குழந்தையின் நாக்கிற்கு பதிலாக அந்தரங்க உறுப்பில் சிகிச்சையா ? மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் விளக்கம்

துரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக குழந்தையின் சிறுநீரக உறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக குழந்தையின் தந்தை போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விரிவான விளக்கத்தை ராஜாஜி அரசு மருத்துவமனை வெளியிட்டு இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த அஜித் குமார் என்பவருக்கு கடந்த ஆண்டு பிறந்த கவின் என்ற குழந்தைக்கு நாக்கில் நீர்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும், ஓராண்டு கழித்து மறுபரிசோதனை செய்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் மருத்துவர்கள் கூறியதால் கடந்த 21ம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு மீண்டும் குழந்தையை கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

அப்போது குழந்தைக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை நாக்கிற்கு பதிலாக சிறுநீரகத்தில் செய்துவிட்டதாக குழந்தையின் தந்தை புகார் அளித்து இருந்தார். இச்செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதுகுறித்து, குழந்தையின் தந்தை போலீசில் அளித்த புகாரில், ” என்னுடைய மகனுக்கு நாக்குப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக சிறுநீரகப் பகுதியில் அறுவை சிகிச்சையினை செய்துள்ளனர். இதுப்பற்றி மருத்துவர்களிடம் கேட்ட போது, மீண்டும் என் மகனை அழைத்துச் சென்று நாக்குப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்தனர். எனவே சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனக் கூறி இருந்தார்.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் அளித்த விளக்க அறிக்கையில், ” குழந்தை பிறந்த போதே மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, நாக்கில் நீர்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் 2021 நவம்பர் 2ம் தேதி குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஓராண்டிற்கு பிறகு மீண்டும் அறுவை சிகிச்சைக்காக குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 2022ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பிறகு குழந்தையின் சிறுநீர்ப்பை விரிவடைந்து இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, மற்றொரு மயக்க மருந்தை கொடுக்காமல் ஒரே நேரத்தில் நாக்கு மற்றும் சிறுநீரகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை நலமுடன் உள்ளார். உணவு எடுத்துக் கொள்வதும், சிறுநீர் வெளியேற்றுவதும் வழக்கமாக உள்ளது ” எனத் தெரிவித்து உள்ளனர்.

நாக்கில் நீர்க்கட்டி உள்ள குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்ட போது, குழந்தைக்கு சிறுநீரகத்திலும் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு ஒரே நேரத்தில் இரு அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் செய்துள்ளனர்.

Please complete the required fields.




Back to top button
loader