சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமி நகரின் இளங்கோ தெருவில் உள்ள 625 வீடுகள் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதியை ஆக்கிரமித்து கட்டி இருப்பதாகக் கூறி அவற்றை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி 366 வீடுகள் அகற்றப்பட்டன.
மீதமுள்ள 259 வீடுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்டையில் அரசு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த அப்பகுதியைச் சேர்ந்த கண்ணையா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆக்கிரமிப்பு, நீதிமன்ற உத்தரவு எனக் கூறி வீடுகளை அகற்றுவதும், மக்களை வெளியேற்றுவதும் பெரும் கண்டனத்தை பெற்று வருகிறது.
தன்னுடைய தனிப்பட்ட லாபத்திற்காக பொதுநல வழக்கு என்கிற பெயரில் அங்குள்ள வீடுகளை அகற்றுவதற்கு காரணம் ராஜீவ் ராய் எனும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்கிற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

2006-ல் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக ராஜீவ் ராய் என்பவர் தொடர்ந்த வழக்கில், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக 500-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அவர்களுக்கு அவகாசம் அளித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற 2008 மார்ச் 13-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
செல்வம் என்பவர் தொடர்ந்த வழக்கில், ஜே.என்.என்.யு.ஆர்.எம் திட்டத்தின் கீழ் ஒக்கியம் துரைபாக்கத்தில் 625 குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதுவரை மனுதாரர்கள் அதே இடத்தில் இருக்கலாம் என 2011 பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
ஆக்கிரமிப்பு எனக் கூறப்பட்ட 625 வீடுகளில் 366 வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர். மீதமுள்ள 259 வீடுகளும் எதிர்ப்புகளும், ரிட் மனு காரணமாக நிலுவையில் இருந்தது . 2014-ல் ராஜீவ் ராய் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து, ஜனவரி 30-ம் தேதி 259 குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், அதற்கு பின்னர் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக 259 வீடுகளும் அகற்றப்படாமல் இருந்து வந்தன.
இறுதியாக, ராஜீவ் ராய் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், குடியிருப்புகளை 6 மாதங்களுக்குள் அகற்ற 2021 அக்டோபர் 25-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதையடுத்து 2022 மார்ச் 9-ம் தேதி தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் தரப்பில், 2021 அக்டோபர் 26-ம் தேதி ஆக்கிரமிப்பாளர்கள் உடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடத்திய கூடத்திலும் எந்த சமரசமும் ஏற்படவில்லை. மாறாக, ஆக்கிரமிக்கப்பட்ட இடம் அரசால் குடிசைப் பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதை ரத்து செய்து அறிவிக்கை வெளியிட வேண்டும் என சிலர் வலியுறுத்தினர். அவர்களது இக்கோரிக்கை ஏற்கனவே அரசால் பரிசீலிக்கப்பட்டதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி(மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டம் 1971-ன் பிரிவு 3(1)-ன் கீழ் குடிசைப்பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை De-notify செய்ய சட்டத்தில் வழிவகை இல்லை என தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், தாங்கள் தற்போது வசித்துவரும் இடத்திற்கு எந்தவித கட்டட மற்றும் திட்ட அனுமதியும் பெறப்படவில்லை. மேலும், குறிப்பிட்ட இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடமாகும்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. எனவே, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் தங்களை குடியமர்த்த அரசு தயார் நிலையில் உள்ளது. எனவே கோரிக்கைகளை கைவிட்டு அப்புறப்படுத்த ஆதரவு தருமாறு ” என கோவிந்தசாமி குடியிருப்போர் நலச்சங்கதிற்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
தற்போது கடந்த சில நாட்களாக வீடுகளை அகற்றும் பணியில் அரசு ஈடுபட்ட போது, அதற்கு தடை விதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் , தடை விதிக்க இயலாது, வீடுகளை அகற்றும் பணிகளை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
.
இதுகுறித்து களத்தில் உள்ள பெண்ணுரிமை இயக்கத்தின் கீதா அவர்களிடம் பேசுகையில், ” இங்கு 1965-ல் இருந்தே மக்கள் வசித்து வருகிறார்கள். இது கலைஞர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குடிசைப் பகுதிகள் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதி. அந்த ராஜீவ் ராய் இதற்கு பின்னால் உள்ள பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி விற்று வருகிறார். இந்த பகுதியை அகற்றினால் தான் அவர் கட்டும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக விலைக்கு போகும் என சுயநலத்திற்காக வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
.
இவர்கள் ஆக்கிரமிப்பு எனக் கூறும் வீடுகள் கால்வாய் பகுதியில் இருந்து 60 அடி தூரத்தில் உள்ளன. ஆனால், அந்த பக்கம் கால்வாயில் இருந்து 20 அடியில் உள்ள வீடுகள், பங்களாக்களுக்கு பட்டாக்கள் இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு வழங்க மறுக்கிறார்கள்.
.
அரசு அதிகாரிகள் வீடுகளை அகற்ற மக்களை அப்புறப்படுத்திய போது வலுக்கட்டாயமாக, அராஜகமான முறையில் நடந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் கண்ணையா தீக்குளித்தார். தற்போது இங்கிருந்து அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு கூட வீடுகள் வழங்க 3 மாதங்கள் ஆகும் எனக் கூறுகிறார்கள்.
இங்குள்ள மக்கள் துயரத்தில் இருப்பதையும், அவர்களுக்கு மயிலாப்பூர் அருகிலேயே வீடுகள் ஒதுக்குவதாகவும் முதல்வர் உறுதியாக தெரிவித்து இருந்தார் .ஆனால், வீடுகள் அகற்றப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது இன்று நடந்த விசாரணையின் போது அரசு வழக்கறிஞர், முதல்வர் கூறியதை பற்றி கூறாமல், மக்கள் வெளியேற தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், மக்கள் பலரும் இங்குதான் உள்ளனர் ” எனத் தெரிவித்து இருந்தார்.
.
அங்குள்ள மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வருவதாகவும், அதற்கான ஆவணங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள். பட்டா விசயத்தில், இத்தனை ஆண்டுகளாக ஒரே இடத்தில் அம்மக்கள் வாழ்ந்து வருவதன் அடிப்டையில் அவர்களுக்கு பட்டாக்கள் வழங்கி அங்கே குடியமர்த்தி இருக்க வாய்ப்புகளும் இருக்கிறது.
2018-ல் மயிலாப்பூர் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ நடராஜ் சட்டப்பேரவையில் ராஜீவ் ராஜ் தொடர்ந்த வழக்கைக் குறிப்பிட்டு பேசிய போது, தெற்கு பகுதியில் உள்ள 259 குடியிருப்புகள் ஆற்றங்கரையோரம் இல்லை. ஆனால், தீர்ப்பு காரணமாக இடிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுதொடர்பாக மக்களின் நலம் கருதி நீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்ய வேண்டும் எனக் கூறி இருந்தார்.
.
வழக்கை தொடர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராஜீவ் ராய் என்பவருக்கு கால்வாய் பகுதியில் உள்ள குடிசை வீடுகளை அகற்றுவதன் மூலம் தனது சொத்துகளின் ரியல் எஸ்டேட் மதிப்பை அதிகரிக்கவும், தன்னுடைய இடத்தில் சில அடுக்குமாடி குடியிருப்புகளை கால்வாய் காட்சியை காணும் வகையில் கட்டி அதிக விலைக்கு விற்க விரும்புவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டு எழுகிறது. தற்போதுவரை, அவரின் பேட்டிகள் எங்கும் வெளியாகவில்லை.
.
தற்போதைய அரசைப் பொருத்தவரையில், ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போதே ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதாக மக்கள் வெளியேற்றப்பட்டபோது அந்த பகுதிக்கு அருகே நகரத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடிசை மாற்றி வாரியத்தின் வளாகத்தில் வீடுகள் ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தனர். ஆனால், தற்போது வேறு பகுதியில் வீடுகள் அளிப்பதாக கூறப்பட்ட போது கேள்விகளும், கண்டனங்களும் எழுந்த பிறகு மந்தைவெளியில் மாற்று வீடுகள் கொடுப்பதாக அரசு தெரிவித்து இருக்கிறது. அதை முதலிலேயே தெரிவித்து இருக்க வேண்டும். அடுத்ததாக, மக்களை வெளியேற்றும் நடவடிக்கையின் போது அதிகாரிகளின் அராஜக போக்குடன் நடந்து கொண்டதாக மக்கள் தெரிவித்து உள்ளனர், அது கண்டிக்கத்தக்கது. அதன் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
link :