வாகனத்தில் சென்ற காவலரைத் தள்ளி விட்ட ஆய்வாளர் : காவலர் குடிப்போதையில் இருந்தாரா ?

மதிப்பீடு
போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் உடன் பணியாற்றும் காவலரை வாகனத்தில் இருந்து கீழே தள்ளிய சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியடையச் செய்தது. இவ்விவகாரத்தில் சில மாறுபட்ட தகவல்கள் முகநூல் பக்கத்தில் வெளியானதை பார்க்க முடிந்தது. நடந்த நிகழ்வை பற்றி விரிவாக காண்போம்.
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் தருமன் நவம்பர் 21-ம் தேதி தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் தருமனை தள்ளி விடுவது, பிடித்து இழுத்து செல்வது அனைத்தும் 2.52 நிமிட சிசிடிவி காட்சியில் இடம்பெற்று உள்ளது.
உடன் பணிபுரியும் காவலரையே போக்குவரத்து நிறைந்த பகுதியில் வாகனத்தில் செல்லும் பொழுது தள்ளி விடும் அளவிற்கு தருமன் மீது கோபம் இருந்துள்ளதா என செய்திகள் வெளியாகியது. காரணம், நவம்பர் 6-ம் தேதி தருமனின் தாய் இயற்கை எய்தினார். ஆகையால், அந்த வார நாட்களில் பணிக்கு வர முடியவில்லை. பணிக்கு திரும்பிய பிறகு தாயின் 16-ம் நாள் காரியத்திற்கு விடுப்பு கேட்டு உள்ளார். ஆனால், ரவிசந்திரன் விடுப்பு அளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதை ஏற்றுக் கொள்ள முடியாத தருமன் வாக்கீ டாக்கியில் தன் தாயின் ஈமச்சடங்கிற்கு எவ்வாறு விடுப்பு அளிக்க முடியாது என எவ்வாறு கூறலாம் என அதிகாரிகளைப் பற்றி கூறியுள்ளார். பின் போலீஸ் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையின் மூலம் அது தருமனின் குரல் என கண்டுபிடித்து சஸ்பென்ட் செய்யப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டார் என்றும், அவர் பணி நேரங்களில் குடிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் தருமன் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தடுத்து தள்ளி விட்ட போது நிலை தடுமாறி எதிரே இருந்த வாகனத்தில் மோதி காயமடைந்தது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் தெள்ளத்தெளிவாக பதிவாகி அவை தற்போது வைரலாகி வருகிறது. இதனுடன் காவலர் தருமனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது தருமன் குடித்து இருப்பதாக மருத்துவர் தெரிவித்து உள்ளார்.
மருத்துவனைக்கு அழைத்து செல்வதற்கு முன்பாக வாகனத்தில் வைத்து தருமனுக்கு மதுவை வலுக்கட்டாயமாக ஊற்றியதாக சில செய்திகளிலும், முகநூல் பதிவுகளிலும் கூறப்படுகிறது. தருமனும் தனக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றியதாகவும், மயக்கத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இப்படி கூறப்படுவது யாவும் உண்மையில்லை.
“ காவலர் தருமன் குடிக்கவில்லை என்று கூற முடியாது. அவர் குடித்து விட்டுதான் வாக்கீ டாக்கியில் பேசியுள்ளார். அதேபோன்று காவலர்கள் அவருக்கு வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியதாகக் கூறுவதும் தவறு. மேலும், இருவரின் மீதும் துறைச்சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி Youturn-யிடம் தெரிவித்து உள்ளார் “
வழக்கு பதிவு ஏதும் செய்யவில்லை. காவலர்களின் பொது பயன்பாட்டு கருவியில் அதிகாரிகள் பற்றி பேசியது, பணியின் போது குடித்த காரணத்திற்கு தருமன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, காவலரை போக்குவரத்து நிறைந்த சாலையில் வாகனத்தில் செல்லும் பொழுது தள்ளி விட்டது கடுமையாக கண்டிக்கத்தக்க காரியம். இதற்காக ரவிச்சந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, அவரின் மீது விசாரணையும் நடைபெறுகிறது.
தருமனின் விடுப்பு நியாயமானதே. தாயின் ஈமச்சடங்கிற்காக கேட்ட விடுப்பு மறுக்கப்பட்டது தவறான ஒன்றாகும். அந்த வருத்தத்தில் அதிகாரிகள் பற்றிப் பேசியியுள்ளார். எனினும், பணியின் போது மது அருந்தி விட்டு, வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியுள்ளனர் எனக் கூறுவது பொய்யானத் தகவல் என தெரிய வந்துள்ளது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.