செங்கல்பட்டு அருகே இளம்பெண் மரணம்.. விரிவான அலசல் !

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே நைனார் குப்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு திமுகவைச் சேர்ந்த இளைஞரணி செயலாளர் தேவேந்திரன் மற்றும் அவரின் சகோதரர் புருசோத்தமன் ஆகியோர் பாலியல் தொல்லை அளித்ததோடு கொலை செய்து தூக்கில் மாட்டியுள்ளதாக நியூஸ் ஜெ சேனலில் வெளியான செய்தி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதிக்கேட்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Twitter link | archive link

இளம்பெண்ணின் மரணம் குறித்து விரிவான தகவலை அறிய முற்பட்டோம். இது தொடர்பாக தேடிய பொழுது தன் தங்கையின் இறப்பு குறித்து சந்தேகம் இருப்பதாக இறந்த பெண்ணின் அண்ணன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு கிடைத்தது.

Advertisement

இறந்த பெண்ணின் அண்ணனை யூடர்ன் தரப்பில் தொடர்புக் கொண்டு பேசிய போது, ” முதலில் தேவேந்திரன் தான் அண்ணன் என்கிற முறையில் அடிக்கடி வீட்டிற்கு வருவார் போவார். வீட்டில் ஏற்பட்ட சண்டையின் காரணமாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. என் தங்கையை ஆபாசமாக போட்டோ, வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு போனில் மிரட்டி வந்துள்ளார்கள். 3 வருடங்களாக தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் என் தங்கை மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். அன்று நாங்கள் வேலைக்கு சென்ற போது வீட்டில் தங்கை தனியாக இருந்துள்ளார். அப்போது புருசோத்தமன் முதலில் வீட்டிற்கு வந்து என் தங்கையை அடித்துள்ளான். புடவையை கழுத்தில் மாட்டி தொங்கவிட்டு, பின்னர் வெளியே வந்து கதவை தட்டுவது போல் நாடகமாடி உள்ளார். தற்கொலை செய்து கொண்டதாக எங்களை நம்ப வைத்து உள்ளார். தேவேந்திரன் செல்போனில் தான் வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளன. தேவேந்திரன் திமுகவின் இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். உடற்கூறாய்வு செய்து 11 நாட்கள் ஆகியும் எங்களிடம் அறிக்கைகளை ஏதும் தரவில்லை. நாங்கள் இன்னும் சுடுகாட்டில் தான் இருக்கிறோம் ” எனக் கூறி இருந்தார்.

இதையடுத்து, செய்யூர் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு பேசிய போது, ” இளம்பெண் கொலை என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சேனல்களிலும் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். இளம்பெண்ணின் தற்கொலைக்கு இருவர் காரணமாக இருந்துள்ளனர் ” எனத் தெரிவித்து இருந்தார். மேற்கொண்டு எந்தவொரு தகவலையும் அளிக்காமல் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.

வழக்கறிஞர் S.S.மாதவன் மற்றும் உதவியாளர் முல்லை விவேக் கோபிநாத் ஆகியோரிடம் பேசிய போது , ” நாங்கள் எங்கும் திமுக எனக் குறிப்பிடவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரும் எங்கும் கூறவில்லை. எதிர்தரப்பினர் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்படி பயன்படுத்தி வருகிறார்கள். இப்போதைக்கு எஃப்.ஐ.ஆர் மட்டுமே போட்டுள்ளனர். இன்றுகூட எஸ்.பி அலுவலகம் சென்று வந்துள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுவது போன்று அவர்கள் இருவரும் சேர்ந்து அப்பெண்ணை தூக்கிட்டு கொன்றார்களா என்பதை போலீஸ் விசாரணை செய்து கூற வேண்டும் ” எனக் கூறினர்.

Facebook link | archive link 

செய்யூர் காவல் ஆய்வாளர் மதுராந்தகம் குற்றவியல் நடுவருக்கு அளித்த சட்டப்பிரிவு மாற்றல் அறிக்கையின் நகல் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில், புருசோத்தமன் மற்றும் தேவேந்திரன் இறந்த பெண்ணின் திருமணத்திற்கு தடையாக இருந்து வந்ததாகவும், சம்பவ நாளன்று புருசோத்தமன் அப்பெண்ணின் வீட்டிற்கு மாப்பிள்ளை பார்த்தால் செத்துபோடி என தகராறு செய்து அடித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கின் சட்டப்பிரிவை 174 குவிமுச இருந்து சட்டப்பிரிவு 306 இதச வாக மாற்றுவதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

Twitter link | archive link 

இந்நிலையில், திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ” செங்கல்பட்டு நைனார்குப்பம் பெண்ணின் தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்கவேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை திமுக இளைஞரணி வலியுறுத்தும் #JusticeForSasikala ” என ட்வீட் செய்து இருக்கிறார். 

செய்யூர் நைனார் குப்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரின் சகோதரர் தொடர்ந்து புகார்களையும், பேட்டியும் அளித்து வருகிறார். இளம்பெண்ணின் மரணத்தில் தொடர்புடையதாக கூறப்படும் புருசோத்தமன் மற்றும் தேவேந்திரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு உரிய விசாரணை நடத்தி அடுத்தக்கட்டத்திற்கு நகர வேண்டும். அதன்பின் மேலும் தகவல்கள் கிடைக்கப் பெறும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button