This article is from Sep 01, 2019

முதல்வர் பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணம் – அரசுக்கா ? அரசியலுக்கா ?

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு வாழ் தமிழர்கள், பிற முதலீட்டாளர்களிடம் இருந்து தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

வெள்ளை வேட்டி, சட்டையில் வலம் வந்த முதல்வரை வெளிநாட்டில் கோட், ஷூட்டில் பார்த்தது தமிழக ஊடகங்களில் பேசும் பொருளாக மாறி சமூக வலைதளங்களிலும் வைரலாகினார் முதல்வர் பழனிச்சாமி. இந்நிலையில், முதல்வர் பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் குறித்து குற்றச்சாட்டு தெரிவிக்கும் மீம் பதிவு ஒன்றை காண நேரிட்டது.

அதில், லண்டனில் காற்றாலை மின் உற்பத்தியை பார்வையிட்ட முதல்வர் என ஊடகத்தில் வெளியான செய்திக்கு கீழே, ” காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு மின்வாரியம் ரூ.1000 கோடி பாக்கி: வங்கிக்கு கடனை கட்ட முடியாமல் அவதி ” என செய்தி ஒன்று இடம்பெற்று இருக்கிறது. மேலும், தேர்தலுக்கு வியூகங்களை வகுத்து தரும் பிரசாந்த் கிஷோர் குறித்தும் குறிப்பிட்டு இருந்தனர். இதனை விரிவாக அறிந்து கொள்ள செய்திகள் குறித்து தேடிப்பார்த்தோம்.

காற்றாலை மின் உற்பத்தியை பார்வையிட்ட முதல்வர் :

ஆகஸ்ட் 31-ம் தேதி லண்டன் நகரில் இருந்து இரண்டு மணி நேரம் தொலைவில் உள்ள சஃபோல்க் நகரத்தில் ஐ.பி.ஸ்விட்ச் மற்றும் ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் பெறும் முறையை முதல்வர் பார்வையிட்டதோடு, அந்த தொழில்நுட்பத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பான சாத்தியங்கள் குறித்தும் பயணம் மேற்கொண்டதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பாக முதல்வரின் பயணத்தில் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவ கல்லூரிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக கொண்டு வரும் சேவையையும் பார்வையிட்டுள்ளார். அதன்பின் முதல்வர் பழனிச்சாமி பேசுகையில், ” லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் சார்பில் அவர்களின் கிளையை தமிழகத்தில் அமைக்க இருப்பதாகவும், தமிழகத்தில் நோயாளிகளை அம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லும் சேவையையும் ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதனை நிச்சயம் அரசு செய்து தரும் ” எனத் தெரிவித்து இருந்தார்.

இதுவரை முதல்வரின் பயணத்தில் சுகாதாரத்துறை சார்பில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், ஒப்பந்தங்களின் மதிப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மின்வாரியத்தின் பாக்கி :

தமிழகத்தில் காற்றாலை நிறுவனங்களுக்கு தமிழக மின்வாரியம் ரூ1000 கோடி பாக்கி வைத்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தனர். அது தொடர்பான செய்திகளில் தேடிய பொழுது சமீபத்தில் 2019 ஜனவரி மாத செய்தியில், ” தமிழகம் முழுவதும் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு 1,000 கோடி அளவிற்கு மின்வாரியம் பாக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது ” என வெளியாகி உள்ளது.

காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் சொந்த தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை தமிழக மின்வாரியத்திற்கு ஒரு யூனிட் ரூ2.70 முதல் ரூ4.16 வரை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. எனினும், பிற மாநிலங்களில் காற்றாலை மின்சாரத்தின் விற்பனை விலை அதிகமாகவே இருக்கிறது.

காற்றாலை நிறுவனங்களுக்கு உரிய தொகையை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுவது இன்று இல்லை கடந்த 2010-ம் ஆண்டில் இருந்தே செய்திகளில் வெளியாகி இருக்கிறது. சில ஆண்டுகளாக தமிழக மின்வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருவதே அதற்கு காரணமாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் போக்குவரத்துத்துறை, மின்வாரியம் என பல துறைகளில் நிதிப்பற்றாக்குறை, வருமானமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இந்திய அளவில் பிற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது வளர்ந்த மாநிலமாக தமிழகம் கருதப்பட்டாலும் அதீத கடன் சுமையில் மூழ்கி இருப்பதை மறுக்க இயலாது.

மாநிலத்தை ஆளும் அரசியல் கட்சி தலைவர்கள் யாராக இருந்தாலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தங்களின் வெற்றி பற்றியே சிந்திக்கின்றனர். யார் ஆட்சியில் அமர்ந்தாலும் மாநிலத்தின் கடன் சுமையை குறைக்க முயல்வதில்லை. ஏனெனில், அன்றாட மாநில செலவுகளுக்கே நிதிப்பற்றாக்குறை இருக்கிறது. இதனாலே மாநிலத்தின் கடனும் பல லட்சம் கோடியை கடந்து செல்கிறது. ஆகையால், சித்தரிப்புகளின் மீது கவனம் செலுத்தாமல், அரசியலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும் !

Links : 

Pay dues or no power, discoms told

காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு மின்வாரியம் ரூ.1,000 கோடி பாக்கி: வங்கிக்கு கடனை கட்ட முடியாமல் அவதி

https://www.youtube.com/watch?v=NiZnArvjZLA

Who’ll pay the piper? Tamil Nadu debt to hit Rs 4 lakh crore

Please complete the required fields.
Back to top button
loader