வைரல் வீடியோவிற்காக யூடியூப் சேனல் குழுவினர் கைதா ?| காவல்துறை அளித்த தகவல்!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இளம்பெண்களிடம் ஆபாசமாகப் பேசி பேட்டி எடுத்த “சென்னை டாக்ஸ்” எனும் யூடியூப் சேனலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பையே எற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, ஒரு பெண் பேசும் வீடியோவை காண்பித்து அந்த வீடியோவிற்காக கைது நடவடிக்கை நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். கைது தொடர்பான விரிவான தகவலை தொடர்ந்து படிக்கவும்.
பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் இளம்பெண்களிடம் ஆபாசமாக பேசிப் பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலின் தொகுப்பாளர் 23 வயதான அசென் பாட்சா, கேமராமென் அஜய் பாபு மற்றும் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை காவல்துறை கைது செய்தனர்.
கைது நடவடிக்கை குறித்து அடையாறு டி.சி அலுவலக எஸ்.ஐ மஞ்சுளா அவர்களை யூடர்ன் தொடர்பு கொண்டு பேசிய போது, ” முன்பே திட்டமிட்டு தெரிந்த நபர்களை வைத்து ஆபாசமாக பேச வைப்பது, அவர்களை பார்த்து பேச வருபவர்களின் காட்சிகளில் ஆபாசமாக பேசும் காட்சிகளை மட்டும் எடுத்து வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெசன்ட் நகர் பீச்சில் வைத்து இவ்வாறு அதிகமாக நடந்து கொண்டு இருக்கும் போது, ஆபாசமாக பேச வைத்து அதை யூடியூபில் போடுவதை வழக்கமாக கொண்டு இருப்பதாகவும், அந்த யூடியூப் சேனல் பொதுமக்களுக்கு இடையூறு அளிப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிந்தது.
சேனலைச் சேர்ந்தவர்களிடம் பொதுமக்கள் சிலர் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்ட போது அவர்களை மிரட்டுவது, தகராறில் ஈடுபட்டுள்ளனர். இப்படி இருக்கையில், காவல்துறை ரோந்து செல்லும் போது யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்களை கண்டு அவர்களை விசாரணை செய்துள்ளனர். அவர்கள் மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர் ” எனக் கூறினார்.
சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க சென்னை அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவிட்டு இருந்தார்.
பெசன்ட் நகர் கடற்கரையில் Prank show என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக பேச வைத்து வீடியோ பதிவு செய்து வெளியிட்டு வந்த YouTube channel ன் உரிமையாளர்,தொகுப்பாளர் மற்றும் கேமராமேன் ஆகிய மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். pic.twitter.com/35UET3hCDU
— DCP Adyar (@DCP_Adyar) January 12, 2021
இவர்களின் மீது பொது இடங்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவது(294b), பெண்களைத் தாக்கி மிரட்டுதல்(354b), பெண்களை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுதல் 509 மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் 506(2) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், behindwoods.com எனும் இணையதளம் ” வெளியிடப்படாத பெண்களின் வீடியோக்கள்!.. செல்போனில் ஒளித்துவைத்து. தோண்ட தோண்ட வெளிவரும். யூடியூப் சேனலின் கோர முகம்! ” எனும் தலைப்பில் வெளியிட்ட செய்தி குறித்து கேட்கையில், ” இல்லை. இது தவறானது. மிகைப்படுத்தி வெளியிட்டு இருக்கிறார்கள் ” என காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
சென்னை டாக் யூடியூப் சேனலில் ” 2020 எப்படி போனது ” என்கிற தலைப்பில் பேசிய பெண்ணின் ஆபாச பேச்சிற்காக மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால், சென்னை டாக் யூடியூப் சேனல் ” பொதுவாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருக்கும் காதலர்கள் மற்றும் இளம்பெண்களை குறிவைத்து அவர்கள் பேசுவதை பதிவு செய்து, அதில் ஆபாசமாக மற்றும் அநாகரிகமாக பேசும் வார்த்தைகளை மட்டும் எடிட் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, கேள்வி கேட்பவர்களை மிரட்டுவது, தகராறில் ஈடுபடுவது போன்ற செயலை செய்துள்ளனர். இப்படி பல காரணங்கள் உள்ளன “.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நீ.இரா.ப.அய்யனார் கூறுகையில், ” அந்த யூடியூப் சேனல் மீது இந்திய தண்டனை சட்டம் 294(b) ,354(b), 509, 506(2) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 5-ல் 3 பிரிவுகள் அந்த சேனலின் வீடியோவுடன் தொடர்புடையதாக இருக்கிறது. சினிமாவிற்கு சென்சார் உள்ளது. ஆனால், யூடியூப்-ல் அப்படி ஏதுமில்லை மற்றும் எந்த வயதுடையவர்கள் பார்க்கிறார்கள் என்றும் நமக்கு தெரியாது. குழந்தைகளும் யூடியூப் அதிகம் பார்க்கின்றனர். யூடியூப் தளத்தில் சமூக அக்கறை கொண்ட சேனல்கள் பல உள்ளன. பொழுதுபோக்கிற்காக சேனல்கள் இருப்பது தவறில்லை, ஆனால் அனைவரும் பார்க்கிறார்கள் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும் ” எனத் தெரிவித்து இருந்தார்.
அந்த யூடியூப் சேனலை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமீப காலமாக பெருகி வரும் யூடியூப் சேனல்களால், மக்களிடம் நேரடியாக எடுக்கப்படும் பிராங் ஷோ மற்றும் கருத்துக் கேட்பதாக ஆபாச வார்த்தைகள் அதிகம் நிறைந்து இருக்கும் வீடியோக்களை வரையறையின்றி வெளியிட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி, பல யூடியூப் சேனல்கள் திட்டமிட்டு தெரிந்த ஆட்களை வைத்து எடுக்கும் காட்சியை பார்த்து பலரும் ஆர்வத்துடன் அதிகம் பேசி சிக்கலில் விழுந்து விடுகிறார்கள்.
பெண்களிடம் அநாகரிகமான செயலில் ஈடுபடுவது தொடர்பாக தகவல் தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.