சீனா செயற்கை சூரியனை உருவாக்கி “ஆன்” செய்து பார்த்ததா ?

கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் சீனாவின் வுஹான் பகுதியில் கண்டறியப்பட்டதால் சீனாவில் புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது புதிய கண்டுபிடிப்பு நிகழ்ந்தலோ உலக செய்திகளும், உள்ளூர் மீம்ஸ்களும் பறக்க விடப்படும். தற்போது, சீனா செயற்கை சூரியனை உருவாக்கி அதனை சோதனை செய்து பார்த்ததாக மீம்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

நமது பூமியை ஒப்பிடும் போது சூரியன் மிகவும் பிரம்மாண்டமானது. இரு ஹைட்ரஜன் அணுக்கள் இணைவதன் மூலம் மிகப்பெரிய அளவிலான ஆற்றலை உற்பத்தி செய்யும் நிகழ்வே அணுக்கரு இணைவு. இச்செயலால் சூரியனில் இருந்து பல பில்லியன் ஆண்டுகளாக ஒளியும், வெப்பமும் ஒரே நேரத்தில் வெளியேறுகிறது.

இத்தகைய அணுக்கரு இணைவை செயற்கையாக பூமியில் உலை மூலம் சீனா மேற்கொண்டு வருவதாகவும், இதை “செயற்கை சூரியன்”  எனுப் பெயரிட்டு சர்வதேச ஊடகங்களில் செய்திகளில் வெளியாகின.

இதற்காக உருவாக்கப்பட்ட HL-2M Tokamak ஆனது சீனாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட அணுக்கரு இணைவு சோதனை ஆராய்ச்சி சாதனமாகும். இது அதிகாரப்பூர்வமாக ” EAST அல்லது Experimental Advanced Superconducting Tokamak ” என அழைக்கப்படுகிறது.

சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்சியஸ். சீனா உருவாக்கி வரும் HL-2M வெப்பநிலை 150 மில்லியன் டிகிரி செல்சியஸ் அடையக்கூடியது என்றும், இயற்கையான சூரியனின் வெப்பத்தை விட தோராயமாக 10 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதனுடன் காந்தமும், சூப்பர் கூலிங் தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டு உள்ளன.

Advertisement

” அணுக்கரு இணைவு ஆற்றலின் வளர்ச்சி என்பது சீனாவின் மூலோபாய எரிசக்தி தேவைகளை தீர்ப்பதற்கான வழிமட்டுமல்ல, சீனாவின் ஆற்றல் மற்றும் தேசிய பொருளாதாரத்தின் எதிர்கால நிலையான வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது ” என அந்நாட்டின் அரசு நடந்து People Daily தெரிவித்து உள்ளது.

செயற்கை சூரியனை சீனா உருவாக்கி வருவதாக வெளியான செய்திகளுக்கு சவுத் சீனா மார்னிங் போஸ்ட் எனும் சீன செய்தி நிறுவனம் ” இது தவறான பெயரிடல், எனினும் இது இணைவு ஆற்றல் நம்பிக்கைகளுக்கு முக்கியமானது ” என செய்தி வெளியிட்டு இருந்தது.

அதில், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் ஊடகங்களால் சீனாவின் புதிய அணுசக்தி இணைவு ஆராய்ச்சி சாதனமான HL-2M Tokamak ” செயற்கை சூரியனின் எழுச்சி ” எனப் பாராட்டப்பட்டது, அது அப்படி இல்லை. 4.6 பில்லியன் ஆண்டுகளாக சூரியன் சீராக எரிந்து கொண்டு இருக்கிறது. HL-2M Tokamak சோதனை சில வினாடிகள் மட்டுமே நீடித்தது (சரியாக எத்தனை என எங்களுக்குத் தெரியவில்லை) எனக் குறிப்பிட்டு உள்ளது.

மேலும் படிக்க : செயற்கை நிலாவை உருவாக்கும் சீனா..!

இதற்கு முன்பாக , ” Illuminating satellite ” எனும் ஒளிப்பாய்ச்சும் செயற்கைகோளை சீனாவின் செங்க்டு நகரில் 2020-ல் முதற்கட்டமாக சோதனை செய்து பார்க்க உள்ளதாக சீன ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருந்தன. சீனாவின் ஒளிப்பாய்ச்சும் செயற்கைகோள் வானில் உள்ள நிலாவை விட 8 மடங்கு அதிக ஒளியை நகரில் அளிக்கும் எனக் கூறி இருந்தனர்.

1960 முதல் 1990கள் வரை உலகம் முழுவதும் ஏராளமான இணைவு ஆராய்ச்சி வசதிகள் கட்டப்பட்டன. உலகின் மிகப்பெரிய இணைவு சோதனையான தெற்கு பிரான்சில் உள்ள ITER திட்டம் கடுமையான தாமதங்களை சந்தித்துள்ளது மற்றும் எப்போது முடியும் என்கிற தேதியின்றி உள்ளது. HL-2M Tokamak உதவியுடன் 2050-க்குள் வர்த்தக ரீதியாக இணைவு ஆற்றலை உற்பத்தி செய்யும் இலக்கை சீனா அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

Links : 

China’s ‘artificial sun’: misleadingly named but key to fusion energy hopes

China turns on ‘artificial sun’

China successfully activates nuclear-powered ‘artificial sun’

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button