This article is from Sep 30, 2018

தமிழில் பேசி ரசிகர்களை ஈர்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள்…

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட்  தொடரில் இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் கொண்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ்.ஐ.பி.எல் தொடர் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை வகித்து வரும் மகேந்திர சிங்தோனி, தனது அணியை 8 முறை தொடர்ந்து வழிநடத்தி 6 முறை இறுதி சுற்றுக்கும், மூன்று முறை கோப்பையையும் பெற்று தந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள், வெற்றிகள் என ஒருபுறம் குவிந்த நேரத்தில், அணியின் உரிமையாளர்கள் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. எனவே, 2016, 2017 ஐ.பி.எல் போட்டிகளில் இரு அணிகளும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான தடை நீங்கி 11-வது ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான அணி விளையாடத் தயாராகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி திரும்பிய மகிழ்ச்சியில் “ சிங்கம் களம் இறங்கிடுச்சே ” என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏப்ரல் 7-ம் தேதி தொடங்க உள்ள 11-வது ஐ.பி.எல் போட்டியின்  வீரர்களுக்கான ஏலத்திற்கு முன்பாகவே சென்னை அணியின் கேப்டன் தோனி, ரெய்னா, தவானே பிராவோ, ஜடேஜா ஆகியோர் தக்க வைக்கப்பட்டனர். மேலும் டு பிளிசிஸ், ஹர்பஜன் சிங், வெய்ன் பிராவோ, கேந்தர் ஜாதவ், ஷேன் வாட்சன், கரண் சர்மா, முரளி விஜய், மார்க் வூட், இம்ரான் தாஹிர், சாம் பில்லிங்க்ஸ், தீபக் சகார், மிட்செல் சண்ட்னேர், லுன்கிசனி ந்கிடி, ஆசிப் கே.எம், என்.ஜெகதீசன், கணிஷ்க் சேத், மோனு சிங், துருவ் ஷோரே, கஷிடிஸ் ஷர்மா, சைதன்ய பிஷ்னோய் ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

சென்னை அணி மீண்டும் உருவாகிய பின்பு தோனி தலைமையிலான அணி சென்னை வந்து சேர்ந்தது. சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்களைப் பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் கூடினர். அணியின் பயிற்சியை பார்க்கவே இவ்வளவு ரசிகர்களாக என இந்தியளவில் பேசப்பட்டது.

சென்னை அணியில் இடம்பெறும் வீரர்கள் தமிழ் விளம்பரங்கள், ஸ்பொன்சர்ஸ் விளம்பரங்கள், ப்ரோமோ வீடியோ போன்றவற்றில் தமிழில் பேசி நடிப்பது வழக்கம். சென்னை அணியின் வீரர்கள் தமிழில் பேசுவதை பார்த்தாலே உணர்ச்சி மிகுதியில் கொண்டாடும் ரசிகர்களுக்கு புதிய வீரர்கள் செய்யும் செயல்கள் எல்லையற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஆம், புதிதாக சென்னை அணியில் இடம்பெற்ற ஹர்பஜன்சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரும் ஒருபடி மேலே சென்று சென்னை அணிக்காக விளையாடப் போவதை தமிழில் ட்வீட் செய்தனர்.

இதில், இம்ரான் தாஹிர் தமிழ் ஆசிரியர் வைத்து தமிழ் கற்று கொள்வதை கூட மீம் கிரியேட்டர்ஸ் கிண்டல் செய்து மீம் போட்டனர். ஆனால், இப்போ ட்ரென்டே வேற மாறி போய் கொண்டிருக்கிறது.

மும்பை அணியில் விளையாடி வந்த சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை 11-வது ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணிக்காக 2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தனர். சென்னைக்காக ஏலம் எடுக்கப்பட்ட சில நேரத்தில் மெர்சல் படத்தின் வசனத்தில் ட்விட்டரில் கருத்து தெரிவித்து மாஸ் காட்டினார் ஹர்பஜன்.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும், வரவேற்பும் கிடைத்தது. இதைத் தொடர்ந்தே “ வட நாட்டில் இருந்து வந்தவர் எவ்வளவு அழகா தமிழ் பேசுறார், ஆனா நீங்க எங்ககிட்ட ஹிந்திய திணிக்க முயற்சி பண்ணுறீங்க ” என சிலரைக் கலாய்த்து மீம் போட ஆரம்பித்தனர்.

மேலும், தமிழ் ரசிகர்களை ஈர்ப்பதற்காக தொடர்ந்து தமிழில் ட்வீட் செய்து வந்தார் ஹர்பஜன் சிங். நாளுக்கு நாள் ஹர்பஜன் சிங்கின் தமிழ் ஆர்வத்தை கண்ட மீம் கிரியேட்டர்ஸ் ஹர்பஜன் சிங்கை புகழ்ந்து மீம் போட ஆரம்பித்தனர்.

ஆனால், சில மீம் பக்கங்களில் ஹர்பஜன் சிங் தமிழ் மீது பைத்தியம் ஆகியது போன்று மீம் போட்டு கிண்டல் செய்தனர். இந்த இடைவெளியில்தான் ஹர்பஜன் சிங்கின் தாத்தா தமிழகத்தைப் பூர்விகமான கொண்டவர். மேலும், ஹிந்து எதிர்ப்பு போராட்டத்தில் பெரியாருடன் இணைந்ததாகக் கூறியும், இதனால் தான் அவருக்கு தமிழின் மீது ஆர்வம் அதிகம் என்று வதந்தியையும், கிண்டலும் செய்து வருகின்றனர். அந்த படத்தில் பெரியாருடன் இருப்பவரின் முகத்தை ஃபோட்டோஷாப் செய்து ஃபிராடு வேலையை செஞ்சுருக்காங்க.

ஹர்பஜன் சிங் சென்னை அணியில் இடம்பெற்றதால் மட்டுமே தமிழில் ட்வீட் செய்யவில்லை, அதற்கு முன்பாகவே தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகை வாழ்த்தை தமிழில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விளையாட்டு வீரர் தமிழ் மக்களின் மீதுள்ள ஆர்வத்தாலும், அதே நேரத்தில் ரசிகர்களை ஈர்ப்பதற்காகவும் தமிழில் ட்வீட் செய்வது, தமிழில் பேசுவது போன்றவை இயல்பான ஒன்றே. தமிழ் மக்களின் அன்பை பெறுவதற்கு தமிழில் கருத்து கூறுவதை ஷேவாக் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் செய்துள்ளனர். அதேநேரத்தில் விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்பதையும் மக்கள் உணர வேண்டும்.

ஹர்பஜன் சிங் பற்றி நகைச்சுவையாக மீம் போட்டு வந்ததை சிலர் எல்லைமீறிய அளவில் கிண்டல் செய்து மீம்கள் மற்றும் வதந்தியை பரப்பி தமிழ் மக்களுக்கு மரியாதை அளிக்கும் ஒருவரை இழிவுபடுத்துவது தவறான காரியம் தானே!

தமிழ் தாத்தாவின் பேரனான ஹர்பஜன் சிங்! தமிழ் ஆர்வத்தை வளர்த்து இப்படியும் கொண்டாட படலாம். ஆனால் அவர் தாத்தா தமிழர் என்று மொக்கையாக புரளி கிளப்பப்படுவதும் அதை உள்நோக்கமாக செய்வதும் தேவையா ? ஜஸ்டின் போய் ஹர்பஜனா?

Please complete the required fields.
Back to top button
loader