This article is from Jul 14, 2021

மகனை தேடி தனியொருவராக பயணித்த தந்தை.. 24 வருடம் கழித்து இணைந்த நெகிழ்ச்சியூட்டும் கதை !

1997 ஆம் ஆண்டு காணாமல் போன தன் இரண்டு வயது மகனை நம்பிக்கை தளராமல் 24 வருடங்களாக நாடு முழுவதும் தேடிக் கண்டுபிடித்துள்ளார் சீனாவை சேர்ந்த ஓர் தந்தை! அப்பாவும், மகனும் இணையும் தருணம் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிரப்பட்டு வருகிறது.

51 வயதான குவோ கேங்டாங் ஒரு விவசாயி ஆவார். 1997ல் அவரது மகனான குவோ சின்ஜென் தன்னுடைய 2 வயதில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது சாண்டோங் மாகாணத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரால் கடத்தப்பட்டார். இதனையடுத்து, 500க்கும் மேற்பட்டோரின் உதவியுடன், பஸ் நிலையம், இரயில் நிலையம் என தேடி அலைந்த பின்பும் எந்த ஒரு தடயமும் கிட்டமால் போனது.

ஆனால் குவோ மனம் தளரவில்லை, உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் தான் சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு மகனை தேடி தன் பயணத்தை தொடங்கினார்.

தேடி அலையும் மாகாணங்களில் எல்லாம் தன் வருகையையும், தன் மகனை பற்றிய விவரங்களையும் பதாகைகள், நோட்டீஸ்கள் மூலமாக பதிவு செய்த குவோ 2015 ஆம் சீனா சென்ட்ரல் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ” என் மகனை தேடி வெளியே சென்றால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. கடத்தல்காரன் என் மகனை எப்படியும் திருப்பி அனுப்ப மாட்டான். நான் வீட்டில் தங்கியிருந்தால், வாய்ப்பு இல்லை. ஆகவே, 1997 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து, என் மகனைத் தேட ஆரம்பித்தேன்.” என்றார்.

குவோ நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட மாகாணங்களுக்கு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த பயணத்தில் ஏற்பட்ட விபத்துக்களில் அவரது உடலில் பல்வேறு எலும்புகள் முறிந்துள்ளன, பல கொள்ளைக்காரர்களை எதிர் கொண்டுள்ளார். இதுவரை அவரது 10 வாகனங்கள் சேதமாகியுள்ளன.

தன் சேமிப்பு அனைத்தையும் எடுத்துக்கொண்டு தொடங்கிய இப்பயணத்தில், பல முறை பாலத்திற்கு அடியில் தன் இரவுகளை களித்துள்ளதாகவும், பிச்சை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

“மகனே! உன்னை வீட்டிற்க்கு அழைத்து செல்ல அப்பா வருவேன்” என பதாகையோடு நாடு முழுவதும் 5 லட்சம் கிலோமீட்டருக்கு மேல் சுற்றிய குவோ தன் மகனை போல கடத்தப்பட்ட பல்வேறு குழந்தைகளை சந்தித்ததாக கூறுகிறார்.

சீனாவில் உள்ள காணாமல் போன நபர்களின் அமைப்புகளில் ஒரு முக்கிய உறுப்பினரான இவர் குறைந்தது ஏழு குழந்தைகளை தங்களது பெற்றோருடன் மீண்டும் ஒன்றிணைய உதவியுள்ளார்.

இவரின் இந்த தேடல் சீனாவில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அந்நாட்டின் முன்னணி நடிகர் ஒருவரின் நடிப்பில் படமாகவே வெளியாகியுள்ளது.

24 வருடங்கள் கழித்து மகனை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சகம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டது. அதில் டி.என்.ஏ தடமறியலைப் பயன்படுத்தி கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சந்தேகத்துக்கு உட்பட்ட இரண்டு நபர்கள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

1997 காலங்களில் டேட்டிங் செய்து வந்த அந்த இரு சந்தேக நபர்கள், ஒரு குழந்தையை பணத்திற்காக விற்கும் நோக்கத்துடன் கடத்த திட்டமிட்டனர் என்று சீனா நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவோவின் மகன் தனது வீட்டிற்கு வெளியே தனியாக விளையாடுவதைக் கண்டபின், டாங்க் எனும் குடும்பப்பெயரால் அறியப்படும் பெண் ஒருவர் குழந்தையை கடத்தி பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார், அங்கு அவரது மற்றொரு கூட்டாளியான ஹு காத்திருந்தார்

பின்னர் தம்பதியினர் குழந்தையை அண்டை மாகாணமான ஹெனனுக்கு
இன்டர்சிட்டி ட்ரெயின் அழைத்துச் சென்று குழந்தையை அங்கே விற்றுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சின் குற்றவியல் விசாரணை பணியகத்தின் துணை இயக்குனர் டோங் பிஷன், ஹெனானில் உள்ளவர்களிடமிருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு , பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்திருப்பதாக கூறியுள்ளார்.

24 வருட இடைவிடாத தேடலுக்கு பிறகு குவோவும் அவரது மனைவியும் ஷான்டோங்கில் உள்ள லியோசெங்கில் தங்கள் மகனுடன் மீண்டும் இணைந்தபோது காட்டி அணைத்து அழுத காணொளி பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது.

Links :

After scouring China for 24 years on a motorbike, a determined father is reunited with his abducted son

Man in China reunited with son snatched 24 years ago

Please complete the required fields.
Back to top button
loader