியக் கேமராக்கள் இருந்தால் அதற்கான சோதனைகள் பற்றி  அறிய இந்த லிங்கில் பாருங்கள் :  Transparent கண்ணாடியா என்பதை சோதிக்க விரல் சோதனை பயனளிக்குமா ?

7. சிறிய அளவிலான, motion sensitive கேமராக்களில் மெல்லியதாக கிளிக் சத்தம் கேட்கும் அல்லது இயங்கும் பொழுது ஒலி எழுப்பும்.

8.  ரகசியக் கேமராக்களில் Night vision camera எனும் இருளில் கூட எடுப்பவை உள்ளன.

9. தங்கும் அறையை சுத்தம் செய்யும் பொழுது உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

” Womens helpline Number : 1091 ” (தமிழ்நாடு)

குயிலி பயிற்சி :

சென்னை காவல்துறையினருடன் Youturn இணைந்து பெண்களுக்கான தற்காப்பு முறைகள், உளவியல் ஆலோசனைகள், சட்ட ஆலோசனை அனைத்தையும் குயிலி பயிற்சி மூலம் வெளியிட உள்ளோம்.

இதன் தொடக்கமாக சென்னை பகுதியில் உள்ள பெண் காவலர்களுக்கு குயிலி குறித்த பயிற்சியும், விளக்கமும் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து CTS நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு குயிலி வகுப்புகள் எடுக்கப்பட்டன.  பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பணிக்கு செல்லும் பெண்கள் வரை அனைவருக்கும் குயிலி பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறோம்.

பல சிரமங்களை கடந்து தான் பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இன்றுவரை நம் நாட்டில் உள்ளது. இனி இவர்களைப் போன்றவர்கள் பற்றி அறிந்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

How spy cameras filmed unsuspecting women at Chennai hostel

Does your vacation rental have hidden cameras? Here’s how to find out

How To Find Hidden Cameras & Spy Gear Like a Professional: The Definitive Guide

Please complete the required fields.
Back to top button
loader