சிக்கன் ஷவர்மா : சாப்பிடக்கூடாத உணவா ? அமைச்சர் பேசியது சரியா ? ஓர் முழுமையான அலசல் !

கேரளாவின் காசர்கோட்டில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி, உணவு விசத்தால்( Food Poison) ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடன் உணவு உண்ட 18 மாணவர்களும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து, ஷவர்மாவை விற்பனை செய்த கடைக்கு கேரள உணவுத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். உயிரிழந்த கேரள மாணவிக்கு ஷிகெல்லா எனும் பாக்டீரியா பாதிப்பு இருந்ததை கண்டறிந்தனர்.

கேரளா சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 3 பேர் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.
.

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஷவர்மா கடைகளின் மீது உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பார்வை திரும்பியது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் ஷவர்மா விற்பனை செய்யும் உணவகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பல கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகளை வைத்திருந்தது, சுகாதாரமற்ற முறையில் உணவு சமைப்பது உள்ளிட்டவை வெளிவரத் தொடங்கியது.

ஷவர்மா விவகாரம் குறித்து பேட்டி அளித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,” ஷவர்மா என்பது மேலை நாட்டு உணவு வகை. அந்த நாடுகளில் உள்ள வெப்பநிலைக்கு அது பொருந்தும். அங்கு மைனஸ் டிகிரி இருப்பதால் வெளியிலேயே வைத்திருந்தாலும் கூட கெடாது. ஆனால், நம்முடைய தட்பவெப்ப சூழலுக்கு இந்த உணவு ஒத்து வருமா என யாரும் பார்ப்பதில்லை. அதை பதப்படுத்த முடியுமா என்றும்கூட யாரும் பார்ப்பதில்லை. இப்போது 1000 கடைகளுக்கு மேல் அறிவுறுத்தல், அபராதம் போன்ற விசயங்கள் நடந்துள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் தொடரும்.

மக்களுக்கான ஒரு வேண்டுகோள், நமக்கான உணவு நிறைய உள்ளது, அதைவிட்டு ஷவர்மா போன்று புதிது புதிதாக வரும் உணவுகளை சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம் ” எனத் தெரிவித்து இருந்தார்.

மக்கள் ஷவர்மா உணவை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சரின் பேச்சால், ஷவர்மா அரபு நாடுகளில் கூட விற்பனை செய்யப்படுகின்றன, உணவு தரமில்லை என்றால் தரத்தை உயர்த்த அறிவுறுத்த வேண்டுமா அல்லது உணவு வகையையே தடை செய்ய சொல்வார்களா, ஷவர்மா அசைவ உணவுகள் மட்டுமின்றி பல்வேறு உணவுகள் , பானிபூரி போன்ற சாலையோர நொறுக்கி தீனிகளில் கூட தரமில்லா நிலை இருப்பதால் அதற்கும் ஆய்வோ அல்லது தடை விதிப்பர்களா என பல்வேறு கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

இதற்கு நடுவில், குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிப்பதாக நகராட்சி மன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இப்படி ஷவர்மா சுற்றியும், கேரளாவில் மாணவி சாப்பிட்ட ஷவர்மாவில் இருந்த பாக்டீரியா குறித்தும் மருத்துவர் பிரவீன் அவர்களிடம் பேசுகையில், ” ஷவர்மா மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்தது வந்தது. ஆரம்பத்தில் லெபனானில் தொடங்கி பின்னர் மெதுவாக மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வந்து தற்போது உலகின் பல பகுதிகளில் காணப்படுகிறது.  இது துண்டு துண்டாக வெட்டப்பட்ட கறியை கிரில்(நீளமான கம்பியால்) மூலம் சூடுபடுத்தப்பட்டு ரொட்டியில் வைத்து கொடுக்கப்படுகிறது.

கேரளாவில் ஷிகெல்லா எனும் பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த குழுவில் மூன்று வகைகள் உள்ளன. இது சரியாக சமைக்கப்படாத இறைச்சி, பாதிக்கப்பட்டவரின் கழிவுகள், சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் நீர் மற்றும் பாதிக்கப்பட்ட நபருடன் பாதுகாப்பற்ற மற்றும் சுகாதாரமற்ற முறையில் பாலுறவு போன்றவற்றின் மூலமாக பரவுகிறது. இதன் காரணாமாக, கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு போன்றவை ஏற்படும். இந்த பாக்டீரியாவிற்கு மருந்து எதிர்ப்பு இருந்தால் சிகிச்சை அளிப்பது கடினமாக இருக்கும் .
இதன் பரவலுக்கு சாத்தியமான காரணங்களாக, சரியாக சமைக்கப்படாத இறைச்சி, பழைய இறைச்சி சரியாக பாதுகாக்கப்படவில்லை என்றால், வீட்டில் சேமித்து வைத்து தாமதமாக சாப்பிடுவது, அசுத்தமான நிலையில் இருக்கும் நபர் உணவை தயாரிப்பது போன்றவை உள்ளன.
.
கேள்வி : இது ஷவர்மாவில் மட்டுமே ஏற்படுமா ?
பதில் : இல்லை, இது எந்த உணவுப் பொருட்களிலும் ஏற்படலாம். இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் இதற்கு முன்பாக இதன் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
கேள்வி : ஷவர்மா சாப்பிடுவது பாதுகாப்பானதா ? இல்லையா ?
பதில் : ஆம் , இதை சுகாதாரமான முறையில் தயாரித்து சமைத்து இருந்தால் சாப்பிடுவது பாதுகாப்பானது.
கேள்வி : வேறு ஏதேனும் தொற்று சாத்தியமா ?
பதில் : பழைய அல்லது சரியாக சமைக்கப்படாத உணவுகளில் வளரக்கூடிய பல பாக்டீரியாக்கள் உள்ளன. ஆகையால், அது சாத்தியம் . எனவே, எப்போதும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் உணவை உண்ண வேண்டும்.
கேள்வி : இது காலநிலையுடன் தொடர்புடையதா ?
பதில் : இல்லை, இதற்கு காலநிலை காரணமாக இல்லை. இது எந்த பருவத்திலும், எந்த நாட்டிலும், எந்த உணவிலும் ஏற்படலாம்.
கேள்வி : சிகிச்சைகள் இருக்கிறதா ?
பதில் : உண்டு. நீரிழப்பை தவிர்க்க ஆரம்பத்திலேயே கண்டறிந்து ஐவி அன்டிபயோடிக் மற்றும் ஐவி ஃப்ளுயிட்ஸ் உடன் சிகிச்சை அளிப்பதன் மூலம் மரணத்தை தடுக்கலாம்.
.
ஷவர்மாவைப் பொறுத்தவரை இங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு சாப்பிடக் கூடாது என்றெல்லாம் இல்லை. அதற்கு எந்த ஆதாரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவை விட அதிக வெப்பநிலை கொண்ட சவூதியில் கூட ஷவர்மா சாப்பிடுகிறார்கள் ” எனத் தெரிவித்து இருந்தார்.

 

ஒரத்தநாடு பகுதியின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜய்குமாரிடம் பேசுகையில், ” மாணவர்கள் 4 பேர் ஷவர்மா சாப்பிட்டதில் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர், மற்றொருவருக்கு பாதிப்பில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு ஒரத்தநாடு மட்டுமின்றி தஞ்சாவூர் பகுதியிலும் ஆய்வுகளை மேற்கொண்டோம். சம்பவம் நிகழ்ந்து அடுத்தநாள் ஆய்வு செய்ததால் அந்த கடையில் சோதனையின் போது கெட்டுப்போன இறைச்சி ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை. பிற கடைகளிலும் பறிமுதல் செய்யப்படவில்லை.

எனினும், சம்பந்தப்பட்ட கடையில் மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பி உள்ளோம். ஷவர்மாவிற்காக சிக்கனை சூடுபடுத்தும் போது உள்ளே சரியாக வேகாத காரணத்தினால் ஏற்பட்டு இருக்கும், அதில் பயன்படுத்திய பொருட்களால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். கடந்த ஆண்டு புதுக்கோட்டையில் பணியாற்றிய போது, ஷவர்மா சாப்பிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது ” எனத் தெரிவித்து இருந்தார்.

ஓர் உணவின் தயாரிப்பில் தவறுகளும், பாதிப்பும் ஏற்படும் என்றால் அதற்கான விழிப்புணர்வையும், அறிவுறுத்தலையும் முன்னெடுப்பதே அவசியம். இங்குள்ள சிக்கலே பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அதற்கு காரணமானவற்றின் மீது பார்வை விழுகிறது. கெட்டுப்போன மற்றும் சுகாதாரமில்லாத உணவு பொருட்கள், அசுத்தமான நீர், சமையல் செய்யும் இடம் என அனைத்துமே இங்கு கேள்விக்குறியுடன் இருக்கிறது.

Please complete the required fields.
Back to top button
loader