தொடர் சர்ச்சை கருத்தால் உச்ச நீதிமன்ற நீதிபதி போப்டேவுக்கு எதிராக எழும் குரல்கள் !

பாலியல் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய தயாரா எனக் குற்றவாளியிடம் கேட்டதற்கும், திருமண உறவில் கணவரின் பாலியல் வன்புணர்வை நியாயப்படுத்தி பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவிற்கு எதிராக பெண்கள் இயக்கங்களின் பிரதிநிதிகள், முற்போக்கு அமைப்பினர், பொதுமக்கள் என 3,500க்கும் மேற்பட்டவர்கள் பகிரங்க கடிதத்தை அனுப்பி உள்ளனர். எஸ்.ஏ.போப்டேவை பதவியில் இருந்து விலகுமாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மின்சார உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மோகித் சுபாஷ் சவான் மீது பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த சிறுமியை பலமுறை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கியதாக போக்சோ சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மோகித் தரப்பில் ஜாமீன் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதி எஸ்.ஏ.போப்டே, ” நீங்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய பெண்ணை திருமணம் செய்ய தயாரா ? அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும். இல்லையென்றால், உங்கள் அரசு வேலையை இழந்து சிறைக்குச் செல்ல நேரிடும். நாங்கள் உங்களை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் விரும்பினால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் ” எனக் கூறியுள்ளார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட மோகித் 4 வாரங்கள் வரை கைது செய்யப்பட மாட்டார் என்றும், அதற்குள் ஜாமீன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது.
வழக்கு : 2014-15ல் அந்த சிறுமி 9ம் வகுப்பு படிக்கும் போது தொடங்கி 12ம் வகுப்பு வரை தூரத்து உறவினரான மோகித் சுபாஷ் சவானால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். 2018-ல் அப்பெண் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இருப்பினரும், இருதரப்பினரின் பெற்றோரும் பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி ஆன பிறகு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக முடிவெடுத்தனர். ஆனால், அந்த பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி ஆன பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதன் பிறகு 2019 டிசம்பரில் மோகித் மீது அப்பெண் வழக்கு பதிவு செய்துள்ளார்.
அடுத்ததாக, வினய் பிரதாப் சிங் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக உறவில் இருந்த தன் துணையை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். வினய் பிரதாப் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ததாக 2019ம் ஆண்டில் ஒரு பெண் புகார் தெரிவித்து இருக்கிறார்.
இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது நீதிபதி எஸ்.ஏ.போப்டே, ” திருமணம் செய்வதாக போலி வாக்குறுதி அளிப்பது தவறானது. ஆணோ பெண்ணோ யாரும் போலியான வாக்குறுதியை அளிக்கக்கூடாது. பெண்கள் கூட வாக்குறுதிகளை கொடுக்கக் கூடாது. இரண்டு பேர் கணவன் மனைவியாக ஒன்றாக வாழும்போது, கணவன் மிருகத்தனமாக இருக்கலாம் மற்றும் பல தவறுகளைச் செய்யலாம்(ஆனால்) அவர்களுக்கு இடையேயான உடலுறவின் செயலை பாலியல் வன்புணர்வு என்று அழைக்க முடியுமா ?” எனக் கேள்வி கேட்டு இருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு கைது செய்வதற்கு எதிராக 8 வார கால பாதுகாப்பு அளிப்பதாக இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறி இருக்கிறார்.
நீதிமன்றத்தில் இவ்வாறான தொடர் சர்ச்சை கருத்துக்களை பேசிய நீதிபதி எஸ்.ஏ.போப்டேவிற்கு எதிரான கண்டனக் குரல் எழுந்து வருகிறது. அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தன்னுடைய பேச்சிற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் பெண்கள் ஆர்வலர்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.
Links :
false-promise-of-marriage-wrong-but-top-court-on-partners-alleged-rape
will-you-marry-her-supreme-court-asks-man-charged-rape-minor-girl
Call for Chief Justice of India to step down over offer to rapist
CJI S.A. Bobde Must Step Down for Asking Rape Accused to Marry Victim: Open Letter