சென்னை பள்ளிகளில் காலை உணவு திட்டம்.. மீண்டும் அட்சய பாத்ராவிடம் செல்கிறதா ?

சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிக்கையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக செயல்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகியது. இதை மீண்டும் அட்சய பாத்ரா அறக்கட்டளையின் மூலம் அரசு செயல்படுத்த உள்ளதா என்கிற கேள்விகள் எழுந்து வருகிறது.
2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னையில் 5 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டம் ” அட்சய பாத்ரா ” எனும் தனியார் அறக்கட்டளை உடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது.
இதை விரிவுப்படுத்தும் வகையில், 2020 பிப்ரவரியில் சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைக்கப்படும் பிரம்மாண்ட சமையலறை கட்டும் பணிக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் பன்வாரி லால் புரோகித் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. மேலும், அட்சய பாத்ரா அறக்கட்டளைக்கு தமிழக அரசு சார்பில் நிலமும், ஆளுநர் சார்பில் 5 கோடி நிதியும் வழங்கப்பட்டது.
அப்போது, அரசு பள்ளிகளில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை ” இஸ்கான்” அமைப்பைச் சேர்ந்த ” அட்சய பாத்ரா ” அறக்கட்டளையின் மூலம் செயல்படுத்துவது சர்ச்சை ஆனது. அதுமட்டுமின்றி, அந்த உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கப்படாது என்றும், மதரீதியாக மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது என ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி சார்பில் கண்டனங்கள் எழுந்தன.
தற்போது மீண்டும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை விரிவாக செயல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கான பணியை அட்சய பாத்ராவிடம் வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.
அட்சய பாத்ரா அறக்கட்டளை பல மாநிலங்களில் அரசு உடன் இணைத்து பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த அறக்கட்டளையின் இணையதளத்தில், மாநில அரசுகளுடன் இணைத்து எத்தனை பள்ளிகளில் உணவு வழங்கப்பட்டு வருகிறது என்கிற விவரங்களில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. 2020-ல் வெளியான செய்திகள் மட்டுமே கிடைத்தன.
இதனால் அட்சய பாத்ரா அறக்கட்டளையின் சென்னை பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” தற்போதைய அரசின் அறிவிப்பின்படி காலை உணவு திட்டத்திற்கு எங்களுக்கு எந்த நிதியும், அறிவிப்பும் வழங்கப்படவில்லை. கொரோனாவிற்கு பிறகு சென்னை பள்ளிகளில் உணவு வழங்கும் பணிகள் ஏதும் நாங்கள் மேற்கொள்ளவில்லை ” எனத் தெரிவித்து இருந்தனர்.
சமீபத்தில் சென்னை மாநகராட்சி தரப்பில் வெளியான பட்ஜெட் அறிக்கையில், ” சென்னைப் பள்ளி மாணவர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை பேணிக் காத்து கல்வியை திறம்பட கற்றிட, திருவான்மியூர் சுற்றியுள்ள 23 சென்னைப் பள்ளிகளில் சுமார் 5,000 மாணவர்களுக்கு சோதனை அடிப்டையில் தன்னார்வலர்கள் மூலம் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. காலைச் சிற்றுண்டி திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால், மேலும் பல பள்ளிகளில் தன்னார்வலர்களின் மூலம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது ” என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், எந்த தன்னார்வு அமைப்பு மூலம் செயல்படுத்தப்படும் என இடம்பெறவில்லை.
இதுகுறித்து அறிய சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை அலுவலரை தொடர்பு கொண்டு பேசிய போது, ” தற்போதைய கல்வியாண்டு முடிய இன்னும் சில நாட்களே இருப்பதால், அடுத்த கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அந்த தன்னார்வலர்கள் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.
கடந்த ஆட்சியில் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு எந்த தன்னார்வு அமைப்பும் முன்வரவில்லை, அட்சய பாத்ரா அறக்கட்டளை மட்டுமே முன்வந்ததால் புரிந்துணவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக சென்னை மாநகராட்சியின் அப்போதைய ஆணையர் தெரிவித்து இருந்தார். ஆனால், தற்போது மீண்டும் செயல்படுத்த உள்ள காலை உணவு திட்டத்திற்கு எந்த தன்னார்வு அமைப்பு என இன்னும் முடிவு செய்யப்படவில்லை என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.