This article is from Sep 30, 2018

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என்று முதல்வர் உத்தரவு எனப் பரவும் வதந்தி !

சென்னை போன்ற பெருநகரங்களில் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் காவலர்கள் அபராதம் விதிப்பதை போக்குவரத்து சிக்கனல்கள் மற்றும் முக்கிய இடங்களில் பார்க்க முடியும். அதே நேரத்தில், எந்த அளவிற்கு அபராதம் விதிக்கப்படுமோ அந்த அளவிற்கு கையூட்டு பெறுவதும் நடக்கிறது. குறிப்பாக, சாலையில் செல்லும் வாகனங்களை வழி மறித்து காவலர்கள் லஞ்சம் கேட்பதும், பணம் செலுத்த மறுத்து போக்குவரத்து காவலருக்கும், வாகன ஓட்டிக்கும் தகராறுகள் அவ்வபோது நிகழ்கிறது. போக்குவரத்து காவலர்கள் சரியாக கடமையை செய்தாலும் பொதுமக்கள் சிலர் லஞ்சம் வழங்க முற்படுவதும், சாலை விதிகளை மீறி வாகனத்தை ஓட்டிச் செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஸ்பாட் பைன் :

பெருநகரங்களிலேயே அதிகளவு அபராதங்கள் விதிக்கப்படுவதால், கையூட்டு பெறுவதும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தான் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் “ ஸ்பாட் பைன் ” அபராதத் தொகையை ரொக்க பணமாக செலுத்த தேவை இல்லை என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது சென்னை போக்குவரத்து ஆணையம். சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வாகன ஓட்டிகள் தங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை மின்னணு முறையில் செலுத்தும் முறையை தொடங்கி வைத்துள்ளார்.

சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி போக்குவரத்து காவலர்களிடம் மாட்டிக் கொண்டால் “ ஸ்பாட் பைன் ”ரொக்கமாக செலுத்த தேவை இல்லை. அதற்கு பதிலாக ஸ்வைபிங் மிஷின் மூலம் தங்களிடம் உள்ள கிரெடிட்கார்டு, டெபிட் கார்டு மூலம் அபராதத்தை செலுத்தலாம். இவை மட்டுமின்றி அபராதத் தொகையை அஞ்சலகம், Paytm, இ சேவை மையங்கள் போன்ற 6 இடங்களில் செலுத்திக் கொள்ளலாம்.

செல்போன்கள் மூலமாக செலுத்தவும் வழிவகை உள்ளதால் வாகன ஓட்டிகள் தாங்கள் செலுத்தும் அபராதத்தை ஸ்க்ரீன்சார்ட் எடுத்து வைத்து கொள்ளலாம். டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்துவதால் அதற்கான ரசீதுகள் வழங்கப்படும். விதிகள் மீறி வாகனம் ஒட்டுபவர்களுக்கு வாகன உரிமையாளர்களின் பெயரில் அபராதம் விதிக்கப்படும். மின்னணு முறையில் அபராதம் செலுத்துவது அறிமுகம் ஆனதால் போக்குவரத்து காவலர்கள் வாகன ஓட்டிகளை விரட்டி பிடித்து லஞ்சம் பெறுவது குறைய வாய்ப்புள்ளது. காரணம், டிஜிட்டல் முறையில் மட்டுமே அபராதத் தொகையை காவலர்கள் பெற வேண்டும் என்பதால் தேவைக்கு அதிகமாக கையில் பணம் வைத்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“ வாகன ஓட்டிகளிடம் ரொக்க பணம் காவலர்கள் பெறக் கூடாது. அதேபோல் பொதுமக்களும் காவலர்களிடம் பணம் கொடுக்க கூடாது. மேலும், காவலர்கள் லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் ” என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் சென்னையில் மட்டும் விபத்தில் சிக்கி 1347  உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கையூட்டு மற்றும் காவலர் மற்றும் வாகன ஓட்டிகள் இடையேயான மோதலை தடுப்பதற்காகவும் டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாலை விதியை மீறினாலும், மீறா விட்டாலும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறும் காவலர்களின் நடவடிக்கைகள் இனி நிகழ வாய்ப்பில்லை. மேலும், போக்குவரத்து ஆணையத்தின் இந்த புதிய முறைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

தலைகவசம் அவசியமா ?

இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் இன்றி செல்லும் பொழுது விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கடுமையாக்கப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்தாலும், சில வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை தவிர்க்கின்றனர்.

இந்நிலையில், தலைகவசம் அணிவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். உயிரின் மீது விருப்பம் உள்ளவர்கள் அணிந்து கொள்ளட்டும். ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு முதல்வர் உத்தரவு. ஒருவேளை காவல்துறை ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் கேட்டால் 8344606680 என்ற எண்ணிற்கு தெரிவிக்கவும் என்று தமிழக அரசு செய்தி வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.

இவை முற்றிலும் வதந்தி..! ஹெல்மெட் அணியாமல் செல்ல எந்தவொரு அரசும் அனுமதித்தது இல்லை. ஹெல்மெட் அணியாததற்கு இன்றுவரை அபராதம் விதிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. காவலர்களிடம் சிக்கி கொள்வதற்காக மட்டும் ஹெல்மெட்டை எடுத்து செல்லாமல் “ தலைகவசம் உயிர்கவசம் ” என்பதை உணர்ந்து இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள்.

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடந்தால் மட்டுமே உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

Please complete the required fields.




Back to top button
loader