அச்சுறுத்தலை உண்டாக்கிய சீனாவின் கொரோனா வைரஸ் !

சீன தேசத்தில் பலரின் உயிரைப் பறித்து வரும் கொரோனா வைரஸ் (Corono virus) உலக நாடுகளில் அச்சுறுத்தலை உண்டாக்கி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் சீனாவின் ஹூபே மாகாணப் பகுதியில் மட்டும் 15 பேர் இறந்து உள்ளதாகவும், சீனா முழுவதும் 41 பேர் இறந்துள்ளதாகவும் சீன சுகாதார அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200-ஐ தாண்டி செல்வதாக உறுதி செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் :

Advertisement

இந்த வைரஸிற்கு உலக சுகாதார மையம் 2019 நோவல் கொரோனா வைரஸ் (2019-nCoV) எனப் பெயரிட்டுள்ளது. 2019-nCoV வைரஸ் சீனாவில் பரவி உயிர் பாதிப்பை ஏற்படுத்தி வருவதோடு வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

2019-nCoV வைரஸ் முதலில் மனிதனின் நுரையீரலை தாக்கி நிமோனியாக் காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த வைரஸ் குடும்பத்தில் 6 வகை மட்டுமே மனிதர்களை பாதிக்கக்கூடியதாக இருந்து வந்தன. தற்பொழுது அதன் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

எங்கிருந்து பரவியது ? 

சீனாவின் வுகான் மாவட்டத்தில் உள்ள கடல் உயிரினங்களின் விற்பனை சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த சந்தையில் கடல் உயிரினங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, வாத்து, கோழி, ஆடு, பன்றி, எலி, பாம்பு உள்ளிட்ட ஊர்வன உயிரினங்கள் உயிருடன் உணவுக்காக விற்பனை செய்யப்படுகிறது.

அறிகுறி மற்றும் சிகிச்சை :

Advertisement

கொரோனா வைரஸ் சாதாரண வைரஸ் போன்று மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக நீடித்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். தும்மல், இரும்ல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கலாம்.

புதியவகை வைரஸ் என்பதால், அதைத் தடுப்பதற்கு இப்போதைக்கு ஊசியோ, சிகிச்சையோ இல்லை. அதற்கான முயற்சியிலும், ஆராய்ச்சியிலும் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் இறங்கி உள்ளனர். இந்த வைரசால் உறுப்புகள் செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்காகவே சீனா 1000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையை 6 நாட்களில் தயார் செய்யும் செயலில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

இந்தியாவில் பாதிப்பா ? 

சீனாவில் இருந்து வேகமாக பரவும் கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் பரவி விடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. கொரோனா வைரஸ் பற்றிய செய்தி வெளியாகிய பிறகு சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளை பரிசோதனை செய்து அனுப்ப மத்திய அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருவேளை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி சோதனை மையம் மற்றும் அறைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் தனியறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Support with

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close