இடஒதுக்கீட்டை காணவில்லை! சென்னை ஐஐடி ஆசிரியர்களில் 83% முன்னேறிய வகுப்பினர் : ஆர்.டி.ஐ தகவல்

டஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டு இத்தனை ஆண்டுகளாகியும், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின என பின்தங்கிய சமூகத்தில் இருக்கும் மக்களுக்கு அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மறுக்கப்படும் சூழ்நிலையில் தான் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என ஆளும் ஒன்றிய அரசு முதல் அதன் ஆதரவாளர்கள் பலரும் துணை நின்று வருகின்றனர்.

குறிப்பாக, ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் பணிகளில் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாமல் பெரும்பாலும் முன்னேறிய வகுப்பினரே நியமிக்கப்படும் அநீதி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

சென்னை ஐஐடியில் இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை கேட்டு இளையதலைமுறை அமைப்பின் சங்கர் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலானது மீண்டும் மீண்டும் இடஒதுக்கீடு விதிமீறல் தொடர்வதை எடுத்துரைத்து இருக்கிறது.

2022 நவம்பர் 29ம் தேதி சென்னை ஐஐடி அளித்த ஆர்.டி.ஐ பதிலில், ” சென்னை ஐஐடியில் 619 ஆசிரியர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 545, பெண்கள் 74 உள்ளனர். இவற்றில், பொதுப் பிரிவினர்(UR) 514 , பிற்படுத்தப்பட்ட பிரிவினர்(ஓபிசி) 70, பட்டியலின பிரிவினர்(எஸ்.சி) 27, பழங்குடியின பிரிவினர்(எஸ்.டி) 8 பேர் ” உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சென்னை ஐஐடியில் தற்போது உள்ள 619 ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீட்டின்படி பார்த்தால், ஓபிசி பிரிவினருக்கு 167 இடங்களும், எஸ்.சி பிரிவினருக்கு 93 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 46 இடங்களும், பொது பிரிவினருக்கு 313 இடங்களும் அளித்திருக்க வேண்டும். ஆனால், 514 ஆசிரியர்கள் (83%) பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களே உள்ளனர். ஓபிசி 11.30% , எஸ்.சி 4.30%, எஸ்.டி 1.30% மட்டுமே உள்ளனர். இங்கு இடஒதுக்கீடு முறை என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 

மேலும் படிக்க : சென்னை ஐஐடி-யில் ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு விதிமீறல் – RTI தகவல்

சென்னை ஐஐடி பணி இடங்களில் இடஒதுக்கீடு விதிமீறல் நடைபெறுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2019ம் ஆண்டு சென்னை ஐஐடி-யில் மொத்தம் இருந்த 900 பணியிடங்களில் 684 இடங்கள் நிரப்பப்பட்டன. இதில், பல்கலைகழகத்தில் 12.4% பேர் மட்டுமே இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டவர்களில் 684 பேர்களில் 599 பேர் பொது பிரிவினைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்தது.

இதற்கு அப்போதைய ஒன்றிய கல்வி அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ஐஐடி-யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஆரம்பக்கட்ட நியமனங்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு பொருந்தும் எனத் தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க : EWS எனும் சமூக அநீதி: 79 சாதிகள் பட்டியலின் உண்மை குறித்த வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !

இதேபோன்று, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள துணை வேந்தர்கள், பேராசிரியர், இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் உள்ளிட்ட பணிகளிலும் இடஒதுக்கீடு முறையின்றி பொதுப் பிரிவினரே அதிக இடங்களில் உள்ளனர்.

இப்படி ஐஐடி, ஐஐஎம், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்களின் பணியிடங்கள் இடஒதுக்கீட்டின்படி நிரப்பப்படாமல், பொதுப் பிரிவினரே அதிக இடங்களை ஆக்கிரமிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், ஓபிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினர்களுக்கான இடங்கள் மிகச் சொற்பமாகவே இருப்பது மட்டுமின்றி அவர்களுக்கான பிரதிநிதித்துவமும் பறிக்கப்படுகிறது.

Please complete the required fields.




Back to top button
loader