தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதா? மாற்றி மாற்றிப் பேசும் ஆணைய உறுப்பினர் !

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதா? இல்லையா என்ற கேள்விக்கு இரண்டு மாறுபட்ட பதில்களைத் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழு உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தீட்சிதர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்த நிலையில், சமூக நலத்துறை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் தீட்சிதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இம்மாத தொடக்கத்தில் (மே மாதம்) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத சிதம்பரம் கோவிலில் என்ன நடந்தது என்று பாருங்கள். பழிவாங்கும் வகையில், சமூக நலத்துறையின் அரசு அலுவலர்கள், தீட்சிதர்கள் மீது குழந்தைத் திருமணம் தொடர்பாக 8 புகார்களை அளித்தனர். இதனால் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, கன்னித்தன்மையை பரிசோதிக்க ‘இருவிரல் பரிசோதனை’ செய்துள்ளனர். அவர்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றனர்” எனக் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்குத் தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆளுநர் பேசியதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபு அளித்த விளக்கத்தில், “குழந்தை திருமணம் நடந்ததாகப் புகார்கள் வந்தன. அதன் உண்மைத்தன்மையைக் கண்டறிந்த பின், அதற்கான ஆதாரங்களைத் திரட்டி சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளில் சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி இரண்டு சிறுமியர் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் பெண் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவர்களை இருவிரல் பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. அந்த சிறுமியர் தற்கொலைக்கு முயன்றனர் என்பது பொய்யான தகவல்” எனத் தெரிவித்து இருந்தார்.
முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் ஆணைய உறுப்பினர் :
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்த பிறகு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவ குழுவினர் கடந்த 24ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ஆனந்த் பேசுகையில், “குழந்தை திருமணம் நடைபெறவில்லை. எங்களைக் கட்டாயப்படுத்தியதால் திருமணம் நடைபெற்றதாக ஒப்புக் கொண்டோம் என்பது குழந்தைகளின் வாக்குமூலம். இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை. ஆனால், பிறப்புறுப்பில் (Private parts) பரிசோதனை செய்யப்பட்டது உண்மை. நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை. ஆனால், குழந்தைகளின் பிரைவேட் பார்ட் தொடப்பட்டது உண்மை” என்றுள்ளார்.
“சிதம்பரத்தில் நேற்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணை தொடர்பாக உண்மைக்கு மாறாக ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது”
மாண்புமிகு ஆளுநர் திரு R.N. ரவி அவர்கள் தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை, இது தொடர்பான… pic.twitter.com/gGsHt05XWQ
— Dr RG Anand (@DrRGAnandIND) May 25, 2023
இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் (மே, 25ம் தேதி) மதியம் 12 மணியளவில் ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், “சிதம்பரத்தில் நேற்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணை தொடர்பாக உண்மைக்கு மாறாக ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது”
மாண்புமிகு ஆளுநர் திரு R.N.ரவி அவர்கள் தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை, இது தொடர்பான அறிக்கையை ஆணையத்தின் மாண்புமிகு தலைவர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாகப் பத்திரிக்கை செய்தி வெளியிடப்படும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, மே 25ம் தேதி மாலை ஆனந்த் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “இருவிரல் பரிசோதனை நடந்ததா எனக் கேட்டால், இருவிரல் பரிசோதனை 100 சதவீதம் நடந்தது. ஆளுநர் கூறியது முற்றிலும் உண்மை. இருவிரல் பரிசோதனை நடந்ததற்கான ஆதாரம் என்னவென்று கேட்டால்? காவல் துறை ஆவணங்களில் ‘கன்னித்திரை Intact’ என்று குறிப்பிட்டுள்ளனர். அதற்கு உண்டான ஆதாரங்கள் தேசிய குழந்தைகள் ஆணையத்திடம் உள்ளது.
நேற்று சில ஊடகங்கள் ஆளுநர் கருத்துக்கு மாற்றுக் கருத்து எனத் தவறாகச் செய்திகளை வெளியிட்டனர். உண்மை என்னவென்றால்? ஆளுநர் கூறியபடி அந்த சிறுமிகள் துன்புறுத்தப்பட்டனர். குழந்தை திருமணம் நடந்ததாக அந்த சிறுமிகள் ஒத்துக்கொள்ள வைக்கப்பட்டுள்ளனர். இருவிரல் பரிசோதனை நடந்தது” எனக் கூறியுள்ளார். இப்படி இரண்டு மாறுபட்ட கருத்தினை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் கூறியுள்ளார்.
2017ம் ஆண்டு ஜூலை மாதம் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி துணைத்தலைவராக டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இரு விரல் பரிசோதனை – தடை செய்யப்பட்டது :
பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஹைமன் எனப்படும் கன்னித்திரை கிழிந்திருத்தல், பிறப்புறுப்பின் தளர்ச்சி ஆகியவை கொண்டு அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதக்கூடிய பரிசோதனை முறைதான் இருவிரல் பரிசோதனை முறை.
ஆனால், விளையாட்டு வீராங்கனைகள், அதிக உடல் உழைப்பு கொண்ட பெண்களுக்கு இயல்பிலேயே கன்னித்திரை கிழிந்து இருக்கும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே உடலுறவில் இருக்கும் பெண்கள் மற்றும் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு இந்த சோதனை முறை பொருந்தாது எனும் போது, இது எப்படி ஒரு சரியான பரிசோதனை முறையாக இருக்கக்கூடும்.
நீதிபதிகள் சந்திரசூட், ஹிமா கோலி அடங்கிய அமர்வு, ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்டத் தீர்ப்பில், “இரட்டை விரல் பரிசோதனை முறை என்பது அறிவியலுக்குப் புறம்பான பரிசோதனை முறை. இந்த பரிசோதனையை நடத்தும் எந்தவொரு நபரும் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள்” எனக் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவிரல் பரிசோதனை முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. மேலும் இந்த பரிசோதனை முறை தொடர்பான பாடத்தை மருத்துவக் கல்லூரி பாடத்திலிருந்து நீக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு பரிசோதனை முறையினை சிறுமிக்குச் செய்ததாகவும், அதனைக் காவல் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தேசிய ஆணையத்தின் உறுப்பினர் கூறியுள்ளார். அதிலும் இரண்டு மாறுபட்ட கருத்துகளை வேறு கூறியுள்ளார்.
Link :