சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்கு.. என்ன நடந்தது ?

சிதம்பர நடராஜர் கோவில் பெண் பக்தை ஒருவரை சாதிப் பெயரைச் சொல்லி வெளியே துரத்தியதாக வீடியோ ஒன்று வைரலான நிலையில், இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரால் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Twitter link 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கணேஷ் தீட்சிதர் என்பவரை கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்ய சக தீட்சிதர்கள் தடுத்து தாக்கியதாக போலீசில் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து, 3 தீட்சிதர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து இருந்தனர்.

Advertisement

இதற்கு அடுத்தநாள், சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஜெயஷீலா என்பவர் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்ய முயன்ற போது அங்கிருந்த தீட்சிதர்களால் தடுத்து விரட்டப்பட்டு இருக்கிறார். அந்த வீடியோ வைரலாக, தன்னை சாதிப் பெயரைச் சொல்லி திட்டி துரத்தியதாக அப்பெண் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். இதன் காரணமாக, 20 தீட்சிதர்கள் மீது தடுத்தல், தாக்குதல் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலைச் சேர்ந்த தீட்சிதர் பேசிய வீடியோ ஒன்றை இந்து மக்கள் கட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.

Twitter link 

அந்த வீடியோவில், ” கோவிலில் தரிசிக்க வந்த பெண்மணியை அனைவரும் சேர்ந்து தாக்கியதாக மீடியாக்களில், சோசியல் மீடியாக்களில் அவதூறு பரவி வருகிறது. அதை ஒருபுறமாக வெளியிட்டு இருக்கிறார்கள். கடந்த வருடம், கோவிலில் தரிசிக்க வந்த பெண்ணை ஒரு தீட்சிதர் தாக்கியதாக வீடியோ ஒன்று வெளியானது. அதனால் கோவிலின் பெயரில் அவதூறு ஏற்பட்டது. அது தொடர்பாக நாங்கள் பிரஸ் மீட் கொடுத்தோம், தவறு செய்த அந்த தீட்சிதரை இரண்டு மாதம் சஸ்பெண்ட் செய்து இருந்தோம்.

சஸ்பெண்ட் முடிந்து மீண்டும் கோவில் உள்ளே வந்த அவர் அதன் எதிர்ப்பாக, காழ்ப்புணர்ச்சி காரணமாக கோவிலின் மேலே ஏற முயற்சித்தார். கொரோனா காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களில் மக்கள் நின்று தரிசிக்காத வண்ணம் தொடர்ந்து சென்று கொண்டு இருக்குமாறு அமைப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்.

அதுபோல், இன்றும் கனகசபை மேல் ஏறாமல் கீழே நின்று தரிசனம் செய்து செல்லும் வகையில் அமைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். அதை எதிர்க்கும் வகையில், அவர் ஒரு பெண்மணியை மேலே அழைத்து சென்று கருவறைக்குள் செல்ல முயற்சித்தார். ஆகவே, அவரை இன்றும் பணியிடை நீக்கம் செய்துள்ளோம். இதை மாற்றி அந்த பெண்மணியை தாக்கியதாக வீடியோ வெளியிட்டு உள்ளார் ” எனப் பேசி இருந்தார்.

கணேஷ் தீட்சிதர் மகன் தர்சன் தீட்சிதர், ” நடராஜர் கோவிலின் சிற்றம்பல மேடை மீது யாரும் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். அது தவறானது. சிற்றம்பல மேடையின் மீது ஏறி அனைவரும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் ” என தெரிவித்து இருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் பக்தையை தீட்சிதர் ஒருவர் அறைந்த சம்பவத்தின் போதே கண்டனங்கள், எதிர்ப்புகள் எழுந்தன. தற்போது சிதம்பரம் நடராஜர் கோவிலின் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button