இந்தியாவிற்கு மீண்டும் லாக்டவுன் ? சீனாவில் என்னதான் நடக்கிறது ?

2019ல் தொடங்கிய கோவிட் பெருந்தொற்று கட்டுக்குள் வந்தது என்று பல நாடுகள் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தி, சர்வதேச சுற்றுலாவிற்காக எல்லைகளை திறந்து விடத் தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் BA.5 ஓமிக்கிரான் வகையின் உள்வகையான (subvariant) BF.7 பரவத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் சீனாவில் தற்போது நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் எண்ணற்ற மரணங்கள் நிகழ்வதாகவும் செய்திகள் வரத்தொடங்கியுள்ளன. என்ன தான் நடக்கின்றது சீனாவில்? BF.7 உள்வகை சீனாவில் இருந்துதான் உருவானதா? உலகநாடுகள் மீண்டும் கண்டிப்பான கட்டுப்பாட்டு விதிகளை கொண்டு வரத் துவங்கியுள்ளன. BF.7 அத்தனை ஆபத்தானதா ?

சீனாவில் ஏன் மீண்டும் கொரோனா ?

2019 இறுதியில் சீனா புத்தாண்டு கொண்டாடியதன் பின் முதல் முதலாக வூஹான் நகரில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. பின் சீனாவுக்கு வெளியே இதர நாடுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை 13 மடங்கு உயர்ந்ததையடுத்து 2020 மார்ச் மாதம், உலக சுகாதார மையம் கோவிட்-19 நோயை உலகளாவிய பெருந்தொற்றாய் அறிவித்தது (1). அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் லாக் டவுன், மருத்துவமனைகளை ஆயத்தப்படுத்துதல், “tracking, testing, treating” போன்ற அணுகுமுறைகளின் மூலம் நோயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் சீனாவோ கொரோனா வைரஸை முற்றிலுமாக நீக்கும் பொருட்டு Zero COVID policy எனும் கடுமையான கட்டுப்பாட்டு முறையினை அமல்படுத்தியது.

Zero COVID policy மூலம் கடுமையான லாக் டவுன், சமூக தனிமைப்படுத்துதலோடு மனித உரிமை மீறல் செயல்களிலும் சீன அரசு ஈடுபட்டது. பல நேரங்களில் பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்த நபர்களும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு (quarantine facilities)  அழைத்துச் செல்லப்பட்டனர், குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டனர். மேலும் நகரில் ஒரு சிலருக்கே நோய் தொற்று கண்டறியப்பட்டாலும் ஒட்டுமொத்த நகரத்திற்குமே லாக் டவுன் அறிவுறுத்தப்பட்டது.

பின் தடுப்பூசிகள் பரவலாக மக்களைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வந்த நிலையிலும் சீனா தனது Zero COVID policyயை கடந்த மூன்று ஆண்டுகளாக தளர்த்தவே இல்லை (2, 3).  அதனைத் தொடர்ந்து நெடுநாட்களாக அரசின் இரும்புக்கரத்திற்குள் இருந்த மக்கள் இது நாள் வரையில் Zero COVID policy-ல் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர் (4).

சீன அரசின் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீன மக்களின் நாடு தழுவிய போராட்டம் (5)

இந்நிலையில், இந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் தனது கட்டுப்பாட்டை தளர்த்துவதாக சீன அரசு அறிவித்தது. கோவிட் பரிசோதனை மற்றும் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன், முதல் முறையாக லேசான அறிகுறி உள்ள நோயாளிகள் தனிமை மையங்களில் இல்லாமல் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது சீன அரசு. இவ்வாறு திடீரென கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது நோய் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், வரும் நாட்களில் சீனாவில் லட்சக்கணக்கானோர் நோயினால் பாதிக்கப்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்திருந்தனர் (6).

முதியவர்களுக்கான தடுப்பூசி booster தவணை முறையாக கிடைக்கப்படாமல் இருக்கும் நிலையில், மூன்று ஆண்டுகளாக மக்களிடம் கோவிட்க்கு எதிராக herd immunity உருவாகாத நிலையில் சீனா இப்போது கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கினால், 160 மில்லியனிலிருந்து 280 மில்லியன் மக்கள் ஓமிகிரானால் பாதிக்கப்படலாம் என்றும், 1.3 மில்லியன் முதல்  2.1 மில்லியன் வரை மரணங்கள் நிகழலாம் என்றும் மாதிரி கணிப்புகள் (modelling prediction) தெரிவித்தன. இவற்றில் பெரும்பாலானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத முதியோர்களாய் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது (7). இதனை பெரிதாக கண்டுகொள்ளாத சீன அரசு எந்த வித இடைநிலைமாற்றம் (transition stage) இல்லாமல் நேரடியாக தனது zero COVID policyயை தளர்த்தியது.

முன்னேற்பாடு இல்லாமை, மக்கள் போராட்டத்திற்காக ஒரே இடத்தில் ஒன்றிணைதல், போன்ற காரணங்களினால் புதிதாக உருவான BF.7 சீன மக்களிடையே மிக வேகமாக பரவத் தொடங்கியது. ஆராய்ச்சியாளர்கள் கணித்தது போலவே தற்போது சீனா கோவிட்-19 மூன்றாம் அலையின் தாக்கத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. ஒரு நாளில் அதிகபட்சமாக 40,000 பேர் நோயினால் பாதிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் நிகழ்ந்த கோவிட் மரணங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் சீனாவின் National Health Commission (NHC) வெளியிடவில்லை. இதற்கிடையில் கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கையையும் வெளியிடுவதை நிறுத்துவதாக NHC அறிவித்தது (8).

கடந்த வாரம் உலக சுகாதார மையத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ரியான் “சீனாவில், ICUக்களில் ஒப்பீட்டளவில் குறைவான நோயாளிகளின் எண்ணிக்கையே பதிவு செய்யப்பட்டுள்ளது; எனினும் ICUக்கள் நிரம்பி வருகின்றன.” என்று கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து நாட்டின் கோவிட் நிலைமை குறித்த கூடுதல் தகவல்களை அலுவலக ரீதியாக வழங்குமாறு சீனாவை வலியுறுத்தினார் (9). சமூக வலைத்தளங்களில் சீனாவில் நிரம்பி வழியும் இடுகாடுகள், தீவிர சிகிச்சை பிரிவுகளை காட்டும் மனதை உலுக்கும் காணொளிகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் அலுவலக ரீதியான தரவுகள் கிடைக்காத பட்சத்தில் நோயின் தீவிரத்தை தீர்மானிப்பது சிக்கலானது. உலக நாடுகளுக்கும் தரவுகளின்மை நோயின் பரவும் தன்மையை கணிக்க இடையூறாய் அமையும்.

 

Data from https://ourworldindata.org/coronavirus (10)

மேலும் சீன மக்களுக்கு ஒருபக்கம் அரசியல் ரீதியான தீவிர கட்டுப்பாடுகள், பொருளாதார நெருக்கடி, மறுபக்கம் SARS-CoV2 வைரஸின் முதல் அலை சீனாவில் இருந்து பரவியதால் பல்வேறு நாடுகளில்  இனவெறி தாக்குதல்கள். இத்தகைய சூழ்நிலையில் தற்போது BF.7 உள்வகை தொற்றும் சீனாவில் இருந்துதான் உருவாகியது என்பது போன்ற செய்திகள் வரத்தொடங்கியுள்ளன (11, 12). ஒரு நாட்டினை மட்டும் நோய் பரவுவதற்கான காரணம்  போன்ற பிம்பத்தினை உருவாக்குவது அரசியல் ரீதியாகவும் நோயின் தாக்கத்தாலும் அவதியுறும் அந்நாட்டு மக்களுக்கே மேலும் நெருக்கடியைக் கொடுக்கும்.

BF.7  சீனாவில் இருந்து தான் உருவாகியதா ?

சீனாவில் BF.7 உள்வகையினால் உண்டான கோவிட் மூன்றாம் அலை  இந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தான் அதிகமாகத் தொடங்கியது. ஆனால் BF.7  உள்வகை என்றிலிருந்து தொடங்கியது என்று பார்க்கும்போது 2022ன் ஆரம்பத்திலேயே ஏறத்தாழ ஜனவரி மாதமே உருவாகியுள்ளது. அதன் மரபணு தொகுப்பும் SARS-CoV2 மரபணு பிறழ்வுக்கான தரவுகளை கையாளும் COVIDCG databaseலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது (https://covidcg.org/?tab=report).

Data from COVIDCG

மேலும் BF.7 தொற்றின் எண்ணிக்கை மற்றும் பரவலை பார்க்கும் போது ஏறத்தாழ கடந்த ஜூன் மாதமே ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் BF.7 பரவத்தொடங்கியதை அறிய முடிகின்றது (https://nextstrain.org/ncov/open/global/6m).

நோய் பரவல் விகிதாச்சாரத்தின் தரவுகளின் அடிப்படையில் BF.7 சீனாவில் உருவாகவில்லை என்பதும் ஓமிக்கிரானின் பரவும் தன்மை அதிகமாக இருப்பதினால் உலகில் எங்கேனும் மரபணு திரிபு ஏற்பட்ட புது CoV2 உள்வகைகள் உருவாகிக்கொண்டிருப்பதை கட்டுப்படுத்த முடியாது என்பதுமே அறிவியல் உண்மை. தற்போதைய BF.7 உள்வகையும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பரவி வந்த வேளையில் சீனா தனது zero COVID policy தளர்த்தியது அந்நாட்டில் அதிகப்படியான நோய்த்தொற்று உருவாக காரணமாய் அமைந்ததே தவிர BF.7 சீனாவில் உருவாகவில்லை.

BF.7  ஆபத்தானதா ?

ஐரோப்பிய நாடுகள், சீனாவில் BF.7 வகையின் தொற்று அதிகமாகிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளன. அரசாங்கமும் மக்களும் அச்சம் கொள்ளும் அளவிற்கு BF.7 ஆபத்தானதா ? BF.7 குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன ?

கோவிட்டைப் பொருத்தவரையில் மரபணுத்திரிபின் மூலம் ஒரு புதுவகை வைரஸ் உருவானால் அந்த புதுவகை வைரஸ் பரவும் விகிதம், பரவும் வேகம், அதனால் ஏற்படும் நோயின் தீவிரம்,  முதலானவற்றை கொண்டு அந்த புது வைரஸ் வகை ஆபத்தான variant of concernஆ என்று வகைப்படுத்தப்படும்.

இதன் அடிப்படையில் BF.7 உள்வகை முதல் மற்றும் இரண்டாம் கோவிட் அலையில் பெரும் அழிவினை உண்டு பண்ணிய முறையே alpha மற்றும் delta வகைகளை விட மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது. சராசரியாக delta வகை ஒரு நபரிடமிருந்து 5 நபர்களுக்கு பரவும் என்றால் BF.7னின் பரவும் வேகம் ஒரு நபரிடமிருந்து 18 நபர்கள். இத்தகைய அதிவேக பரவும் தன்மையால் இன்னும் மூன்று மாதங்களில் சீனாவின் 60% மக்களும் உலகமக்கள் தொகையில் 10% மக்களும் கோவிட் நோய் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது (13).

பரவும் தன்மையும், பரவும் வேகமும் அதிகமாக இருப்பதினால், இந்தியாவை உலுக்கிய இரண்டாம் அலை போல் இந்த BF.7 தொற்றும் பெரும் அழிவையும் மரணங்களையும் கொண்டு வருமா என்று பார்த்தோமானால், இரண்டாம் அலைக்கு காரணமான delta வகை மனிதனின் கீழ் சுவாசப்பாதையை (lower respiratory tract) குறிப்பாக நுரையீரலை தாக்கும் தன்மை கொண்டது. ஆகையினால் டெல்டா வைரஸ் தாக்கும் போது நுரையீரலுக்கு அதிகப்படியான சேதம் நிகழ்ந்து ஆக்சிஜன் கடத்தமுடியாத நிலையில் மரணங்கள் நிகழ்ந்தன. ஒமிக்கிரான் மற்றும் அதன் உள்வகைகளை பொருத்தவரையில் ஒரு சிறு ஆறுதலான செய்தி என்னவென்றால் இந்த வைரஸ் மனிதர்களின் மேல் சுவாசப்பாதையையே (upper respiratory tract) பெரும்பாலும் தாக்கும் (14). இதனால் சராசரி நோய் எதிர்ப்பு சக்தியுள்ள நபரை BF.7 உள்வகை தாக்கும்போது காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற லேசான அறிகுறிகளே காணப்படும். எனவே தடுப்பூசி முறையே பெற்றுக்கொண்டு, தனிமனித கட்டுப்பாடுகளை பின்பற்றும் வரை பொதுமக்களுக்கு பாதிப்பு பெரிதாக ஏற்படாது.

மேலும் தடுப்பூசியின் மூலம் கிடைக்கப்பெற்ற நோய்யெதிர்ப்பு சக்தியும், கோவிட் நோயினால் பாதிக்கப்பட்டு பெறப்பட்ட herd immunityயும் சேர்ந்த hybrid immunity இந்தியர்களுக்கு அதிக அளவில் இருப்பதனால் BF.7 உள்வகையினால் தீவிரமான நோயை உருவாக்காது என்று நம்பப்படுகின்றது.

நோயின் தீவிரத்தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் மக்கள்:

பொதுமக்களிடத்தில் BF.7 உள்வகையின் நோய் தாக்கம் மரணம் வரை இட்டுச்செல்லாது என்றாலும் கீழே குறிப்பிட்டுள்ளவர்கள் நோயின் தீவிரத்தாக்குதலுக்கு ஆளாகலாம்.

 1. தடுப்பூசி போடாதவர்கள்
 2. வயதானோர்
 3. புற்றுநோய், கட்டுப்பாடற்ற நீரிழிவு, இதயம் அல்லது சிறுநீரக நோய்கள் போன்ற இதர நோய்களால் பாதிக்கப்பட்டோர்
 4. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள்

சீனாவில் BF.7ஆல் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட 2 மில்லியன் மரணங்களிலும் பெரும்பாலானோர் மேலே குறிப்பிடப்பட்ட வகையினர் தான் (6). எனவே தடுப்பூசிக்கெதிரான conspiracy, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான தயக்கம் முதலானவற்றை கைவிட்டு ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தடுப்பூசி மற்றும் booster தவணையினை  கிடைக்கச்செய்யும் போது தான் கோவிட்-19 நோய்த்தொற்றின் தீவிரத்தையும், மரணங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

இந்திய மற்றும் தமிழக அரசு BF.7ஐ கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள்

சீனாவில் லட்சக்கணக்கானோர் BF.7 தொற்றால் பாதிப்படைவதை தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கத் தொடங்கியுள்ளன. நோய் அண்டைநாடுகளில் தீவிரமடைவதைத் தொடர்ந்து இந்தியாவிலும் முதலாம் கட்ட நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 24ஆம் தேதி BF.7 பரவுவதைத் தடுக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அழைப்பு விடுத்தார் (15). மேலும் கோவிட் அலைகள் இன்னும் முடிவடையாத நிலையில் கோவிட் கட்டுப்பாடுகளை முறையே பின்பற்றவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் மக்களை வலியுறுத்தினார் (16).

மேலும் ஒன்றிய அரசால்,

 1. நாடு முழுவதும் மருத்துவமனைகளை தயார்நிலையில் வைத்திருப்பதற்கான மாதிரிப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன (17).
 2. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு RT-PCR test கட்டாயம் என்ற விதி தளர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது (18).
 3. அனைத்து பயணிகளுக்கும் கட்டாய உடல்வெப்பநிலை சோதனையும்; 2% பயணிகளுக்கு random sampling முறையில் கோவிட் பரிசோதனையும் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது (18).
 4. பொது மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது (18).

தமிழக அரசும் நோய்க்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கியுள்ளது.             டிசம்பர் 22 அன்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மாநிலத்திற்குள் BF.7னின் தாக்கத்தினை கட்டுக்குள் வைத்திருப்பது குறித்த வழிகளை விவாதித்தார்.

தமிழகத்தில் ஜூன், ஜூலை மாதங்களிலேயே BF.7னின் பரவல் இருந்ததால் மாநில சுகாதார அமைச்சகத்தால் ஏற்கனவே BF.7 உள்வகை கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும் மிக முக்கியமாக தமிழகத்தை பொருத்தவரையில் 97% மக்கள் முதல் தவணை தடுப்பூசியும், 92% மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும் பெற்றுள்ளனர் (19). ஆகையினால் BF.7னின் தீவிரம் தமிழகத்தைப் பெரிதும் அச்சுறுத்துவதாக இருக்காது .

மேலும் நேற்று (28.12.2022) நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மா. சுப்பிரமணியம் தமிழ் நாட்டில் மூன்று லட்சம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாகவும்; நோய் தீவிரமடையாத நிலையில் நிறைய கட்டுப்பாடுகள் விதித்தால் அது மக்களை அனாவசியமாக பீதிக்குள்ளாகும் என்பதால் தற்போது BF.7 உள்வகை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் நோய் தீவிரமடையும் நிலையில்  கட்டுப்பாடுகளை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.

இவற்றை தவிர்த்து முதியவர்களுக்கான  மூன்றாம்/நான்காம் தவணை தடுப்பூசிகளை கொண்டுசேர்த்தால், நோய் தாக்கத்தின் போக்கினை ஆராய்தல் மற்றும் வைரசிற்கு எதிரான மருந்துகளை தயார்நிலையில் வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் ஒன்றிய மற்றும் தமிழக அரசால் மிகச்சிறப்பான முறையில் BF.7 உள்வகையினை எந்த பாதிப்பும் ஏற்படாமல் கட்டுப்படுத்தமுடியும்.

நாம் செய்ய வேண்டியவை

நோயை கட்டுட்படுத்தும் பொறுப்பு முழுக்க முழுக்க அரசிற்கானது மட்டுமல்ல. அரசு வெற்றிகரமாக செயல்பட பொதுமக்களின் ஒத்துழைப்பும், விழிப்புணர்வும் மிக அவசியம். எனவே,

 1. தடுப்பூசி போட்டுக்கொள்வோம் – அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தவணைகளை போட்டுக்கொள்வதே நோய் பெருந்தொற்று காலங்களில் நாம் நாட்டிற்கு செய்யும் மிகப்பெரிய சேவை. நம் கைகளில் நம் ஆரோக்கியம் மட்டும் அல்ல நம்மை சார்ந்தோரின் ஆரோக்கியமும் உள்ளது என்பதை மனதில் கொண்டு சமூக அக்கறையோடு நடந்து கொள்வோம்.
 2. கோவிட் கட்டுப்பாடுகளை கடைபிடிப்போம் – தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்ற அடிப்படை கோவிட் கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்றுவோம்.
 3. வதந்திகளுக்கு NO NO – பொதுமக்களை பீதியடையச்செய்யும் வதந்திகளை உண்மைத்தன்மை அறியாமல் நம்புவதையோ, பகிர்வதையோ தவிர்ப்போம்.

தடுப்பூசியினாலும், தனிமனித கட்டுப்பாட்டினாலும் கோவிட் நோயிலிருந்து மீண்டு ஆரோக்கியமான சமுதாயத்திற்கான ஆண்டாக 2023 அமையும் என்று நம்பிக்கை கொள்வோமாக.

 • முனைவர்.தேவி (Genetics)

Reference

 1. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7569573/
 2. https://www.hindustantimes.com/ht-insight/public-health/what-is-china-s-zero-covid-policy-101656065706406.html
 3. https://abcnews.go.com/Health/chinas-zero-covid-policy-back-protests-erupt-country/story?id=94086617
 4. https://www.cfr.org/blog/did-chinas-street-protests-end-harsh-covid-policies
 5. https://time.com/6238800/china-protests-reveal-about-the-country/
 6. https://www.nature.com/articles/d41586-022-04382-0
 7. https://www.nature.com/articles/d41586-022-04235-w
 8. https://www.npr.org/2022/12/25/1145472905/china-stops-publishing-daily-covid-data
 9. https://www.firstpost.com/world/who-says-chinas-hospitals-filling-up-fast-worried-about-real-impact-of-covi-11853441.html
 10. https://ourworldindata.org/coronavirus
 11. https://news.abplive.com/explainers/understanding-omicron-bf-7-the-new-covid-19-variant-from-china-and-how-india-should-prepare-1571821
 12. https://economictimes.indiatimes.com/news/india/a-made-in-china-covid-concern-for-india/articleshow/96505488.cms
 13. https://www.businesstoday.in/coronavirus/story/covid-variant-bf7-spreading-like-wildfire-in-china-how-worried-should-you-be-357236-2022-12-21
 14. https://www.livemint.com/science/news/which-covid-variant-affects-your-upper-lower-respiratory-tract-and-how-severe-it-can-get-11648113096228.html
 15. https://economictimes.indiatimes.com/news/new-updates/covid-bf-7-preparedness-in-india-all-you-need-to-know/articleshow/96497955.cms?from=mdr
 16. https://economictimes.indiatimes.com/news/india/bf-7-covid-variant-pm-modi-chairs-high-level-review-meeting-amid-surge-in-cases-in-china/videoshow/96430130.cms
 17. https://www.indiatvnews.com/news/india/covid-19-bf-7-variant-live-updates-virus-mock-drill-at-hospitals-across-states-daily-coronavirus-cases-health-minister-mansukh-mandaviya-2022-12-27-834335
 18. https://www.cntraveller.in/story/india-covid-guidelines-latest-china-bf7-airport-testing-rules/
 19. https://www.business-standard.com/article/current-affairs/covid-19-tn-health-deptt-issues-alert-against-new-omicron-variant-bf-7-122122200584_1.html
Please complete the required fields.
Back to top button
loader