சேப்பாக்கத்தில் கோயில்களை மட்டும் இடிப்பதாக இந்து முன்னணி பரப்பிய அவதூறு.. உண்மை பின்னணி என்ன ?

சேப்பாக்கத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாதா மற்றும் இந்து கோயில்களை இடித்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை, திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமாக நடந்து கொள்வதாக இந்து முன்னணி அமைப்பினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில், 63வது வார்டு கொய்யாத்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 1973ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது. அதில் 302 குடியிருப்புகள் இருந்தன. அவை 50 ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையில் கட்டிடங்கள் சிதிலமடைந்து பலவீனமாக உள்ளதாகவும், அதனை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதிய குடியிருப்பிற்கு அடிக்கல் நாட்டியத்திலிருந்து 18 மாதத்தில் கட்டிடம் கட்டித் தரப்படும் என மக்களுக்கு உறுதியளித்ததின் பெயரில் வீடுகள் காலி செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாரியத்திற்குச் சொந்தமான கட்டங்களும், அதன் இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களும் இடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியிலுள்ள கொய்யாத் தோப்பு எனும் இடத்தில் தேவி கருமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அதனை திமுக அரசு இடித்து விட்டது என இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சில புகைப்படங்களை டிவிட்டரில் கடந்த 11ம் தேதி பதிவிட்டிருந்தார்.
சென்னை சேப்பாக்கம் தொகுதி கொய்யாத் தோப்பு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக வீற்றிருந்து அருள் பாலித்து வந்த தேவி கருமாரியம்மன் கோயில் இந்து விரோத திமுக அரசால் இன்று காலை 4.30 மணியளவில் போலிஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. குடிசையில் இருந்த கோயில் 30 ஆண்டுகளுக்கு முன் pic.twitter.com/5TPI2V014N
— A.T.Elangovan (@elangovan_HM) March 11, 2023
அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் (மார்ச்.14) திமுக ஆட்சியில் தொடர்ந்து இந்து கோயில்கள் இடிக்கப்படுவதாக வீடியோ ஒன்றினை பதிவிட்டிருக்கிறார். மேலும் அவரது பதிவுகளில் வேறு சில ஆவணங்களையும் குறிப்பிட்டுள்ளார். அதில் இந்து முன்னணி எனக் குறிப்பிட்டு, விஜயகுமார் என்பவரது பெயரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு அளிக்கப்பட்ட கடிதம் உள்ளது.
இளங்கோவனின் இந்த டிவிட்டர் பதிவினை குறிப்பிட்டு “தி கம்யூன்’, மீடியான் போன்ற வலதுசாரி இணையதளங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
புகார் மனுவில் போலி எண் :
யூடர்னில் இருந்து அக்கடிதத்தில் அனுப்புநர் பகுதியில் உள்ள தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பேசுகையில், “எனது பெயர் வெங்கடேசன், பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். நான் நீண்ட ஆண்டுகளாகவே இத்தொலைப்பேசி எண்ணைத்தான் பயன்படுத்துகிறேன். கோயில் தொடர்பாக எந்த புகாரையும் நான் அளிக்கவில்லை. நான் அப்படி எந்த மனுவும் அளிக்கவில்லை” எனத் தெரிவித்தார். மேலும், ஏதேனும் அமைப்பில் உறுப்பினராக உள்ளீர்களா என்ற கேள்விக்கு இல்லை எனப் பதிலளித்தார். அவரிடம் பேசியதிலிருந்து மனுவில் உள்ள எண் போலியானது என்பதை அறிய முடிந்தது.
உதவி செயற்பொறியாளர் :
இதனைத் தொடர்ந்து அப்பகுதியின் நகர்ப்புற வாழ்விட மேம்பாடு உதவி செயற்பொறியாளர் செந்தில் முருக ஜெயக்குமார் என்பவரை தொடர்பு கொண்டு பேசுகையில், “அப்பகுதியில் மாதா கோயில், ராமர் கோயில், பிள்ளையார் கோயில், தேவி கருமாரி கோயில் எனப் பல கோயில்கள் உள்ளன. அக்கோயில்கள் எதற்கும் தனியாக நிலங்கள் இல்லை. அனைத்தும் குடிசை மாற்று வாரிய இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளன. இவ்விடங்கள் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க தற்போது தேவைப்படுகிறது. அதனால், அனைத்து கோயில்களுக்கும் முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இடிக்கப்பட்டது. மேற்கொண்டு கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
அவரிடம் தேவி கருமாரி அம்மன் கோயில் குறித்து கேள்வி எழுப்பிய போது, “அக்கோயிலை இடிக்கும் போது கோயில் தருமகர்த்தா என ஒருவர் உடன் இருந்தார். அக்கோயில் சிலைகளை அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் முறையாக ஒப்படைத்து விட்டோம். இச்சம்பவத்தில் என்னை ஒருவர் தொடர்பு கொண்டு நீங்கள் இந்துவா? முஸ்லீமா? எனக் கேட்டார். மேலும் நேரில் பார்க்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அதன் பிறகு எதுவும் தொடர்பு கொள்ளவில்லை” எனத் தெரிவித்தார். மேலும் கோயில் இடிக்கப்பட்டபோது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை நம்முடன் பகிர்ந்தார்.

விஜய குமார் கூறியது :
இந்து முன்னணி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்தும், அவர்களது அமைப்பின் பெயரில் பரவும் கடிதம் குறித்தும், அக்கடிதத்தில் உள்ள தொலைப்பேசி எண் தவறாக இருப்பதைக் குறிப்பிட்டோம். அவர்கள் மூலமாகக் கடிதத்தில் உள்ள விஜய குமார் என்பவரைத் தொடர்பு கொண்டோம்.
அவர் கூறியதாவது, “இந்த நிலம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஆதி ஆந்திரர்களுக்காகக் கொடுக்கப்பட்டது. அக்காலக்கட்டத்தில் சிறிய கல்லினை வைத்து வணங்கி வந்தனர். காமராஜர் ஆட்சிக் காலத்தில் (1960களில்) அப்பகுதியில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அப்போது கோயிலுக்கு மட்டும் சிறிய இடத்தை விட்டுவிட்டு, மீதி இடத்தில் வீடுகள் கட்டப்பட்டது. அதன் பிறகு 1973ம் ஆண்டு கலைஞர் ஆட்சியின்போது அதற்கு எதிரில் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டது.
தற்போது அதனை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கோயிலை இடிப்பதாக இருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்தாமல் இடிக்கக் கூடாது எனக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிகாரிகளிடம் கடிதம் அளித்தோம். இடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக உதவிப் பொறியாளர் மற்றும் சில அதிகாரிகள் வந்து கோயிலை இடிக்கப் போகிறோம்; எங்கள் இடத்தை (அரசு நிலத்தை) இத்தனை நாட்கள் அனுபவித்து விட்டீர்கள் என்றும் கூறியதாக விஜய குமார் கூறினார்.
அக்கோயில் இடம் ஆதி ஆந்திரர்களுக்கு அளிக்கப்பட்டது என்றோ அல்லது கோயிலுக்குச் சொந்தமானது என்றோ ஏதேனும் ஆவணங்கள் உள்ளதா எனக் கேட்டோம். “அப்படி எந்த ஆவணங்களும் இல்லை. கோயில் தானே, விட்டு விடுவார்கள் என இருந்து விட்டோம்” எனப் பதிலளித்தார்.
இதன் மூலம் மாதா மற்றும் இந்து கோயில்கள் அரசு இடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது தெரியவருகிறது. அதனை கொண்டே அரசு அக்கட்டிடங்களை இடித்துள்ளது. மேலும், இடிப்பதற்கு முன்பாக அதன் நிர்வாகிகளிடம் முறையாக அறிவிப்பும் செய்யப்பட்டிருக்கிறது.
உண்மை இவ்வாறு இருக்க, திமுக இந்துக்களுக்கு விரோதமாக இந்து கோயில்களைத் தொடர்ந்து இடித்துக் கொண்டு இருப்பதாக ஒரு பொய்யான பிரச்சாரத்தினை இந்து முன்னணி அமைப்பினர் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு அதிகாரியை நீங்கள் இந்துவா? முஸ்லீமா? என மதரீதியாக மிரட்டல் விடுக்கும் தொனியில் கேள்விகளை எழுப்பி, அரசு அதிகாரியை பணிசெய்ய விடாமல் தடுத்துள்ளனர்.
மேலும் படிக்க : நொச்சிக்குப்பம் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு.. திமுக அரசின் சதி என திசை திருப்பும் ஹெச்.ராஜா !
மேலும் படிக்க : திமுக ஆட்சியில் 150 கோவில்கள் இடிக்கப்பட்டனவா ? குஜராத்தில் 80 கோவில்கள் ஏன் இடிக்கப்பட்டது தெரியுமா ?
திமுக அரசு திட்டமிட்டு கோவில்களை இடிப்பதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொள்வது புதிதல்ல. அதுதொடர்பாக பல கட்டுரைகளையும் வெளியிட்டு இருக்கிறோம். நீதிமன்ற உத்தரவுகள் படி, நீர்நிலை மற்றும் அரசு நிலங்களில் அக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள், வழிபாட்டுத்தலங்களை இடிக்கும் பணியை தொடர்ந்து தவறாக சித்தரித்து வருகின்றனர்.